நீட் தேர்வை தமிழ்நாட்டில் நீக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்த மக்கள் பாதை அமைப்பினர் வலுக்கட்டாயமாக அகற்றம்

தமிழ்நாட்டில் நீட் தேர்வை நீக்க வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தி கடந்த ஏழு நாட்களாக போராடிவந்த மக்கள் பாதை அமைப்பினரை ஞாயிற்றுக் கிழமை காலையில் காவல்துறை வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளது. தங்களை காவல்துறையினர் மோசமாக நடத்தியாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மருத்துவக் கல்லூரிகளுக்கு நாடு முழுவதும் நடத்தப்படும் நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் கடுமையாக எதிர்ப்பு நிலவிவருகிறது. இந்த நிலையில் மக்கள் பாதை என்ற அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் சென்னை சின்மயா நகரில் இருந்த தங்கள் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமையன்று சாகும்வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கினர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆரா அருணா, சந்திரமோகன், அரவிந்த், தமிழ்செல்வி, கீதா, காசி நாகதுரை ஆகிய ஆறு பேர் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலையில் சென்னை மக்கள் பாதை அலுவலகத்திற்கு வந்த காவல்துறையினர், உண்ணாவிரதம் இருந்த ஆறு பேரைக் கைதுசெய்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அந்தத் தருணத்தில் அலுவலகத்திற்கு வெளியில் கூடியிருந்த 47 பேரைக் கைதுசெய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர். ஆனால், தங்களைக் கைதுசெய்யும்போது, தங்களிடம் காவல்துறையினர் தகாத முறையில் நடந்துகொண்டதாக மக்கள் பாதை அமைப்பைச் சேர்ந்த சந்திரமோகன் குற்றம்சாட்டியுள்ளார்.

"உண்ணாவிரதம் இருந்த 6 பேரையும் அடித்தனர். என்னைத் தலையில் தாக்கினர். பெண்களது டீ ஷர்ட்டை பிடித்து இழுத்தனர். நாங்கள் எங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப் போகிறோம். காவல்துறையினர் எங்கள் அலுவலகத்தை அடித்து நொறுக்கியுள்ளனர்," என்கிறார் அவர்.

உண்ணாவிரதம் இருந்ததால் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தவர்களைச் சந்திக்க காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.

இதற்குப் பிறகு மாலை ஏழரை மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரமோகன், "எங்கள் போராட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த இதுவரை அரசாங்கம் வரவில்லை. மக்களுக்காகத்தான் இந்தப் போராட்டத்தை நடத்தினோம். ஆனால், அவர்கள் போராட்டத்தை நிறுத்தும்படி சொன்னார்கள். நல்லக்கண்ணுவும் போராட்டத்தை நிறுத்தும்படி சொன்னார். இறந்த குழந்தைகளின் பெற்றோரும் இந்தப் போராட்டத்தைக் கைவிடும்படி வலியுறுத்துகிறார்கள். ஆகவே இந்தப் போராட்டத்தைக் கைவிடுகிறோம்" என்று தெரிவித்தார்.

தற்போது மக்கள் பாதை அலுவலகத்தை யாரும் நெருங்காத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கோயம்புத்தூர், ராமநாதபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதை அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளும் காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: