You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்த விமான ஊழியர்களுக்கு பயிற்சி கொடுத்த சர்வதேச கும்பல் - திடுக்கிடும் தகவல்கள்
மலேசியாவை சேர்ந்த விமானிகளும், விமான பணியாளர்களும் ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருள் கடத்தியதாகவும், இதற்காக கணிசமான தொகையை 'சன்மானம்' ஆக பெற்றதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
'பிரிஸ்பேன் டைம்ஸ்' என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் 'மலேசியன் ஏர்லைன்ஸ்' மற்றும் 'மலிண்டோ ஏர்' விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமான சிப்பந்திகளை ஆஸ்திரேலியாவில் இயங்கி வந்த ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பல் பயன்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடத்தல் கும்பல் ஒரு பெண்ணின் தலைமையில் செயல்பட்டுள்ளது. மெல்போர்ன் நகரில் இருந்தபடி கடத்தல் வலைப்பின்னல் அமைத்துச் செயல்பட்ட அந்தப் பெண்மணியின் பெயர் மிஷெல் என்காக் டிரான்.
விமானிகளும் விமானப் பணியாளர்களும் கடத்தி வரும் ஒவ்வொரு கிலோ ஹெராயினுக்கு 1.55 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்களை விலையாகக் கொடுத்துள்ளார்.
மறுபக்கம் அதே ஹெராயினுக்குக் கூடுதலாக 40 ஆயிரம் ஆஸ்திரேலிய டாரலர்களைக் கட்டணமாக வைத்து உள்ளூர் சந்தையில் விற்றுள்ளார். இடைத்தரகர்கள் மற்றும் கூரியர் செலவுகளுக்கு இந்த லாபத்திலிருந்து பணம் கொடுத்துள்ளார்.
49 வயதான டிரான், போதைப்பொருள் வட்டாரங்களில் 'ரிச்மான்ட் அரசி' என்று குறிப்பிடப்படுவார் என்றும், கடந்த 2018 அக்டோபரில் தொடங்கி ஜனவரி 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 8 கிலோ எடையுள்ள போதைப்பொருளை அவர் ஆஸ்திரேலியாவுக்குள் கடத்தி வரச் செய்தார் என்றும் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஸ்திரேலிய அரசு தரப்பு தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரிஸ்பேன் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பிடிபட்ட பெண் ஊழியரால் அம்பலமான உண்மைகள்
கடந்த ஆண்டு துவக்கத்தில் மலேசிய பெண் விமானப் பணியாளர் ஒருவர் மலேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்த முயன்று மெல்போர்ன் விமான நிலையத்தில் சிக்கினார். அதன் பிறகு நடைபெற்ற விசாரணையின்போதே விமான பணியாளர்களை கடத்தல் கும்பல் தங்களுடைய ஊழியர்களைப் போல் பயிற்சியளித்து, சன்மானம் கொடுத்து மிஷெல் டிரான் உத்தரவுப்படி போதை பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
மலேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவது அண்மைய ஆண்டுகளில் வழக்கமான நிகழ்வாகவே மாறிவிட்டது. போதைப்பொருள் கடத்தலுக்கு மலேசியாவில் அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.
ஆனால் ஆஸ்திரேலியாவில் ஆயுள்சிறைதான் அதிகபட்சம். ஒவ்வொரு ஆண்டும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசியர்கள் தொடர்ந்து சிக்கி வருகின்றனர்.
கடந்த 2018ஆம் ஆண்டின் துவக்கத்திலும் கூட மலேசிய விமானப் பணியாளர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் கைதானார். தற்போது அந்த ஆடவர் மூன்றரை வருட சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.
ஆனால் அவருக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பல் குறித்து அதிக விவரங்கள் தெரிந்திருக்கவில்லை. மேலும் வெறும் 500 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு மட்டுமே 3.5 கிலோ ஹெராயினைக் கடத்த ஒப்புக் கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. தவிர தாம் ஹெராயின் கடத்துவதை அறிந்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே தான் அவருக்கு குறைந்தபட்ச தண்டனை விதிப்பதாக ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
'நம்பிக்கையுடன் தைரியமாக நடைபோடுங்கள்'
ஆனால் மிஷெல் டிரான் மலேசிய விமானப் பணியாளர்களுக்கு என்ன கடத்துகிறோம், எப்படி கடத்தப் போகிறோம், என்ன லாபம் கிடைக்கும் என்பதை எல்லாம் விளக்கமாக சொல்லிக் கொடுத்து கடத்தலை அரங்கேற்றி உள்ளதாக பிரிஸ்பேன் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
தனது கடத்தல் வலைப்பின்னலில் இடம்பெற்றவர்களுக்கு குறிப்பாக, மலேசிய விமான பணியாளர்களுக்கு மிஷெல் டிரான் பயிற்சி அளித்துள்ளார்.
'நம்பிக்கையுடன் தைரியமாக நடைபோடுங்கள்' என்பதுதான் பயிற்சியின் தாரக மந்திரமாக இருந்துள்ளது. ஒரு கிலோ ஹெராயின் அடங்கிய உறையை விமானிகள் தங்களது இரு கால்களுக்கு இடையே கட்டிக்கொள்ள வேண்டும், பெண் ஊழியர்கள் தங்களது மார்புக்கச்சு (பிரா) மற்றும் உள்ளாடைகளிலும் உறைகளை மறைத்து வைத்து கடத்திவர பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக பிரிஸ்பேன் டைம்ஸ் கூறியுள்ளது.
சுமார் மூன்று மாத காலம் விமானப் பணயாளர்கள் இவ்வாறு பயிற்சி பெற்றுள்ளனர். பயிற்சியின்போது சிறிய தலையணையை விமானிகள் தங்கள் கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டு நடை பழகியுள்ளனர். அதன் பிறகே ஒரு கிலோ ஹெராயினை வைத்து நடை பயின்று பின்னர் கடத்தலைத் தொடங்கி உள்ளனர்.
சங்கேத (குறியீட்டு) மொழியைப் பயன்படுத்தி டிரான்
மலேசிய விமான பணியாளர்களையும் கடத்தல் வலைப் பின்னலில் உள்ள மற்றவர்களையும் தொடர்புகொண்டு பேசும்போது சங்கேத (குறியீட்டு) மொழியைப் பயன்படுத்தி உள்ளார் மிஷெல் டிரான்.
மலேசியாவில் உள்ள அவரது போதைப்பொருள் முகவரை 'மிஸ்டர் ஹனாய்' என்றும் பொருளைக் கடத்திவரும் விமானப் பணியாளர்களிடம் இருந்து அதைப் பெற்றுக்கொண்டு பணம் கொடுக்கும் தன் ஊழியர்களை 'வீரர்கள்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மெல்போர்ன் நகரை 'மேண்டி' என்றும் சிட்னி நகரை 'சேன்டி' என்றும் குறிப்பிட்டுப் பேசுவது வழக்கமாக இருந்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக டிரான் போதைப்பொருள் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், அந்த வகையில் நிழல் உலகில் அவர் பிரபலமாக இருந்ததாகவும் பிரிஸ்பேன் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அவர் தொலைபேசியில் பேசும்போது அதைக் கையில் ஏந்துவதில்லை. அவரது வீரர்களில் ஒருவர் தான் தொலைபேசியை தன் கையில் வைத்திருப்பார்.
கடந்த 2018ஆம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்குள் கடத்தி வரப்பட்ட சுமார் 8 கிலோ போதைப் பொருளில், 4 கிலோவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், மீதமுள்ள 4 கிலோ போதைப்பொருள் நாட்டுக்குள் விநியோகிக்கப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
20 முறை ஹெராயின் கடத்தினேன்: ஒப்புக்கொண்ட விமானப் பணிப்பெண்
2019ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி மலேசியப் பெண் விமானப் பணியாளர் ஒருவர் போதைப்பொருள் கடத்தி வந்தபோது மெல்போர்ன் விமான நிலையத்தில் சிக்கினார்.
அவரிடமிருந்து 4 உறைகளில் அடைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்பின்னர் நடந்த விசாரணையின்போது நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயாரையும் மகளையும் காப்பாற்ற பணம் தேவைப்பட்டதாக அந்த 40 வயது பெண் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு 'டிக்கெட்' (ஒரு கிலோ ஹெராயின்) போதைப்பொருளைக் கடத்தி வரும்போது தமக்கு 1,700 ஆஸ்திரேலிய டாலர் கிடைக்கும் என்றும், தாம் பிடிபடும்வரை 20 முறை இவ்வாறு கடத்தலில் ஈடுபட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
"கடத்தலுக்கு முன்பு சிறு தலையணையை கால்களுக்கு இடையே வைத்துக் கொண்டு நடப்பதற்கும், மார்புப் பகுதியில் சிறு உறைகளை மறைத்து வைப்பதற்கும் மூன்று மாதங்கள் பயிற்சி அளித்தனர். ஒவ்வொரு முறையும் ஒரு கிலோ ஹெராயின் கடத்தினேன். இதற்காக 5 ஆயிரம் மலேசிய ரிங்கிட் (இந்திய மதிப்பில் ரூ.87 ஆயிரம்) பெற்றேன்," என்று அந்த பெண் விமானப் பணியாளர் விசாரணையின் போது தெரிவித்ததாக பிரிஸ்பேன் டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இவருக்கு அடுத்த மாதம் தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.
அவரது குடும்ப நிலையை கவனத்தில் கொண்டு நீதிமன்றம் குறைந்தபட்ச கருணை காட்டக்கூடும் என்ற கருத்து நிலவி வரும் நிலையில் இவ்வாறு கடத்தலில் ஈடுபட்ட 3 மலேசியர்கள் கைது நடவடிக்கைக்கு முன் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறிவிட்டதாகத் தெரிகிறது. எனினும் கடத்தல் கும்பலின் தலைவி டிரான் உள்ளிட்ட சிலர் அடுத்தடுத்து கைதாகியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை அன்று டிரான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரது குழுவில் உள்ள மேலும் சிலரும் அடுத்தடுத்து நீதிமன்ற விசாரணை மற்றும் தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர்.
கைதான பெண் விமானப் பணியாளர், இந்தக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் இதர விமானப் பணியாளர்கள் குறித்து எதுவும் தெரிவித்ததாக இதுவரை தகவல் இல்லை. அவர் ஆஸ்திரேலியாவில் சிக்கியதால் சிறைவாசத்துடன் தப்பிப் பிழைக்கிறார். சொந்த நாடான மலேசியாவிலேயே பிடிபட்டிருந்தால் மரண தண்டனைக்கான விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
பிற செய்திகள்:
- இலங்கை தங்கம்: 15% இறக்குமதி வரி ரத்துக்கு பிறகும் குறையாத விலை
- இந்தியாவில் ரூ. 7,000க்கு விற்கப்படுகிறதா கழுதை பால்? உண்மை என்ன? #BBCFactcheck
- கங்கனா ரனாவத்தை பகத் சிங்குடன் ஒப்பிடும் நடிகர் விஷால் - 1920இல் பகத் சிங் என்ன செய்தார் தெரியுமா?
- தென்னிந்திய திரைப்பட நடிகர்களுக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பா? - விரிவான தகவல்கள்
- ரஃபால் போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு ஏன் அவசியம்? - 10 முக்கிய தகவல்கள்
- கொரோனா வைரஸ்: பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பாதுகாப்பாக பயணிப்பது எப்படி?
- 2019 - விளிம்பு நிலை மக்கள் தற்கொலைகளின் ஆண்டு: என்ன காரணம்?
- நீட் தேர்வை ரத்து செய்ய சட்டத்தின் வாயிலாக நியாயம் கிடைக்கவில்லை - முதல்வர் பழனிசாமி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: