விஜய் சேதுபதியின் மகள் குறித்து ஆபாச கருத்து: மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பான விவகாரத்தில் அவரது மகள் குறித்து ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்த நபர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட டிவிட்டர் ஆசாமியின் செயலுக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி, திரைக்கலைஞர் ரோகிணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் குழந்தை குறித்து ஆபாசமாக பதிவிட்டவர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளதாக சென்னை மாநகர ஆணையர் மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒரு பிரபலத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவுசெய்யப்பட்ட கருத்து குறித்து பலரும் கவலை தெரிவித்துவருகின்றனர். இது தொடர்பான புகார் வந்ததையடுத்து, சைபர் பிரிவு வழக்கு ஒன்றைப் பதிவுசெய்துள்ளது" என்று கூறியுள்ளார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 800 படத்தில், முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு வெளியானது. இந்த நிலையில், அவர் அந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்ளலாம் என முத்தையா முரளிதரன் தெரிவித்தார். அதை ஏற்பது போல விஜய் சேதுபதியும் தனது சமூக வலைதள பக்கத்தில் "நன்றி.. வணக்கம்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், @ItsRithikRajh என்ற ட்விட்டர் பதிவர், தனது பக்கத்தில் விஜய் சேதுபதியின் சிறு பெண் குழந்தையின் படத்தை பதிவிட்டு, மிக ஆபாசமான கருத்துகளையும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ட்விட்டர் பயனர்கள் பலர் புகார் அளித்ததையடுத்து அந்தப் பக்கம் தற்போது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது என தி.மு.க எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

"விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திரைக்கலைஞர் ரோகிணியும் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

"ஒரு தொழில்முறை நடிகரை நமது தமிழ் சமூகத்தின் முகமாகப் பார்ப்பதைத் தவிர்ப்பது ஆரோக்கியமானது. விஜய் சேதுபதி தன்னாலானவரை போகுமிடத்திலெல்லாம் நல்ல கருத்துக்களைத்தான் விதைத்திருக்கறார், மக்களுக்கு உதவியும் இருக்கிறார். அவர் வில்லனாக நடித்தால் கெட்டவர் என்று எடுத்துக் கொள்ளமாட்டோம்தானே.." என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, தனிப்பட்ட முறையில் பலரும் காவல்துறையினருக்கு புகார் அளித்த நிலையில், சம்பந்தப்பட்ட நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: