You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜேம்ஸ் பாண்ட் நடிகர் சர் ஷான் கானரி 90 வயதில் மரணம்
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.
மிகவும் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஷான் கானரி உயிரிழந்ததாக அவரது குடும்பம் அறிவித்துள்ளது.
அவருக்கு வயது 90.
பஹாமசில் இருந்தபோது, இரவு நேர தூக்கத்தில் அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்தார்.
பல திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்காட்லாந்தை சேர்ந்த நடிகரான ஷான், ஆஸ்கர் விருது, இரண்டு பாஃப்தா விருதுகள், மற்றும் மூன்று கோல்டன் கிளோப் விருதுகளை பெற்றிருக்கிறார்.
தி ஹண்ட் ஃபார் ரெட் அக்டோபர், இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி லாஸ்ட் க்ருசேட் மற்றும் தி ராக் ஆகியவை ஷான் கானரி நடித்த சில பிரபலமான திரைப்படங்கள் ஆகும்.
"பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்" - பிரதமர் மோதி
சர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரதமர் மோதி.
இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோதி, முன்னதாக பட்டேல் சிலைக்கு மலர் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் உரையாற்றிய பிரதமர் மோதி, "உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் யாருக்கும் பலனில்லை. இந்தியா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடியுள்ளது." என தெரிவித்துள்ளார்.
"புல்வாமா தாக்குதலின்போது பாதுகாப்புப்படையினர் செய்த தியாகத்தை பற்றி வருத்தப்படாமல் சிலர் அரசியல் செய்தனர். எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதை தேசத்தின் நன்மையை கருதி தவிர்த்திட வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
"காஷ்மீர் இன்று வளர்ச்சிக்கான புதிய பாதையில் பயணிக்கிறது. வடகிழக்கில் மீண்டும் அமைதியை கொண்டு வருவதில் ஆகட்டும், அல்லது அங்கே வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகட்டும் ஒற்றுமைக்கான புதிய பரிமாணங்களை நாடு நிலைநாட்டியுள்ளது." என்று தெரிவித்தார் பிரதமர் மோதி.
இதைத்தொடர்ந்து, இந்த பகுதியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் சபர்மதி ஆற்றங்கரையில் இருந்து கெவாடியா வரை நீர்வழி விமான சேவையை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.
பிரான்ஸ் குறித்து இம்ரான் கான் கருத்து
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், பிரான்ஸில் இஸ்லாத்திற்கு எதிரான விரோதப் போக்கு நிலவுவதாக கூறி, அந்த நாட்டிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர் பாகிஸ்தான், வங்கதேசம், லெபனான் மற்றும் பல்வேறு நாடுகளில் பிரான்ஸுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன.
இதில் பங்கேற்றவர்கள் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்குமாறு வலியுறுத்தியதுடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்குக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த நிலையில் இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள் மற்றும் முகமது நபிகள் குறித்த புரிதல் இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும், கருத்துச் சுதந்திரத்துக்கும் ஒரு எல்லை உண்டு என்று கூறியுள்ள அவர், அது மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க: "மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம், நபிகள் பற்றிய புரிதல் இல்லை" - இம்ரான் கான்
பிற செய்திகள்:
- தைவான் ராணுவ மாஸ் திருமணத்தில் இணைந்த லெஸ்பியன் ஜோடிகள் - சுவாரஸ்யமான தகவல்கள்
- சிறப்பாக ஆட்சி செய்யும் மாநிலங்களில் தமிழகத்துக்கு 2ஆம் இடம்
- துருக்கி, கிரீஸில் நிலநடுக்கம் - கடலோர நகரங்களில் வெள்ளம் - பலர் உயிரிழப்பு
- 7.5 சதவீத ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல் அளித்த சட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்த அளவுக்கு உதவும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: