அதிமுக ஒபிஎஸ் vs இபிஎஸ்: 'நன்றாகவே நடந்தது, நடக்கிறது, நடக்கும்' - ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவகாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அ.தி.மு.க. தொண்டர்களின் நலன், தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டே, தான் முடிவெடுக்கப் போவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், "தமிழக மக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க. கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!" என்று தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.கவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவகாரம் பெரும் புயலைக் ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதைய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பினர் அவரையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டுமென கூறும் நிலையில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் அதனை ஏற்கவில்லை.

ஓ. பன்னீர்செல்வத்தை முன்னிறுத்தியே தேர்தலைச் சந்திக்க வேண்டுமெனக் கூறிவருகின்றனர். தவிர, இரு அணியினரும் இணையும் தருணத்தில் கூறப்பட்டபடி வழிகாட்டும் குழுவை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக பேசுவதற்காக கடந்த வாரம் நடத்தப்பட்ட செயற்குழுக் கூட்டத்தில் முடிவுகள் ஏதும் எட்டப்படாத நிலையில், அடுத்த சில நாட்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகுமென கூறப்பட்டது.

இதற்குப் பிறகு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தேனியில் இருந்தபடி தனது ஆலோசகர்களுடன் இரு நாட்களாக ஆலோசனை நடத்திவந்தார்.

இந்நிலையில்தான், தொண்டர்களின் நலனை மனதில் வைத்தே செயல்படப்போவதாக ஒரு ட்வீட் மூலம் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதலமைச்சரான ஓ. பன்னீர்செல்வம், அடுத்த சில மாதங்களில் அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்யும்படி சசிகலா தரப்பினரால் வலியுறுத்தப்பட்டார். அப்போது தர்மயுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இதற்குச் சில நாட்களுக்குப் பிறகு எடப்பாடி கே. பழனிச்சாமி முதல்வராக்கப்பட்டார். அந்தத் தருணத்தில் தனி அணியாகச் செயல்பட்ட ஓ. பன்னீர்செல்வம் சில மாதங்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பினருடன் இணைந்தார். துணை முதல்வராகவும் பதவியேற்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: