You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவசாய சட்டங்கள்: ’காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய சட்டங்கள் கிழித்தெறிந்து குப்பையில் வீசப்படும்’ - ராகுல் காந்தி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய சட்டங்கள் கிழித்தெறிந்து குப்பையில் போடப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதிதாக நிறைவேற்றப்பட்ட விவசாய சட்டங்களுக்கு எதிராக மூன்று நாள் டிராக்டர் பேரணி ஒன்றை நடத்துகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இந்த பேரணி நடைபெறுகிறது.
இந்த பேரணியை தொடங்கி வைக்க பஞ்சாபின் மோகா மாவட்டத்துக்கு வந்த ராகுல் காந்தி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த மூன்று சட்டங்களும் கிழித்தெறியப்பட்டு குப்பைத் தொட்டியில் போடப்படும் என நான் உறுதியளிக்கிறேன் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
"விவசாயிகள் இந்த சட்டம் தொடர்பாக மகிழ்ச்சியாக இருந்தால் ஏன் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன? பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு விவசாயியும் இதுகுறித்து போராடுவது ஏன்?"
"கோவிட் 19 தொற்று சமயத்தில் இந்த சட்டத்தை என்ன தேவை? எதற்கு அவசரம்? அதை நிறைவேற்ற நீங்கள் நினைத்திருந்தால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இதுகுறித்து விவாதித்திருக்க வேண்டும். இந்த சட்டங்கள் விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்டது என்கிறார் பிரதமர் அவ்வாறு இருந்தால் அது ஏன் அவைகளில் விவாதிக்கப்படவில்லை," என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், விவசாய சட்டங்களை எதிர்ப்பவர்கள் "மத்தியஸ்தர்களுக்கு மத்தியஸ்தர்களாக" நடந்து கொள்கின்றன என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார் என்கிறது பிடிஐ செய்தி முகமை.
அகாலிதளம் விலகல்
விவசாய சட்டங்களுக்கு நாடு முழுவதும் பல எதிர்ப்புகள் எழுந்தன குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டங்களை எதிர்த்து பா.ஜனதா கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறியது.
அதற்கு முன்னதாக அக்கட்சியைச் சேர்ந்த அகாலிதளத்தை சேர்ந்த அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினார்.
இந்த சட்டங்களில் விவசாயிகளின் நலன்களுக்கேற்ப மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என ஒரு மத்திய அமைச்சராக ஹர்சிம்ரத் கவுர் பலமுறை கேட்டுக் கொண்டபோதும் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை என அக்கட்சியின் தலைவர் சுக்பிர் பதால் தெரிவித்திருந்தார்.
விவசாயச் சட்டம் என்றால் என்ன?
விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்கு கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மொத்தம் மூன்று சட்டங்கள். 1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, 2. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, 3. விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020. இவை ஆங்கிலத்தில் முறையே Essential Commodities (Amendment) Act 2020, Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020, The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020 என அழைக்கப்படுகின்றன.
இந்த சட்டங்களுக்கு கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
இந்த சட்டங்களை எதிர்த்து தமிழ்நாட்டிலும் திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை நடத்தின.
பிற செய்திகள்:
- கொரோனாவால் பாதிப்பு: டிரம்ப் அதிபராக நீடிக்க முடியாமல் போனால் என்னாகும்?
- கொரோனாவால் இந்தியாவில் 1 லட்சம் மரணங்கள்: பாதிப்பில் பணக்கார மாநிலங்கள்
- நாசா விண்வெளிக்கு அனுப்பிய 169 கோடி ரூபாய் கழிவறை: என்ன சிறப்பு?
- அனுபவம் வாய்ந்த சென்னையை வீழ்த்திய ஹைதராபாத் இளம் படை
- பாபர் மசூதி தீர்ப்பு: நரேந்திர மோதியும் அமித் ஷாவும் மெளனம் காப்பது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: