முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் தனது 82 வயதில் இன்று காலமானார்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், உடல் நலக் குறைவால் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அரசியலிலும், சமூகப் பணியிலும் ஜஸ்வந்த் சிங்கின் செயல்பாடுகள் தனித்துவமானவை. பாஜகவை வலுப்படுத்தியதில் முக்கியமானவர். அவருடனான உரையாடல்களை என்றும் நினைவில் கொள்வேன் என்று பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜஸ்வந்த் சிங் மறைவு தொடர்பாக மூன்று ட்வீட்டுகளை பகிர்ந்துள்ளார் மோதி.

"வாஜ்பாய் அரசாங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர் ஜஸ்வந்த் சிங். நிதித்துறை, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறையில் வலுவான தடங்களை பதித்தவர்," என்றும் மோதி தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சிக் காலத்தில் நிதி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை பொறுப்புகளை வகித்தவர் ஜஸ்வந்த் சிங்

தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

2001 இல் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விருதினை பெற்றுள்ளார்.

1938ஆம் ஆண்டு பிறந்த இவர் 1960களில் இந்திய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியவர்.

2009ஆம் ஆண்டு ’ஜின்னா: `இந்தியா பார்டிஷன் இண்டிபெண்டன்ஸ்` என்ற தனது புத்தகத்தில், பிரிவினைக்கு நேருவின் மையப்படுத்தப்பட்ட கொள்கைகளே காரணம் என்று தெரிவித்திருந்தார். மேலும் அதில் முகமது அலி ஜின்னாவை புகழ்ந்து எழுதியதன் விளைவாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் 2010ஆம் ஆண்டு மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: