You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"ஆரோக்கிய சேது" தயாரித்தது யார்? மழுப்பல் பதில்கள், எச்சரித்த தகவல் ஆணையம்
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், வைரஸ் அறிகுறியுள்ளவர்களை கண்டறியும் நோக்குடன் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார் என்பது குறித்து முரண்பட்ட பதில்களை வெவ்வேறு அரசுத் துறைகள் வெளியிட்டதால் இந்த விவகாரத்தில் இந்திய தகவல் ஆணையம் தலையிட்டு மூன்று அரசுத்துறைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில், இந்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத்துறை ஆரோக்கிய செயலியின் தயாரிப்பு தொடர்பான விவரங்களை விளக்கி புதன்கிழமை இரவு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஆரோக்கிய சேது செயலி அரசுத்துறைகளுக்கு உதவி வருகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 21 நாட்களில் ஆரோக்கிய சேது தயாரிக்கப்பட்டது.
இந்தியாவின் தலைசிறந்த தொழிற்துறை, கல்வித்துறை ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் உதவியுடன் இந்தியாவில் தயாரிப்போம் என்ற அரசின் திட்டத்தின்படி தொடர்புகளை கண்டறிதல் பயன்பாட்டை நோக்கமாகக் கொண்டு ஆரோக்கிய செயலி தயாரிக்கப்பட்டது.
ஆரோக்கிய சேது செயலி தொடர்பான அறிவிப்புகள் ஏப்ரல் 2, 2020 முதல் செய்திக்குறிப்புகள் வாயிலாக வெளியிடப்பட்டு வந்தன. அந்த செயலியின் மூல தயாரிப்பு கோடிங்குகள், திறந்த வெளியில் கடந்த மே 26ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த செயலியுடன் தொடர்புடையவர்களின் விவரம் அவ்வப்போது பொதுதளங்களில் பகிரப்பட்டது.
https://github.com/nic-delhi/AarogyaSetu_Android/blob/master/Contributors.md
என்ற இணைய பக்கத்திலும் இதை அணுகலாம். எல்லா கட்டத்திலும் ஆரோக்கிய செயலியை மேம்படுத்தியது தேசிய தகவல் மையம் என்பதையும் அந்த பணி தொழிற்துறை, கல்வித்துறை ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய தன்னார்வலர்களால் சாத்தியமானது என்பதையும் தெரிவித்து வந்தோம்.
ஆரோக்கிய சேது தரவுகளை அணுகுவது மற்றும் பகிர்வது தொடர்பான விவரங்கள் அடங்கிய வழிமுறைகள், கடந்த மே 11ஆம் தேதி வெளியிடப்பட்டன.
முன்பே கூறியதை போல, தனியார் கூட்டு முயற்சியுடன் சேர்ந்து அரசாங்கம் இந்த செயலியை மேம்படுத்தியது. ப்ளூ டூத் தொழில்நுட்பம் மூலம் வைரஸ் பாதிப்பு, அறிகுறி உள்ளவர்களை கண்டறிய இந்த செயலி வழிவகை செய்கிறது. ஆகவே, கோவிட்-19 வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஆரோக்கிய சேது மிகவும் பயனுள்ளதாக இருப்பதை நிரூபித்துள்ளது. சமீபத்தில், இந்தியாவில் வைரஸை கட்டுப்படுத்துவதில் ஆரோக்கிய சேது செயலியின் பங்களிப்பை உலக சுகாதார அமைப்பும் பாராட்டியுள்ளது என்று மின்னணு தகவல் தொழில்நுட்பத்துறை கூறியுள்ளது.
செயலி உருவான கதை
இந்தியாவில் பொதுமக்கள் ஆரோக்கிய சேது பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று கொரோனா பொது முடக்க கட்டுப்பாடுகளையொட்டி இந்திய உள்துறை அமைச்சகம் பிறப்பிக்கும் உத்தரவுகளில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
விமான நிலையங்களில் ஆரோக்கிய சேது செயலியை காண்பித்தால்தான் பயணிகள் விமான நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையும் முன்பு கட்டாயமாக பின்பற்றப்பட்டது. அது சர்ச்சையானதையடுத்து, ஆரோக்கிய செயலி இல்லாதவர்கள் ஒரு படிவத்தில் தனக்கு உடல் ரீதியாக எந்த வைரஸ் தொடர்பான பிரச்னைகளும் இல்லை என்பதை எழுதிக் கொடுத்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது கிட்டத்தட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் ஆரோக்கிய செயலியை செல்பேசியில் வைத்திருப்பது அவசியம் என்றும் அலுவலக நுழைவு வாயிலிலேயே அதைக் காண்பித்து பச்சை நிறத்தில் நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்கள் என்ற வரிகளை காண்பித்தால்தான் அந்த ஊழியர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படும் வழக்கம் உள்ளது.
இந்திய அரசின் உத்தரவின் காரணமாக, இந்தியாவில் ஆரோக்கிய சேது செயலியை அக்டோபர் 28ஆம் தேதி நிலவரப்படி 16.23 கோடி பேர் பயன்படுத்துவதாக அந்த செயலியின் முகப்புப் பக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இந்த செயலியை உருவாக்கியது யார், இதில் பயனர் பதிவிடும் தரவுகள் எங்கு செல்கின்றன, அவற்றை யாரெல்லாம் கண்காணிக்கிறார்கள் என பதில்கள் கேட்டு தகவல் உரிமை சட்டத்தின்கீழ் பல விண்ணப்பங்கள் இந்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இது தொடர்பாக தேசிய தகவல் மையம், இந்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத்துறை, தேசிய மின் ஆளுகை பிரிவு ஆகியவை மழுப்பலான பதில்களை அனுப்பி, தங்களின் ஆவணங்களில் இந்த கேள்விக்கான பதில்கள் இல்லை என கூறியிருந்தன.
மேலும் தேசிய தகவல் மையம் அனுப்பிய பதிலில், செயலி தயாரிப்பு தொடர்பான ஒட்டுமொத்த கோப்பும் தங்களிடம் இல்லை என்று தெரிவித்தது.
இதே சமயம், அரோக்கிய சேது செயலி தொடங்கப்பட்ட ஏப்ரல் 2ஆம் தேதி, பல்வேறு அரசு சமூக ஊடக பக்கங்களில் அந்த செயலி, தனியார் பொது கூட்டு மூலம் தயாரிக்கப்பட்டது என கூறப்பட்டிருந்தது.
ஆர்டிஐ செயல்பாட்டாளரின் புகார்
இதையடுத்து செளரவ் தாஸ் என்பவர் இந்திய தகவல் ஆணையத்தில் இந்த மூன்று அரசுத்துறைகளின் பதில்கள் தொடர்பாக புகார் அளித்தார். கோடிக்கணக்கான இந்தியர்களின் அந்தரங்க தகவல்கள் ஆரோக்கிய செயலியில் பதிவு செய்யப்படுவதால் அவற்றை யாரெல்லாம் கண்காணிக்கிறார்கள் என்பதை அறியும் உரிமை உள்ளது. ஆனால், அந்த தகவல்களை வெளியிடாமல் அரசுத்துறைகள் தவிர்ப்பது சந்தேகம் எழுப்புவதாக அவர் கூறியிருந்தார்.
அவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தகவல் ஆணையம், மனுதாரர் தனது புகாரில் ஆரோக்கிய செயலியை யார் தயாரித்தார்கள் என்ற விவரத்தை எந்தவொரு அரசுத்துறையும் வைத்திருக்கவில்லை என கோருகிறார். செயலியில் பதிவாகும் கோடிக்கணக்கான இந்தியர்களின் தரவுகள் தவறாக பயன்படுத்தப்படலாம் என்ற அவரது சந்தேகத்துக்குள் ஆணையம் செல்ல விரும்பவில்லை. ஆனால், இந்த செயலி தொடர்பான தகவலை வழங்க மறுப்பது தகவல் உரிமைச் சட்டப்படி தவறாக கருதப்படலாம். தகவல் உரிமைச் சட்டத்தின் 6ஆவது பிரிவு 3ஆவது உட்பிரிவை பயன்படுத்தி மனுதாரரின் மனுவை ஒரு துறையில் இருந்து இன்னொரு அலுவலகத்துக்கு மாற்றிக் கொண்டே இருப்பது நல்லதல்ல. தகவல் இல்லை என்று கூறி தங்களின் பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடாது என்று ஆணையம் அறிவுறுத்தியது.
செயலியை தயாரித்தது யார் என்ற தகவலை பெற குறைந்தபட்சம் முயற்சியாவது செய்திருக்க வேண்டும். ஆனால், இரண்டு மாதங்களாக மனுதாரரின் மனுவை அலைகழிகத்திருப்பைத உணர முடிகிறது. மேலும், NITI ஆயோக் அலுவலகத்தில் செயலியின் தயாரிப்பு தொடர்பான சில தகவல்கள் மட்டுமே உள்ளது என கூறும் அரசுத்துறைவசம் செயலி எப்படி உருவாக்கப்பட்டது என்றே தெரியவில்லை என்பதை எப்படி ஏற்பது என்றும் ஆணையம் கேள்வி எழுப்பியது.
இந்த விவகாரத்தில் இந்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத்துறை, தேசிய மின் ஆளுகை பிரிவு, தேசிய தகவல் மையம் ஆகியவற்றின் தகவல் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது அபராதம் விதிக்கப்படும் என ஆணையம் எச்சரித்திருந்தது.
பிற செய்திகள்:
- "ஜம்மு காஷ்மீரில் நிலம், வீடு வாங்க விருப்பமா?" - நீங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்
- 800 படம் விவகாரத்தால் உயிருக்கு ஆபத்து: இயக்குநர் சீனு ராமசாமி
- 'இது என் விடைத்தாள் அல்ல' - நீட் குளறுபடியால் மன அழுத்தத்தில் மாணவர்கள்
- டெல்லி அணியின் பந்துகளை சிதறடித்த விருத்திமான் சஹா யார்?
- கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட வுஹான் நகரின் இன்றைய நிலை என்ன?
- ஹரியானாவில் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண் - முழு விவரங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :