டெல்லி - மீண்டும் பாலியல் வல்லுறவு சம்பவம்: 86 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை - நடந்தது என்ன?

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கில் பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. ஆனால், ஒரு சில சம்பவங்கள்தான் மிக ஆழமாக மனதுக்கு சங்கடத்தை தரக்கூடியவையாக இருக்கின்றன.

அத்தகைய ஒரு சம்பவம்தான் இந்திய தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது. இதில் முப்பதுகளை கடந்த நபர், 86 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்.

இது பற்றி பிபிசியிடம் விவரித்த டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால், கடந்த திங்கட்கிழமை மாலையில் வழக்கமாக தனது வீட்டுக்கு வரும் பால் வியாபாரிக்காக காத்திருந்த மூதாட்டியை புதிதாக வரும் நபர் அணுகியதாக கூறினார்.

"வழக்கமாக வரும் பால் விநியோக நபர் இன்று வரமாட்டார். அதனால் என்னுடன் வாருங்கள். நான் உங்களுக்கு பால் எங்கு கிடைக்கும் என காட்டுகிறேன்" என அந்த நபர் மூதாட்டியிடம் கூறியதாகவும் அவரை நம்பி அந்த பெண்மணி சென்றபோது, அருகே உள்ள பண்ணைக்கு அவரை அழைத்துச் சென்று அந்த நபர் பாலியல் வல்லுறவு செய்ததாகவும் ஸ்வாதி மாலிவால் கூறினார்.

வயதில் சுமார் அரை நூற்றாண்டு இளையவரான அந்த நபரை நம்பிச் சென்ற மூதாட்டிக்கு அந்த கொடுமையை இழைத்த நபரிடம் "நான் உன் பாட்டி மாதிரி" என அவர் கூறியபோதும் அந்த நபர் இரக்கமின்றி அவருக்கு கொடுமை செய்துள்ளார்.

"தன்னை தற்காத்துக் கொள்ள அவர் முயன்றபோதும் அவரை அந்த நபர் தாக்கியிருக்கிறார்" என்று தான் விசாரித்த அனுபவத்தை பிபிசியிடம் விவரித்தார் ஸ்வாதி மாலிவால்.

இந்த சம்பவம் நடந்தபோது, அருகே இருந்த கிராமவாசிகள் பாட்டியின் அழு குரலை கேட்டு சம்பவ பகுதிக்குச் சென்று பாட்டியை மீட்டனர். பிடிபட்ட நபர் பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு பாட்டியின் வீட்டுக்கு ஸ்வாதி மாலிவால் சென்றார்.

"அப்போது பாட்டியின் கைகள் நடுக்கத்தில் இருந்தன. அவர் அனுபவித்த கொடுமையை கேட்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. அவரது முகம், உடல் முழுவதும் சிராய்ப்புகள். தனது யோனிக்குழாயில் ரத்தம் வடிந்ததாக அவர் கூறியபோது அவர் கடுமையான துன்பத்தை அனுபவித்ததை உணர முடிந்தது" என்று ஸ்வாதி மாலிவால் கூறினார்.

நடந்த சம்பவத்துக்காக அவரை வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரும் ஸ்வாதி, அந்த நபர் மனிதரே கிடையாது என்றும் கூறுகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் டெல்லி துணை நிலை ஆளுநருக்கும் கடிதம் எழுதியுள்ள அவர், விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடரும் பாலியல் வன்கொடுமைகள்

இந்திய தலைநகர் டெல்லியில் பாலியல் மற்றும் பாலியல் வன்முறை சம்பவங்கள் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 வயது துணை மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

ஆறு பேர் கொண்ட கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளான அவர், பாதிக்கப்பட்ட சில நாட்களிலேயே உயிரிழந்தார். அந்த வழக்கில் ஒருவர் சிறார். மற்றொருவர் விசாரணைக் காலத்திலேயே உயிரிழந்தார். மீதமுள்ள நால்வருக்குக் கடந்த மார்ச் மாதம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும், இதுபோன்ற கொடூரமான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நாட்டில் அதிகரித்து வருகின்றன.

தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகளின்படி, 2018ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 33,977 சம்பவங்கள் நடந்துள்ளன. அதாவது ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு பாலியல் குற்றம் நடந்ததை அந்த தரவுகள் மூலம் அறிய முடிகிறது.

"ஆனால், நடைமுறையில் இந்த தரவுகளை விட நடக்கும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகம்" என்று கூறும் பாலியல் வல்லுறவுக்கு எதிராக குரல் கொடுக்கும் செயல்பாட்டாளர்கள், அவை பெரும்பாலும் பதிவாவதில்லை என்கின்றனர்.

கொரோனா காலத்திலும் பாலியல் வன்முறை

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நாடு கொரோனா பாதிப்புடன் போராடி வருகிறது.

சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் நோயாளியை அவசர ஊர்தி வாகன ஓட்டுநர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த மாதம் ஒரு கரும்புக்காட்டில் 13 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது கண்கள் பிதுங்கி நாக்கு வெட்டப்பட்டிருந்த அளவுக்கு அந்தக்கொடுமையின் உச்சத்தை நாடு பார்த்தது.

கடந்த ஜூலை மாதம் 6 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர் தன்னை அடையாளம் காணக்கூடாது என்பதற்காக அவரது கண்களைக் கடுமையாக சேதப்படுத்தினார்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய பெண்ணுரிமை மற்றும் பாலியல் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு உதவும் தன்னார்வ அமைப்பின் செயல்பாட்டாளர் யோகிதா பயானா, எந்த வயதுடையவராக இருந்தாலும் அவர்கள் பாதுகாப்பாக இல்லை என்பது இதுபோன்ற சம்பவங்கள் மூலம் உணர முடிகிறது என்றார்.

கடுமையான சட்டமியற்றியும் பலன் இல்லை

இந்தியாவில் 2012ஆம் ஆண்டில் துணை மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான சம்பவத்துக்குப் பிறகு, நாடு முழுவதும் கடுமையான கொந்தளிப்பு காணப்பட்டது.

அதன் விளைவாக கொடுக்கப்பட்ட அழுத்தத்தால், பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டது. அந்த வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு வழக்கு துரிதப்படுத்தப்படவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், களத்தில் பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாத நிலையே தொடருவதாகப் பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

பல நகரங்களில் விளம்பர பலகைகளில் பிரதமர் மோதி "பெண்களை படிக்க வையுங்கள், மகள்களைக் காப்பாற்றுங்கள்" என்று கூறுவதைப் பார்த்திருக்கிறோம். அதை "உங்கள் மகன்களை படிக்க வையுங்கள், மகள்களை காப்பாற்றுங்கள் என ஏன் மாற்றக்கூடாது" என்று பயானா போன்ற செயல்பாட்டாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: