You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை மெரினாவில் கலக்கும் கூவம் நதி கழிவுகள்: நதிகளை காக்க என்ன வழி?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையில் ஓடும் அடையாறு, கூவம் நதிகளில் கழிவு நீர் கலப்பதாலேயே கடல் நீர் மாசுபடுவதாகத் தெரிவித்துள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயம், அவற்றைக் கட்டுப்படுத்த உத்தரவிட்டுள்ளது. ஆனால், அது சாத்தியமான காரியமா?
கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னை மெரீனா, பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதிகளில் பெரிய அளவில் நுரை தென்பட்டது. கரையோர கடல்நீரிலும் மணற் பகுதியிலும் இந்த நுரை படிந்திருந்தது. கழிவுநீர் ஆற்றில் கலந்து, அந்த நீர் கடலில் கலந்ததால் இந்த நுரை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக பிபிசி ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டிருந்தது.
பிபிசி வெளியிட்ட இந்த வீடியோவைப் பார்த்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தானாக வழக்குப் பதிவுசெய்து, தமிழக மாசுக்கட்டுப்பாட்டுத் துறைக்கும் சென்னைப் பெருநகர மாநகராட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
இத தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவை தெரிவித்த கவல்களின்படி, மழைக்காலத்தில் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்படாத நீர் வெளியேறியிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையில் கூறப்பட்ட காரணங்களைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், மாசு எங்கேயிருந்து ஏற்படுகிறது என்பதைக் கண்காணிக்க வேண்டும் என மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கப்போவதில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
"சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்கம் கால்வாய் என்ற மூன்று மிகப் பெரிய நீர்வழிப் பாதைகள் இருக்கின்றன. ஒரு காலத்தில் மிகச் சிறந்த நீர்வழிப் பாதைகளாக இருந்த இந்த மூன்றுமே இப்போது கழிவுநீரைத்தான் எடுத்துச் செல்கின்றன. தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் ஆகியவை கழிவு நீரை இந்த நீர்நிலைகளில்தான் திறந்துவிடுகின்றன.
இது தவிர, சென்னை நகரின் குடிநீர் வடிகால் வாரியம் கழிவு நீர் அகற்றும் வண்டிகளை வைத்திருக்கிறது. அதுபோல தனியாரும் கழிவுநீர் அகற்றும் வாகனங்களை வைத்திருக்கின்றனர். இப்படி ஆயிரக்கணக்கான கழிவுநீர் அகற்றும் வண்டிகள் சென்னையில் இருக்கின்றன. இவையெல்லாமே ஓரிடத்தில் உள்ள கழிவு நீரை வேறொரு இடத்தில் கொட்டுகின்றன. இப்படிக் கொட்டப்படும் இடங்கள் பெரும்பாலும் நீர்நிலைகளாகவே இருக்கின்றன.
நம்முடைய சுத்திகரிப்பு நிலையங்களைப் பொருத்தவரை, அவற்றை பாதி சுத்திகரித்து ஆறுகளில்தான் திறந்து விடுகிறார்கள். ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? முழுமையாக சுத்திகரித்து அவற்றை மீண்டும் பயன்படுத்துவது தான் இதற்குத் தீர்வு" என்கிறார் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ். ஜனகராஜன்.
தற்போது சென்னையில் நடந்துவரும் ஆறுகளின் புதுப்பிக்கும் பணிகளும் நிலைமையை பெரிதாக மேம்படுத்திவிடப் போவதில்லை என்கிறார் அவர். "ஆறுகளை புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் இரு பக்கங்களிலும் கான்க்ரீட் சுவர்களைக் கட்டுகிறார்கள். இது தவறு. இதனால், ஆறுகள் கால்வாய்களாக மாற்றப்படுகின்றன. ஆறுகளைப் புதுப்பிப்பதோடு, அவற்றின் வெள்ள நீர் பாயக்கூடிய இடங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்".
கடந்த ஆண்டின் மழைக்காலத்தில் கடலில் நுரை ஏற்பட்டதற்கு முக்கியமன காரணம், கழிவு நீர் ஆற்றில் கலந்து, ஆற்று நீர் அந்தக் கழிவுகளைக் கடலில் கொண்டு சேர்த்ததுதான். சென்னைப் நகர வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் ஓரளவுக்குச் சுத்திகரிக்கப்பட்டு ஆறுகளில் விடப்படுகிறது. ஆனால், மழைக்காலத்தில் இதில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது.
சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களைப் பொறுத்தவரை அவற்றின் மொத்தத் திறன் 170 எம்எல்டிதான். ஆனால், மழைக் காலத்தில் அந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு இதுபோல மூன்று மடங்கு நீர் வரும்.
இதற்கு முக்கியமான காரணம், சென்னையில் கழிவுநீர் செல்லும் பாதையில்தான் மழைநீர் கால்வாய்கள் இணைக்கப்படுகின்றன. ஆகவே மழைக்காலத்தில் கழிவுநீரும் மழைநீரும் ஒன்றாகச் சேர்ந்து சுத்திகரிக்கும் நிலையங்களுக்கு வருகின்றன. இதனால், பல தருணங்களில் கழிவு நீர் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
"இதற்கு மற்றொரு காரணம், பெரிய அளவிலான மழை நீரோடு கழிவுநீர் கலந்தால் கழிவு நீரின் தன்மை மாறிவிடும், பெரிய பாதிப்பு இருக்காது என்பதுதான்" என்கிறார் சென்னைக் குடிநீர் வாரியத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி.
இந்த மழை நீரில் எண்ணெய், வாகன எஞ்சினில் பயன்படுத்தப்படும் எண்ணெய், பெட்ரோல், டீஸல் ஆகியவையும் இருக்கும். இவையெல்லாம் சேர்ந்துதான் நுரையாக மாறுகின்றன.
"சென்னை நகரத்தின் ஆறுகளில் மாநகராட்சிக் கழிவு நீரும் தொழிற்துறை கழிவுநீரும் பெரிய அளவில் திறந்துவிடப்படுகின்றன. நமது சுத்திகரிப்பு அமைப்பின் திறன் போதாது என்றால் அதன் திறனை மேம்படுத்த வேண்டும். அதற்கு இந்தத் தீர்ப்பை மாநகராட்சி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ. சுந்தர்ராஜன்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சென்னையில் 727 எம்எல்டி அளவுக்கு கழிவுநீரைச் சுத்திகரிக்க, சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கத்துள்ளது. சாதாரண நாட்களில் தினமும் சுமார் 500 எம்எல்டி அளவுக்கு கழிவு நீர் இந்த சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வருகின்றன. ஆனால், மழைக்காலத்தில் இது மூன்று மடங்காக அதிகரிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: