You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
”பி.எம்.கேர்ஸ் நிதியில் ஐந்தே நாளில் 3000 கோடிக்கு மேல் குவிந்துள்ளது"
இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
‘பி.எம்.கேர்ஸ்’ நிதிக்கு ஐந்தே நாளில் ரூ.3,076 கோடி நிதி திரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறது தினத்தந்தியின் செய்தி.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த மார்ச் மாதம் பரவத்தொடங்கியபோது, அதன் தடுப்பு நடவடிக்கைக்காகவும், மீட்பு நடவடிக்கைக்காகவும் நாட்டு மக்கள் நன்கொடை அளிக்க வசதியாக ‘பி.எம்.கேர்ஸ் பண்ட்’ (பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலை நிதியம்) தொடங்கப்பட்டது.
இது பற்றி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மார்ச் கடைசி வாரத்தில் அறிவித்து, நன்கொடைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து பல தனியார் நிறுவனங்கள், அரசு அமைப்புகள், பிரபலங்கள் உள்ளிட்ட தனி நபர்கள் நன்கொடைகளை வாரி வழங்கினர்.
இதற்கு மத்தியில், ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியில் திரட்டப்பட்ட நன்கொடைகளை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு (என்.டி.ஆர்.எப்.) மாற்ற உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து, தள்ளுபடி செய்து கடந்த 18-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இரண்டும் வெவ்வேறு நிதி, தனித்தனி பொருள், நோக்கத்துடன் கூடியவை என்பதால், தேசிய பேரிடர் நிவாரண நிதியுடன் பி.எம்.கேர்ஸ் நிதியை மாற்ற முடியாது என தீர்ப்பில் கூறப்பட்டது.
தற்போது பி.எம்.கேர்ஸ் நிதிக்கு வந்த நன்கொடைகள் பற்றிய கணக்கு அறிக்கையை பி.எம்.கேர்ஸ் நிதி அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், “ரூ.2.25 லட்சத்துடன் தொடங்கிய பி.எம்.கேர்ஸ் நிதிக்கு மார்ச் 27-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி வரையில் (ஐந்தே நாளில்) ரூ.3,076.62 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
பணம் கொடுத்தவர்களின் தன்னார்வ பங்களிப்பு ரூ.3,075.85 கோடி; இத்துடன் ரூ.39.67 லட்சம் வெளிநாட்டு பங்களிப்புகளால் வந்துள்ளது. வட்டி வருமானத்தை சேர்த்தும், அன்னிய செலாவணி மாற்றத்துக்கான சேவை வரி குறைத்தும் மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி கையிருப்பு ரூ.3,076.62 கோடி” என கூறப்பட்டுள்ளது. இந்த நிதியின் வரவு, செலவுகள் வெளிப்படையாக இல்லை என்று எதிர்க்கட்சிகள் ஏற்கனவே குற்றம்சாட்டின. அதை மத்திய அரசு மறுத்தது என விவரிக்கிறது அச்செய்தி.
இந்து தமிழ் திசை - பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்சிஏ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்சிஏ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். உள்ளிட்ட படிப்புகளுடன் எம்சிஏ படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக புதிய கல்வியாண்டு சேர்க்கை தாமதமானது.
இதற்கிடையே பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்சிஏ ஆகிய படிப்புகளுக்கு வெளிமாநில மாணவர்கள் செப்டம்பர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. எனினும், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் போதாது எனவும், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்குறிப்பிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் செப்.30-ம் தேதி மாலை 5.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனைப் பல்கலைக்கழகப் பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார் என விவரிக்கிறது அச்செய்தி.
தினமணி – செப்டம்பர் 30 வரை தொழில் வரி செலுத்தலாம்
பெருநகர் சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தல் தொகையை செப்டம்பர் 30க்குள் அபராதமின்றி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறது தினமணியின் செய்தி.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்தி குறிப்பு: சென்னை மாநகராட்சியின் வருவாய் துறையின் முக்கிய வருவாய்களான சொத்து வரி, தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தல் உட்பட வரி வருவாய், வரி வருவாய் அல்லாத இனங்கள், கட்டணங்கள் சென்ற 31.3.2020க்குள் செலுத்தி இருக்க வேண்டும். கொரோனா காரணமாக பொதுமுடக்கம் பிறப்பிக்கபப்ட்டதால் தொழில் வரி உட்பட அனைத்து வரிகளையும் எவ்வித அபராதமும் இன்றி 30.6.2020வரை செலுத்த ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தலுக்கான தொகையை இதுவரை செலுத்தாதவர்கள், செப்டம்பர் 30க்குள் எவ்வித அபராதமுமின்றி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: