You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திரா - நிக்சன் பனிப் போர்: வரலாற்றில் பதிவான அழியாத சுவடுகள்
- எழுதியவர், ரெஹான் ஃபசல்,
- பதவி, பிபிசி
இந்திரா காந்தி, அவரது ஆட்சிக் காலத்தில் பல பெயர்களால் அழைக்கப்பட்டார். ராம் மனோகர் லோஹியா அவரை ஒரு பேசாத பொம்மை என்றும், அடல் பிஹாரி வாஜ்பேயி அவரை சாக்ஷாத் துர்கா என்றும் அழைத்தனர்.
யாஹியா கான் அவரை 'அந்தப் பெண்மணி' என்று கேவலமாக அழைத்தார். ரிச்சர்ட் நிக்சன் அவரை 'கிழ சூனியக்காரி' என்றும் 'கிழப்பெண் நாய்' என்றும் அழைத்தார்.
தென்னகத்தில் அவர் மீது அன்பு கொண்டோர் அவரை 'அன்னை' என்றழைத்தனர். வேறு சிலரோ, அவரை 'அவள்' என்று மரியாதை குறைவாகவே குறிப்பிட்டனர்.
1968 ஆம் ஆண்டில் அவர் அமெரிக்கா சென்றபோது, அதிபர் லிண்டன் ஜான்சனுக்கு அவரை, எந்தப் பெயரில் அழைப்பது என்ற ஐயம் எழுந்தது.
இந்திரா, ஜான்சனை சந்திக்கவிருந்த அந்த நாளில், ஜான்சனின் சிறப்பு உதவியாளர் ஜாக் வலெண்டியிடமிருந்து அமெரிக்காவுக்கான அப்போதைய இந்திய தூதரான பி.கே. நேருவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அன்றைய சந்திப்பில் ஜான்சன், இந்திராவை எப்படி அழைத்து உரையாடுவது என்பது குறித்துக் கேட்டதாகவும் நேரு தன்னிடம் தெரிவித்ததாகப் பிரபல பத்திரிக்கையாளர் இந்தர் மல்ஹோத்ரா நினைவுகூர்கிறார்.
அவருக்கு என்ன விருப்பம் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவரிடம் கேட்டுச் சொல்வதாகவும் நேரு கூறினார்.
நேருவின் இந்தக் கேள்வியை இந்திராவின் முன் வைத்தபோது, அவர் புன்னகைத்து, ஜான்சன் தன்னை "பிரதமர்" என்று அழைக்கலாம் அல்லது பெயரிட்டும் அழைக்கலாம் என்று கூறினார்.
நேரு அறையை விட்டு வெளியே செல்ல எத்தனித்த போது, இந்திரா அவரைத் தடுத்து நிறுத்தி, தனது அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் தன்னை "சர்" என்றும் அழைப்பதாகவும் அவரிடம் சொல்லுமாறு புன்னகைத்தவாறே கூறினார்.
இந்திரா காந்தியின் ஆளுமையால் ஈர்க்கப்பட்ட ஜான்சன், அழைக்கப்படாமலே, அவரைச் சந்திக்க தூதர் பி.கே. நேருவின் இல்லத்துக்குச் சென்றார். முன்னறிவிப்பு இல்லாமல், மரபை மீறி இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
அதிர்ச்சியடைந்த நேரு அவரிடம், "அதிபர் அவர்களே, நீங்கள் உணவருந்திவிட்டுச் செல்வீர்களா?" என்று கேட்க, ஜான்சன் உடனடியாக, "நான் எதற்காக இங்கு வந்தேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்று பதிலளித்தார்.
அவசர அவசரமாக சாப்பாட்டு மேசையின் இருக்கை ஏற்பாடுகள் மாற்றப்பட்டன. 18 நாற்காலிகள் மட்டுமே அதில் போட முடியும். அனைத்து விருந்தினர்களின் இடங்களும் முன்னரே நிர்ணயிக்கப்பட்டிருந்தன. கூடுதல் நாற்காலிக்கு இடமில்லை.
அப்போது பி.என். ஹக்சர், தான் பக்கத்து அறையில் சென்று உணவருந்த விரும்புவதாகவும் இந்திரா காந்தியின் அருகில் அமர்ந்து விருந்தை உண்ணும் பெருமையை லிண்டன் ஜான்சன் பெறலாம் என்றும் முன்வந்து அறிவித்தார்.
ஏற்கனவே அங்கு வந்திருந்த, துணை அதிபர் ஹூபர்ட் ஹம்ப்ரி, "இந்த அழகான பெண்களுக்கு அருகில் நீங்கள் என்னை உட்கார விடமாட்டீர்கள் என்று எனக்கு ஏற்கனவே தெரியும் அதிபர் அவர்களே", என்று விளையாட்டாகக் கூறினார்.
அடுத்த நாள், வெள்ளை மாளிகை விருந்துக்குப் பிறகு, ஜான்சன் இந்திரா காந்தியைத் தன்னுடன் நடனமாடச் சொன்னார். அதற்கு அவர், "நான் உங்களுடன் நடனமாடுவதை என் நாட்டு மக்கள் விரும்ப மாட்டார்கள்." என்று புன்னகையுடன் பதிலளித்தார்.
இந்திரா காந்தி மற்றும் ரிச்சர்ட் நிக்சன் ஆகியோர் இடையே ஆரம்பத்திலிருந்தே இணக்கமான போக்கு இருந்ததில்லை.
1967 ஆம் ஆண்டில் டெல்லியில் நிக்சன் அவரைச் சந்தித்தபோது, இருபது நிமிடங்களுக்குள் இந்திரா மிகவும் சலிப்படைந்தார்.
நிக்சனுடன் வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரியிடம், "இன்னும் எவ்வளவு நேரம் இவரைப் பொறுத்திருக்க வேண்டும்?" என்று ஹிந்தியில் வினவினார்.
இந்த இணக்கமின்மை 1971 ஆம் ஆண்டிலும் தடையின்றித் தொடர்ந்தது.
நவம்பர் 1971 இல், கிழக்கு பாகிஸ்தானில் நடந்து வந்த அட்டூழியங்கள் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்க இந்திரா காந்தி அமெரிக்கா சென்றபோது, வெள்ளை மாளிகையில் வரவேற்பு உரையில், நிக்சன் பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார். ஆனால், கிழக்கு பாகிஸ்தான் விவகாரம் குறித்துக் குறிப்பிடவில்லை.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் இந்திரா, சற்றும் தயங்காமல், மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சோகத்தை அதிபர் நிக்சன் புறக்கணிக்கிறார் என்று கூறினார்.
புகைப்படக்காரர் விலகியவுடன், நிக்சன் அரசின் வியட்நாம் மற்றும் சீன கொள்கை குறித்துக் குறிப்பிட்டு, இந்திரா உரையாடலைத் தொடங்கினார்.
பின்னர் வெளியுறவுத்துறை செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர், 'ஒயிட் ஹவுஸ் இயர்ஸ்' என்ற தனது புத்தகத்தில், "ஒரு ஆசிரியர், மனோதிடமிழந்த ஒரு மாணவனின் மன உறுதியை அதிகரிக்க எப்படிப் பேசுவாரோ அது போல இந்திரா, நிக்சனுடன் உரையாடினார்." என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எழுதும் கிஸ்ஸிங்கர், " நிக்சன் உணர்வற்ற முறையில் தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார்" என்று குறிப்பிடுகிறார்.
இருவருக்கும் இடையிலான உரையாடலை 'காது கேளாதோரிடையேயான உரையாடல்' என்று கிஸ்ஸிங்கர் குறிப்பிடுகிறார். மேலும் உரையாடலின் இறுதியில், இந்திரா காந்தியிடம் நிக்சன் வெளிப்படுத்தியவற்றைப் பகிரங்கமாகப் பொது வெளியில் கூற முடியாது என்றும் கூறுகிறார்.
அடுத்த நாள், இந்திரா காந்தியை சந்திக்க ஓவல் ஹவுஸின் பக்கத்து அறையில் நிக்சன் 45 நிமிடங்கள் காத்திருக்கவைத்தது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
"இந்திரா இந்த அவமானத்தை அமைதியாக விழுங்கினார். ஆனால் நிக்சனின் அநாகரீகத்திற்கு அவர் திறமையுடன் தக்க பதிலடி கொடுத்தார்." என்று இந்திராவின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் கேத்ரின் ஃபிராங்க் எழுதுகிறார்.
பாகிஸ்தான் குறித்த பேச்சுவார்த்தைக்குத் தயாராக வந்திருந்த நிக்சனிடம் அவர் பாகிஸ்தான் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக, அமெரிக்க வெளியுறவுக் கொள்கை குறித்து கடுமையான கேள்விகளை அவர் நிக்சனிடம் எழுப்பினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பி.என்.ஹக்சர், கேத்தரின் ஃபிராங்கிடம், அவரது கண்கள் நிக்சனின் முகத்தில் உள்ள உணர்ச்சி வெளிப்பாடுகளையே கவனித்துக் கொண்டிருந்ததாகக் கூறினார்.
அவரது முகத்தில் போலியான உணர்ச்சி வெளிப்பாடுகள் தென்படுவதை உணர முடிந்ததாக அவர் கூறுகிறார். அவரது முகத்தில் சில நேரங்களில் இயற்கைக்கு மாறான செயற்கைப் புன்னகை இருந்ததாகவும் அவருடைய அடர்த்தியான புருவங்கள் அளவுக்கதிகமாகவே உயர்ந்திருந்ததாகவும் அவர் கூறினார்.
அழுத்தம் காரணமாக, அவர் உடல் வியர்த்த போது, அவருடைய முகம் உணர்ச்சிப் பிழம்பாகத் தெரிந்ததாகவும் இந்த பேச்சுவார்த்தைகள் படு தோல்வியடைந்தன என்றும் அவர் குறிப்பிட்டார். 1971 போரில் பாகிஸ்தானின் தோல்வி, அவருடனான உறவுகளை மேலும் கடுமையாக்கியது.
பிற செய்திகள்:
- சாதி ஒழிப்பு 2050ல் சாத்தியமா? விவாதமாகும் உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்து
- ரியா சக்ரவர்த்தி கைது: போதைப்பொருள் பயன்படுத்தியதாக விசாரணை அதிகாரிகள் குற்றச்சாட்டு
- சீன பகுதியில் அருணாசல பிரதேச இளைஞர்கள் - தாயகம் அழைத்து வர இந்தியா முயற்சி
- சாதி ஒழிப்பு 2050ல் சாத்தியமா? விவாதமாகும் உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்து
- ரியா சக்ரவர்த்தி கைது: போதைப்பொருள் பயன்படுத்தியதாக விசாரணை அதிகாரிகள் குற்றச்சாட்டு
- அருணாசல பிரதேச எல்லையில் காணாமல் போன 5 இந்தியர்களின் கதி என்ன? சமீபத்திய தகவல்கள்
- பப்ஜி தடை எதிரொலி: - தென் கொரிய நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - இனி என்ன நடக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: