You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதி உரை: "கொரோனா முழுமையாக ஒழியவில்லை, ஜாக்கிரதை" - 10 முக்கிய குறிப்புகள்
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, கொரோனா வைரஸ் பெருந்தொற்றை கட்டுப்படுத்த அறிவித்த பொது முடக்க கட்டுப்பாடுகள், படிப்படியாக தளர்த்தப்பட்டு தற்போது அன்லாக் 5.0 நடவடிக்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் செவ்வாய்க்கிழமை மாலையில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி அவர் உரையாற்றினார். அதில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
- நாட்டின் பொருளாதாரம், மெல்ல மீண்டு வருகிறது. அதே சமயம், கொரோனா வைரஸ் முழுமையாக நம்மை விட்டு இன்னும் நீங்கவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்.
- நாடு முழுவதும் 90 லட்சம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சப்படக்கூடாது. இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 83 என்ற அளவில்தான் கொரோனா உயிரிழப்புகள் உள்ளன. அமெரிக்கா, பிரேஸில், பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகளில் இது 10 லட்சம் பேருக்கு 25 ஆயிரம் என்ற அளவில் உள்ளன.
- கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கையில் விரைவில் 10 கோடி பரிசோதனைகள் என்ற கட்டத்தை நாம் எட்டுவோம். மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் என அனைவரும் இதற்காக உழைக்கிறார்கள். வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையை அலட்சியப்படுத்தக் கூடிய நேரம் இதுவல்ல.
- இது திருவிழா காலம். இந்த காலகட்டத்தில் வைரஸ் பரவல் மேலும் தீவிரமாகக் கூடும். கொரோனா பொது முடக்கம் முடிவுக்கு வந்தாலும், இன்னும் கொரோனா வைரஸ் நம்மை விட்டு நீங்கவில்லை. கடந்த 7-8 மாதங்களாக ஒவ்வொரு இந்தியரும் அயராது அளித்த ஒத்துழைப்பு இந்த காலகட்டத்தில் வீணாகி விட நாம் அனுமதிக்கக் கூடாது.
- எப்போதும் முக கவசம் அணிந்து கொள்ளுங்கள், கைகளை தூய்மையாக கழுவி பாதுகாப்புடன் இருங்கள். கடந்த சில நாட்களாக பொது இடங்களில் மக்கள் நெரிசல் அதிகமாக இருப்பதை காணொளிகளில் பார்த்தேன். உங்களுடைய குடும்பம், பிள்ளைகள், வயோதிகர்களின் உயிரை ஆபத்துக்குள்ளாக்காதீர்கள்.
- கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்கும்வரை, எந்த வகையிலும் அலட்சியம் காட்டாதீர்கள். பல நாடுகள், வைரஸ் தணிந்து விட்டதாகக் கருதி அலட்சியம் காட்டியதால்தான் இப்போது அதன் தாக்கத்தை கடுமையாக அனுபவித்து வருகின்றன. அப்படிப்பட்ட நிலை இங்கு வரக்கூடாது.
- மக்கள் ஊரடங்குக்குப் பிறகு இதுநாள்வரை நாம் நீண்ட தூரம் கடந்து வந்திருக்கிறோம். பலர் பணிக்கு திரும்பி விட்டனர். வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது நாட்டில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகளின் அளவு குறைவு. ஆனாலும், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
- சிறிதளவு அலட்சியம் காட்டினாலும் அது நமது ஒட்டுமொத்த முயற்சியையும் வீணடித்து விடும். வாழ்வும் விழிப்பும் சேர்ந்த பொறுப்புணர்வுடன் நாம் செயல்பட்டால்தான், மகிழ்ச்சி தங்கும். இந்தியாவில் பல்வேறு கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்து ஆராய்ச்சிகள் மேம்பட்ட நிலையை எட்டியுள்ளன. ஒவ்வொரு இந்தியருக்கும் வைரஸ் தடுப்பூசி கிடைப்பதை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
- கபீரின் வரிகளை மேற்கோள்காட்டிய பிரதமர், அறுவடை செய்யப்பட்ட பயிர் வீடு வந்து சேரும்வரை யாரும் ஓயக்கூடாது. அதுபோலவே, கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரும்வரை நாம் ஓயக்கூடாது. இதேபோல, ராமசரித்மனாஸில் உள்ள வரியை மேற்கோள்காட்டிய பிரதமர், எதிரி, தவறுகள், வியாதி ஆகியவற்றை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. அதுபோலவே, கொரோனா வைரஸையும் நாம் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது.
- தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ், குருநானக் ஜெயந்தி, புத்தாண்டு பண்டிகைகளை மக்கள் பாதுகாப்புடன் கொண்டாட வாழ்த்துகள். இந்த நிகழ்வுகளை சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பாதுகாப்பு வழிமுறைகளை கவனத்தில் கொண்டு கொண்டாடுங்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: