ஜிடிபி சரிவுக்கு கொரோனா பரவல் காரணமா? பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் என்ன கூறுகிறார்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய பொருளாதாரத்தில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட கொரோனா மட்டுமே காரணமல்ல என்றும் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் இந்திய பொருளாதாரம் சரிவில் இருந்து பாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டது என்றும் விமர்சிக்கிறார் பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன்.
கடந்த ஆண்டின் காலாண்டு ஜிடிபி புள்ளிவிவரங்களோடு இந்த ஆண்டு வெளியாகியுள்ள முதல் காலாண்டு தகவல்களை ஒப்பிட்டு கூறும் ஜெயரஞ்சன், இந்த ஆண்டு இந்தியா சந்தித்துள்ள வீழ்ச்சியின் தாக்கம் பல ஆண்டுகள் நீடிக்கும் என்கிறார்.
கேள்வி: இந்தியா பொருளாதாரம் 24 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவை சந்தித்துள்ளதற்கு கொரோனா ஊரடங்கு முக்கிய காரணமா?

பட மூலாதாரம், Facebook
இன்று இந்தியா சந்தித்துள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனா ஒரு காரணம் ஆனால் அதுமட்டுமே காரணம் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் கீழ்நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தது என்பதை கவனியுங்கள். கொரோனா முடக்கத்தால் மேலும் பாதிப்படைந்து (மைனஸ்)-23.9சதவீதத்திற்கு சென்றுவிட்டது. ஏற்கனவே இருந்த பொருளாதார மந்தநிலை, கொரோனா முடக்கமும் சேர்ந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் ஆதாரப்பூர்வமாக நமக்கு சொல்வது இதைதான். முன்பே ஏற்பட்ட சுனக்கம் தற்போது அதிகரித்துள்ளது. குறைந்தபட்சம் முந்தைய காலத்தில் நாம் சரியான பொருளாதார முடிவுகளை எடுத்திருந்தால், கொரோனாவால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்திருக்கலாம். ஆனால் தற்போது சரிவில் இருந்து பாதாளத்திற்கு சென்றுவிட்டோம்.
கேள்வி: இந்தியா இதுவரை இல்லாத அளவு நிலைகுலைந்துவிட்டதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். இதற்கு காரணமாக அமைந்த பொருளாதார கொள்கை முடிவுகள் என்னென்ன?
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மோசமான சரிவை இந்தியா சந்திக்க தொடங்கியது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு முக்கிய காரணங்கள். ரூ.1,000 மற்றும் ரூ.500 செல்லாது என அரசாங்கம் அறிவித்தவுடன், பணத்தை நேரடியாக கொடுத்து புழங்கும் முறையில் சிக்கல் ஏற்பட்டது. சாதாரண மக்களிடம் பணபுழக்கம் குறைந்தால், அது நேரடியாக நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். அது நடந்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஜிஎஸ்டி அறிவித்தார்கள். இதனால் சிறு மற்றும் குறுவியாபாரிகள், சுயதொழில் செய்பவர்கள் முற்றிலுமாக பாதிப்படைந்தார்கள். இந்த இரண்டின் தாக்கத்தை தான் தற்போது நாம் ஜிடிபி சரிவு புள்ளிவிவரங்களில் பார்க்கிறோம்.

பட மூலாதாரம், Getty Images
கொரோனாவுக்கு முன்னர், இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கட்டுமான தொழிலாளர்கள் வேலை செய்வதை பார்க்கமுடிந்தது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் முதலீட்டை அதிகரிக்க வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார்கள். ஆனால் ஏன் கட்டுமான தொழில், ஏற்றுமதி இறக்குமதி குறைந்துள்ளது?வேளாண்துறைக்கு அடுத்தபடியாக இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகமுள்ள துறை கட்டுமானத்துறை. முறைசாரா, அமைப்புசாராத கூலி தொழிலாளர்களை மையமாக கொண்டு கட்டுமான துறை உள்ளது. இதில் நேரடியான பணப்புழக்கம் அதிகமாக இருந்தது. பணமதிப்பிழப்பு காரணத்தால் கட்டுமான தொழில் முடங்கிவிட்டது. இந்த வீழ்ச்சி உடனே ரியல் எஸ்டேட் வளர்ச்சியை பாதித்தது.
கடந்த ஆண்டு முதல் காலாண்டுடன் இந்த ஆண்டின் முதல் காலாண்டை ஒப்பிட்டுப் பார்த்தால், சிமெண்ட் நுகர்வு 38 சதவீதம் குறைந்துள்ளது. பொருளாதார நடவடிக்கை வேகம் எடுத்தால், சிமெண்ட் நுகர்வு அதிகரிக்கும். இந்த ஆண்டு சிமெண்ட் நுகர்வு 38 சதவீதம் குறைந்துவிட்டது. அதேபோல உற்பத்தி மற்றும் கட்டுமான துறையில், இரும்பின் பயன்பாடு 57 சதவீதம் குறைந்துள்ளது. சரக்கு லாரி உள்ளிட்ட வணிகரீதியான வாகனங்களின் விற்பனை 85 சதவீதம் குறைந்துவிட்டது. நிலக்கரியின் உற்பத்தி மற்றும் நுகர்வு 15 சதவீதம் குறைந்துள்ளது. ஏற்கனவே பொருளாதார மந்தநிலை நீடிப்பதோடு, புதிய தொழில்கள் தொடங்கவில்லை என்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மக்கள் போதுமான அளவு பொருட்கள் மற்றும் சேவைகளை நுகரவில்லை என்றால் சரிவு ஏற்படும். அதன் விளைவு ஏற்றுமதி, இறக்குமதி குறைந்துவிட்டது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

கேள்வி: விவசாயதுறையில் 3.4 சதவீதம் முன்னேற்றம் உள்ளது. விவசாயிகள் நஷ்டத்தை சந்திப்பதாக கூறும் நேரத்தில், இந்த முன்னேற்றம் எப்படி சாத்தியம் ஆனது? மற்ற துறைகளில் வீழ்ச்சி எப்படி ஏற்பட்டது?
நல்ல மழை காரணமாக உணவு தானிய உற்பத்தி அதிகரித்தது. வரலாறு காணாத அளவு உணவு தானிய உற்பத்தி இருந்ததால் இந்தியாவின் உணவு நிறுவனத்தில் சேமிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இது நேரடியாக விவசாயிகளுக்கு பயன் தராது. அவர்கள் விளைவித்த பொருட்களுக்கு விலை கிடைக்கவில்லை என்பது தொடர்கதையாகதான் உள்ளது. மாறாக, உணவு தானிய சேமிப்பு அதிகரித்துள்ளது.
ஜிடிபியில் முக்கியமாக கவனிக்கவேண்டியது தனிநபர் நுகர்வு குறியீடு. அதாவது ஒவ்வொரு தனிநபரும் பொருட்களை வாங்குவதற்கு செலவிடும் பணம் தனிநபர் நுகர்வு என கணக்கிடப்படும். இந்த நுகர்வுதான் ஜிடிபியில் 58 சதவீதத்தை தீர்மானிக்கும். இந்த நுகர்வு பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. கடந்த ஆண்டை விட 1/4பங்கு நுகர்வு குறைந்துவிட்டது. மக்கள் செலவு செய்யவில்லை. வங்கிகளில் முதலீடு அதிகரித்துள்ளது. அதாவது மக்கள் இருக்கும் பணத்தை சேமித்துவிட்டார்கள். செலவு செய்ய தயாராக இல்லை என்பதை உணர்த்துகிறது.
தனிநபர் நுகர்வு செலவு குறையும்போது, அரசாங்கத்தின் செலவு அதிகரிக்கவேண்டும். ஆனால் அதிகரிக்கவில்லை. அதோடு, தொழில் முதலீடுகள் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு தொழில் முதலீடுகளின் அளவு சுமார் 11 லட்சம் கோடியாக இருந்தது, தற்போது அதுவெறும் ஐந்து லட்சம் கோடியாக சுருங்கிவிட்டது. அரசாங்கம் கடன் கொடுத்து தொழில் முதலீடுகளை அதிகப்படுத்துவதாகவும், அதன் மூலம் பொது மக்களின் பொருட்களை வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்று கூறியது. ஆனால் கடன் வாங்கவும், முதலீடுகளை செய்யவும் பலரும் தயாராகவில்லை. இதன் விளைவு மிகவும் கடுமையானதாகவும், நீண்ட காலத்திற்க்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமைந்துவிட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












