'இந்திய கலாசார வரலாற்றை எழுதும் குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு இடமில்லையா?' - நரேந்திர மோதிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

இந்தியாவின் 12 ஆயிரம் ஆண்டு கலாசார வரலாற்றை எழுதுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிஞர்களுக்கும் இடம்தர வேண்டுமென தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பிரதமரிடம் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "இந்திய அரசின் கலாசார அமைச்சகம் இந்தியாவின் 12 ஆயிரம் ஆண்டுகால கலாசாரத்தின் பரிணாம வளர்ச்சியையும் தோற்றத்தையும் அறிய குழு அமைத்திருப்பதாக அறிகிறேன். இது வரவேற்கத்தக்கது என்றாலும் அந்தக் குழு அமைக்கப்பட்டவிதம் கவலையைத் தருகிறது.

இந்தக் குழுவில் தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் இடம்பெறவில்லை. மிகப் பழமையான கலாசாரங்களில் ஒன்றான திராவிடக் கலாசாரம் தோன்றி வளர்ந்துவரும் இடம் தமிழகம்.

தற்போது கீழடியிலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் நடந்துவரும் தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த முடிவுகளின்படி பார்த்தால், சங்க காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே தோன்றியது எனத் தெரியவருகிறது. இதன் மூலம், உலகின் மிகப் பழமையான, தற்போதும் உள்ள கலாசாரமாகவும் மொழியாகவும் தமிழைச் சொல்ல முடியும்.

கடந்த ஆண்டு இதே நேரம் நீங்கள் மாமல்லபுரத்திற்கு வருகை தந்தீர்கள். அங்கு தமிழ் கலாசாரத்தின் காலம்கடந்த பாரம்பரியச் சின்னங்களின் முழு அழகை நீங்களே கண்டீர்கள். ஆகவே, தமிழ் கலாசாரத்திற்கும் மொழிக்கும் உரிய இடத்தை அளிக்காமல் எழுதப்படும் எந்த ஓர் இந்திய வரலாறும் முழுமையற்றதாகவே இருக்கும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.

இந்தப் பின்னணியில், இம்மாதிரி ஒரு குழுவை அமைக்கும்போது, அதில் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்கள் இடம்பெறாதது ஆச்சரியமளிக்கிறது. இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு, அந்தக் குழுவை மாற்றியமைத்து அதில் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களையும் இடம்பெறச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

இது தொடர்பாக உங்களது பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன்" என முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் அளிக்கப்பட்ட பதிலில், இந்தியக் கலாசாரத்தின் துவக்கம் மற்றும் பரிணாமம் பற்றி ஆராய அமைக்கப்பட்ட ஒரு குழு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன.

மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் ராஜாங்க அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் எழுத்து மூலம் இந்த பதிலை அளித்திருந்தார். அதில், தற்காலத்திலிருந்து 12,000 வருடங்களுக்கு முன்பு வரையிலான இந்தியக் கலாசாரம் குறித்தும் அதன் துவக்கம் குறித்தும் ஆராய ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

16 பேரைக் கொண்ட அந்த நிபுணர் குழுவில், இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் இணை இயக்குநர் ஜெனரல்கள் கே.என். தீக்ஷித், ஆர்.எஸ். பிஷ்ட், தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குநர் ஜெனரல்கள் பி.ஆர். மாணி, ஜவஹர்லால் பல்கலைக்கழகப் பேராசிரியர் சந்தோஷ் சுக்லா, லால் பகதூர் சாஸ்திரி, தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ரமேஷ் குமார் பாண்டே, அதே பல்கலைக்கழகத்தின் வேந்தர் முகுந்த்கம் ஷர்மா, விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த மக்கன்லால், இந்தியப் புவியியல் சர்வேயின் முன்னாள் கூடுதல் இயக்குனர் ஜெனரல், ஜி.என். ஸ்ரீவத்ஸவா, தேசிய சமஸ்கிருத சன்ஸ்தானின் துணை வேந்தர் பி.என். சாஸ்திரி, தில்லி பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் தலைவர் பி.சி. சர்மா, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் டீன் கே.கே. மிஸ்ரா, தில்லி பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறையைச் சேர்ந்த பல்ராம் சுக்லா, கனடாவைச் சேர்ந்த ஆசாத் கௌசிக், உலக பிராமணர் ஃபெடரேஷனின் தலைவர் எம்.ஆர். ஷர்மா, கலாசாரத் துறையின் பிரதிநிதி, ஆர்க்கியாலஜிகல் சர்வேயின் பிரதிநிதி என மொத்தம் 16 பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவில் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தென்னிந்தியாவைச் சேர்ந்த யாரும் இடம்பெறாதது குறித்து பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :