You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீட் தேர்வு அச்சத்தால் மதுரை மாணவி ஜோதி துர்கா தற்கொலை
மருத்துவக் கல்விக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வாக இருக்கும் நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் நீட் தேர்வு மீதான அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை நிகழ்ந்துள்ளது.
மருத்துவ படிப்பிற்கான கட்டாய நுழைவு தேர்வான நீட் தேர்வில் மருத்துவ சீட் கிடைக்காவிட்டால் குடும்பத்தார் ஏமாற்றம் அடைவார்கள் என்ற அச்சத்தால் மதுரையைச் சேர்ந்த ஜோதி துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக மதுரை மாநகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ஜோதிஸ்ரீ துர்கா குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.
"வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா(19) கடந்த ஆண்டு தேர்வு எழுதியபோதும் தேர்ச்சி பெறவில்லை. இந்த ஆண்டு அதிக சிரத்தையுடன் படித்துள்ளார். இந்த ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்றால் என்ன செய்வது என்ற அச்சத்தில் மாணவி தூக்கிட்டுக் கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மதுரை மாநகர ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.
அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் நீட் தேர்வின் மீதான அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு நீட் தற்கொலை நிகழ்ந்துள்ளது.
மாணவியின் கடிதம் ஒன்றும் ஒலி பதிவு ஒன்றும் இருப்பதால், அதன் உண்மை தன்மையை சோதிக்கவேண்டும் என்று கூறிய ஆணையர், துர்காவின் மரணம் தற்கொலை என்பதில் சந்தேகமில்லை என்றார். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
மாணவியின் தந்தை முருகசுந்தரம் துணை காவல் ஆய்வாளராக பணியாற்றுகிறார். மாணவி ஜோதி துர்கா எழுதியதாக வெளியாகியுள்ள கடிதத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தன்னிடம் அன்பு கொண்டவர்களாக இருந்தனர் என்றும் தனக்கு தேர்வு பயம் அதிகமாக உள்ளது என்றும் தேர்ச்சி பெறாவிட்டால் குடும்ப உறுப்பினர்களை ஏமாற்றிவிடுவோம் என்ற அச்சம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொரனோ வைரஸ் பெருந்தொற்று காலத்தில், கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான எந்தவிதமான நுழைவுத் தேர்வையும் நடத்தக்கூடாது என்று அகில இந்திய அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழலில் நாளை நீட் தேர்வு நடக்க உள்ளது.
ஆனால், மாணவர்களின் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்தின் பேரிலேயே இந்த தேர்தல் நடத்தப்படுவதாக இந்திய அரசு தெரிவிக்கிறது.
இந்தியா முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நாளை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு எழுதவுள்ளனர்.
மு.க. ஸ்டாலின் அறிக்கை
நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்ட செய்தி அதிர்ச்சி அளிப்பதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு தேர்வு, மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா முதல் ஜோதிஸ்ரீ துர்கா மரணம் வரை உணர முடிகிறது" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: