புதுச்சேரி அவலம்: அடிப்படை வசதிகளின்றி பல தலைமுறைகளாக வாழும் சமூகம்

    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

புதுச்சேரியில் சுமார் 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் வசித்து வருகின்றனர்.

குறிப்பாக, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2016ஆம் ஆண்டு புதுச்சேரி உள்ள இருளர் மக்களை பழங்குடியின பட்டியலில் மத்திய அரசு சேர்த்தது.

ஆனால் அங்கீகரிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும், புதுச்சேரி பிள்ளைச்சாவடி பகுதியில் வசித்து வரும் 20க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனர்.

இங்கே சுமார் 12 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இதுவரை பள்ளிகளில் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களது அடிப்படை தேவைகளுக்காக அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவர்களுக்கு இந்நாள்வரை குடிசை வீடும், மின்சார வசதியும் கனவாகவே இருக்கிறது.

அருகிலுள்ள முந்திரித்தோட்டங்களில் கூலி வேலை செய்து வரும் இவர்கள், அவற்றுக்கு அருகே தற்காலிக குடிசை அமைத்து வாழ்கின்றனர்.

இவர்களில், பெரும்பாலான குடும்பங்களிடம் குடும்ப அட்டைகள் மற்றும் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. இவர்களில் ஒரு சிலர் புதுச்சேரி அரசாங்கத்திடமிருந்து முதியோர் ஓய்வூதியத்தையும் பெறுகிறார்கள்.

ஆனால் அடிப்படைத் தேவைகளும், சொந்தமாக ஒரு குடிசை வீடு கூட தங்களிடம் இல்லை என இப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த அய்யனார் கூறுகையில், "நாங்கள் தலைமுறை தலைமுறையாக இங்கே வசித்து வருகிறோம். தோட்ட வேலைக்குக் கூலியாக 150 ரூபாய் கிடைக்கும் அதை வைத்து சாப்பாட்டிற்குத் தேவையானவற்றை வாங்கிக் கொள்வோம். வேலையில்லாத நேரங்களில் எலி பிடிக்கவும், உடும்பு பிடிக்கவும் செல்வோம். தற்போது அதற்கும் அரசு தடை விதித்துள்ளதால் எங்களுக்கு எந்த உதவிகளும் இன்றி இங்கே வாழ்ந்து வருகிறோம்," என்கிறார்.

"ஏதாவது வேலைக்குச் சென்றால் சாப்பாடு கொடுத்தாலும், ஊதியம் கொடுத்தாலும் அருகில் வந்து கொடுக்க மாட்டார்கள். கீழ் சாதி மக்கள் என்று ஒதுக்குகின்றனர். இதுபோன்ற காரியங்களால் பெரிதும் மன கஷ்டம் ஏற்படுகிறது.

நாங்கள் பள்ளிக் கூடங்களுக்கு இதுவரை சென்றதில்லை. எங்களது பெற்றோர்‌ அப்படியே விட்டுவிட்டனர். எனக்கு தற்போது திருமணமாகி குழந்தை இருக்கின்றது. இதே நிலை எங்களது குழந்தைகளுக்கும் நீடிக்குமா என்று பயம் இருக்கிறது," எனத் தெரிவிக்கிறார்.

எங்களுக்கென்று சொந்த வீடு கிடையாது, குடிக்கத் தண்ணீர் கூட கிடையாது என்று கூறும் அய்யனார். மின்சார வசதிகள் கூட இல்லாமல் மரத்தடியில் இருக்கும் இந்த ஓலைக் குடிசையில்தான் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதை சமாளித்து வாழ்ந்து வருகிறோம் எனக் கூறுகிறார்.

"அரசாங்கம் மூலமாக எங்களுக்கு ஏதும் வரவில்லை. தேர்தல் நேரங்களில் மட்டும் வாக்கு கேட்டு வருவார்கள். அப்போது மட்டுமே எங்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதாகவும், பிள்ளைகளின் படிப்பிற்கு உதவுவதாகவும் சொல்லுவார்கள். அவர்களை நம்பி நாங்களும் எதில் வாக்களிக்கச் சொல்கிறார்களோ, அதில் வாக்களிப்போம். ஆனால் அதன் பிறகு நாங்கள் என்ன செய்கிறோம், எப்படி இருக்கிறோம் என்று அவர்கள் திரும்பிப் பார்த்ததில்லை.

அவர்களை எதிர்த்துப் போராடும் அளவிற்கு எங்களுக்குச் சமுதாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சக்தி கிடையாது. அனைத்து சூழலிலும் பயந்தே வாழும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்," என்கிறார் அவர்.

எங்கள் முன்னோர்களைத் தொடர்ந்து எங்களது வாழ்க்கை தான் எந்த வகையிலும் பயன்பெறாமல் இருந்துவிட்டது. ஆனால் எங்களது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக அவர்கள் நல்லமுறையில் படிக்க வைக்க அரசின் உதவியை எதிர்பார்ப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

"எங்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் காட்டுமேட்டில் தான் வாழ்ந்து வருகிறோம். எதாவது வேலைக்குச் சென்றால் மட்டுமே சாப்பிட முடியும், எந்த வேலையும் இல்லை என்றால் அன்றைய தினம் பட்டினியாகத் தான் இருக்க வேண்டும். எங்களது சமுதாயத்தில் யாராவது உயிரிழந்தால் மற்றவர்களது உதவியை நாடிச் செல்லும் போது, எவரும் உதவ வரமாட்டார்கள். எங்களை ஆதரிக்க யாரும் இல்லை," எனப் பழங்குடியின இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த நீலா தெரிவிக்கிறார்.

இந்த பகுதியில் சுமார் இரண்டு குருமன்ஸ் பழங்குடியின குடும்பம் மற்றும் 18 இருளர் பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகளே மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் புதுச்சேரி மாநில பழங்குடி கூட்டமைப்பு தலைவர் ராம்குமார்.

"இந்த பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர் ஒருவர் கூட படிப்பறிவு இல்லாமல் இருக்கின்றனர். அந்தமான் பகுதிகளில் வாழக்கூடிய பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை போன்று தான் இவர்களும் வாழ்கின்றனர். சுகாதாரமின்றி வாழ்ந்துவரும் இவர்கள் விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்டாலும் மருத்துவமனைகளுக்குச் செல்வதில்லை. இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாலும் இங்கேயே அவர்களை அடக்கம் செய்துகொண்டு ஒரு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர்.

இவர்களுக்கு அரசு சார்பாக குடும்ப அட்டை, வாக்காளர் அடையாளம், ஆதார் முதலியவற்றை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களுக்கு நிரந்தரமாகத் தங்குவதற்குப் பட்டா வழங்க அரசாங்கத்திடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம். அதற்கான நடவடிக்கைகளை இதுவரையிலும் இவர்களுக்கு மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலையளிக்கிறது," என்கிறார்.

"குறிப்பாக இவர்கள் வேட்டையாடும் பொருட்களை அருகில் உள்ள மதுபான கடைகளில் விற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கிடைக்கும் உணவை வாங்கி வந்து இவர்களது குழந்தைகளுக்கு வழங்குவார்கள்.

மேலும், இவர்களது குழந்தை பசியால் அழுகக் கூடாது என்பதற்காக மலிவு விலையில் கள்ளு வாங்கி குழந்தைக்குக் கொடுக்கின்றனர். இதுபோன்ற போதை வஸ்துக்களால் மயக்கத்தில் இருக்கும் குழந்தைகள் உணவிற்காகத் தொல்லை செய்யாது என்று இதுபோன்று செய்கின்றனர். இதுபோன்ற விழிப்புணர்வு இல்லாமல் இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்," எனத் தெரிவிக்கிறார் ராம்குமார்.

இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு அரசு இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வேண்டும் என்று கூறும் ராம்குமார். இவர்கள் வேலைக்குச் செல்வதற்கும், இவர்களது குழந்தைகள் படிப்பதற்கும் அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார் இவர்.

"இவர்கள் வாழ்வதற்கு ஒரு குடிசையாவது அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். புதுச்சேரியில் இருக்கும் பழங்குடியின மக்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்து வந்தாலும், இந்த பகுதியில் வசித்துவரும் பழங்குடியின மக்கள் இதுபோன்ற சூழலில் தான் வசித்து வருகின்றனர். ஆகவே அரசு அதிகாரிகள் இவர்களை நேரடியாக ஆய்வு செய்து, அதற்கேற்றபடி இவர்களுக்கு உதவ வேண்டும் என அரசிற்குக் கோரிக்கை வைக்கிறேன்," எனத் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி அவர்களிடம் விளக்கம் கேட்டபோது, இவர்களுக்கான‌ மாற்று ஏற்பாடு செய்ய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :