You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இந்திய பெண்கள் கவர்ச்சி குறைவானவர்கள்' - அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சன்
அமெரிக்க அரசின் ரகசிய ஒலி நாடாக்கள் சிலவற்றை, சமீபத்தில் அமெரிக்க அதிபர் மாளிகை பொது வெளியில் வெளியிட்டது.
அதில் ஒரு டேப் மூலம் முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்சனின் இனவெறி மற்றும் வெறுப்புணர்வால், பாகிஸ்தான் ராணுவத்தால் வங்கதேசத்தில் நடத்தப்பட்ட வன்முறைகள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது தெரியவந்துள்ளது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி கூறுகிறது.
அமெரிக்காவில் 1969 முதல் 1974 வரை அதிபராக பதவி வகித்தவர் ரிச்சர்ட் நிக்சன்.
1971-ம் ஆண்டு ஜூன் மாதம் வெள்ளை மாளிகையின் அலுவலகத்தில் ரிச்சர்ட் நிக்சன், அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்சிங்கர், வெள்ளை மாளிகையின் நிர்வாகத் தலைவர் எச்.ஆர். ஹால்டேமன் ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ பதிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தற்போது நிறவெறி தொடர்பான பிரச்சனை அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த ஆடியோ பதிவின் மூலம் அதிபர் நிக்சன் மற்றும் அவரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிங்கரின் வெறுப்புணர்வு தெரியவந்துள்ளது.
இந்த டேப்பின் மூலம் வெளியான தகவலின்படி தெற்காசியா மீது நிக்சனுக்கு இருந்த வெறுப்பு மற்றும் பெண் வெறுப்பு எப்படி அமெரிக்க கொள்கையில் தாக்கம் செலுத்தியது என்று தெரியவந்துள்ளது.
இந்த ஆடியோ பதிவில் நிக்சன் இந்தியர்கள் குறித்து தரக்குறைவாக பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
இந்திய பெண்கள் குறித்து ஆபாசமாகவும், இனரீதியாக இந்தியர்களை அவமதிக்கும் வகையிலும் அவர் பேசியிருக்கிறார்.
உடல் ரீதியாகவும் இந்தியர்களை அவர் விமர்சனம் செய்துள்ளார்.
'உலகிலேயே இந்திய பெண்கள்தான் கவர்ச்சி குறைவானவர்கள் ; பாலுணர்வு அற்றவர்கள்' என நிக்சன் பேசியுள்ளார்.
மேலும் இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியர்களை குற்றம் சாட்டியும் ரிச்சர்ட் நிக்சன் பேசியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக அவர் இந்தியர்கள் மீது எந்த அளவுக்கு வெறுப்பு வைத்திருந்தார் என்பதை இந்த ஆடியோ பதிவின் மூலம் அறிய முடிகிறது.
இந்த டேப் அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே நிலவிய பனிப்போர்க் காலத்தின் ஒரு கடுமையான பகுதி குறித்தானது.
ஒருங்கிணைந்த பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான வங்காள மக்கள் கொல்லப்பட்டதை நிக்சன் மற்றும் கிஸ்ஸிங்கர் ஆதரித்தனர்.
இந்த சம்பவம் காரணமாக ஒரு கோடி அகதிகள், இன்று வங்கதேசமாக உள்ள அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு தப்பிச் சென்றனர்.
இந்தியா ரகசியமாக வங்காள கொரில்லா படைக்கும் பயிற்சி அளித்தது. இந்த நெருக்கடி 1971ஆம் ஆண்டு உச்சக்கட்டத்தை அடைந்து இந்தியா பாகிஸ்தானை ஒரு போரில் தோற்கடித்தது. அதன் பிறகு சுதந்திர வங்கதேசம் தோன்றியது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: