You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கிரிமினல் விசாரணை பற்றிய 10 முக்கிய குறிப்புகள்
அயோத்தி பாபர் மசூதியை மையமாகக் கொண்டு இரண்டு வழக்குகள் இருந்தன. ஒன்று சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான 'சிவில்' வழக்கு. இன்னொன்று மசூதியை இடிப்புக்கு காரணமானவர்கள் என்று குட்டற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீதான 'கிரிமினல்' வழக்கு.
சிவில் வழக்கில் ஏற்கனேவே இந்துக்கள் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்து அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கிரிமினல் வழக்கில் விசாரனை நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
இது தொடர்பான முக்கிய தகவல்கள் மற்றும் பிபிசியின் சிறப்பு செய்திகளின் இணைப்பை இந்தப் பக்கத்தில் நீங்கள் படிக்கலாம்.
அயோத்தியில் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி, பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றவியல் வழக்கில் லக்னெளவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளிக்கவுள்ளது.
சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.
இந்த வழக்கில் முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி, அப்போதைய உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், பாஜக மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார், சக்ஷி மகாராஜ் உள்பட 32 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் லக்னெள நகரில் உள்ள உயர் நீதிமன்ற பழைய கட்டட வளாகத்தின் அறை எண் 18இல் இயங்கி வரும் சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
மசூதி இடிக்கப்பட்ட வரலாறு மற்றும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய இந்துத்துவத் தலைவர்கள் யார் என்பதை கீழே உள்ள இணைப்புகளில் படிக்கலாம்.
அந்த வழக்கின் விசாரணை மற்றும் அதன் முக்கிய அம்சங்கள் தொடர்பான 10 முக்கிய தகவல்களை இங்கே தொகுத்தளிக்கிறோம்.
1) பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை வழங்கவிருப்பவர் நீதிபதி சுரேந்திர குமார் யாதவ். தீர்ப்பு வழங்கப்படும் நாளில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 16ஆம் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் தீர்ப்பை அளிக்க தொடக்கத்தில் ஆகஸ்ட் மாத இறுதிவரை உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. அந்த கெடு பிறகு செப்டம்பர் 30ஆம் தேதி ஆக நீட்டிக்கப்பட்டது.
2) பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் எல்.கே. அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், வினய்கட்டியார், சாத்வி ரிதம்பரா, விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிரிராஜ் கிஷோர், விஷ்ணு ஹரி டால்மியா உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சிவசேனை தலைவர் பாலாசாஹெப் தாக்கரே விசாரணை காலத்திலேயே உயிரிழந்ததால் அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கப்பட்டது. இவர்களுக்கு எதிராக மொத்தம் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை ஒரே வழக்காக இணைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.
3) பாபர் மசூதி இடிப்பு வழக்கின் கடைசி இறுதி வாதங்கள் செப்டம்பர் 1ஆம் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை எழுத மூன்று வார அவகாசத்தை எடுத்துக் கொள்வதாக நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் கூறினார்.
இறுதி வாதங்களின்போது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாகக் கூறி காணொளி வாயிலாக நடந்த விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டோர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பவர்களில் ஒருவரான உமா பாரதி, தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு செப்டம்பர் 28ஆம் தேதி கண்டறியப்பட்டதாகக் கூறி தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
4) இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐ இந்த வழக்கை விசாரித்தது. மொத்தம் 351 பேர் வழக்கில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். சுமார் 600 ஆவணங்கள், வழக்கு தொடர்புடையவாகக் கூறி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
5) இந்த வழக்கின் ஆரம்ப காலங்களில் மொத்தம் 48 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், இந்த 30 ஆண்டுகளில் விசாரணை காலத்திலேயே 16 பேர் உயிரிழந்து விட்டனர்.
6) சிபிஐ தரப்பு முக்கிய வாதமாக, குற்றம்சாட்டப்பட்ட தலைவர்கள், 16ஆம் நூற்றாண்டு பாபர் மசூதியை இடிப்பதற்காக கர சேவகர்களை தூண்டி சதி செய்தனர் என்பதாகும்.
இந்த வழக்கில் 2017ஆம் ஆண்டில் கல்யாண் சிங் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க முடியாத நிலைக்கு அவர் வகித்து வந்த மாநில ஆளுநர் பதவி தடையாக இருந்தது. கடந்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டை நீதிமன்றம் பதிவு செய்ய தடை நீங்கியது.
7) வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று தொடர்ந்து வாதிட்டன. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சம்பவம் நடந்தபோது ஆட்சியில் இருந்ததால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தங்களை இந்த வழக்கில் சிக்க வைத்ததாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
8) இந்த வழக்கில் தனது தரப்பு சாட்சியத்தை காணொளி காட்சி வாயிலாக பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அளித்தார். அப்போது பாபர் மசூதியை இடிக்கும் சம்பவத்தில் எவ்வித குற்றச்சதியிலும் தான் ஈடுபடவில்லை என்று அவர் வாதிட்டார். இந்த வழக்கில் தனது பெயரை தேவையின்றி சிக்க வைத்துள்ளனர் என்றும் அரசியல் அழுத்தம் காரணமாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டதாக அத்வானி குற்றம்சாட்டினார்.
9) சம்பவம் நடந்த 1992, டிசம்பர் 6ஆம் தேதி, பாபர் மசூதி இருந்த பகுதியை அடைந்த கட்டுக்கடங்காத கர சேவகர்கள் கூட்டம், ராமர் பிறந்த இடமாக இருக்கும் பகுதியில் முதலாம் முகலாய மன்னர் பாபர் மசூதியை கட்டியதாகக் கூறி அதை இடித்தனர்.
10) பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதி ராமருக்கே சொந்தம் என்று கூறியது. அதே சமயம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட செயலை சட்டவிரோதம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக வேறு இடத்தில் மசூதியை கட்டிக் கொள்ள 5 ஏக்கர் நிலம் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: