You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் மூடல்: வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
சென்னை உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இன்று (புதன்கிழமை) மேல் முறையீடு செய்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட வேண்டுமென தமிழக அரசு விதித்த உத்தரவு செல்லும் என ஆகஸ்ட் 18ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது அந்த ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம்.
ஸ்டெர்லைட் மக்கள் போராட்டமும், வழக்கும்
முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்திவந்தனர்.
இது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டம் பெரும் கலவரத்தில் முடிவடைந்தது. மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதற்குப் பிறகு அந்த ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. 2018 மே 28ஆம் தேதி அந்த ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.
இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையிட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அரசின் கொள்கை முடிவுகள் குறித்து விசாரிக்க பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி வேதாந்தா நிவாரணம் பெறலாம் எனத் தெரிவித்தது.
இந்த வழக்கில் தொடர்ச்சியாக வாதங்கள் நடந்துவந்த நிலையில், எழுத்து மூலமான வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
ஜனவரி 8ஆம் தேதியன்று தீர்ப்பிற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் டி.எஸ். சிவஞானம், வி. பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு ஆகஸ்டு 18ம் தேதி தீர்ப்பளித்தது.
தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஆலைக்கு மின் இணைப்பு தர வேண்டும், குடிநீர் இணைப்பு தர வேண்டும் என்ற மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
பேராசிரியர் ஃபாத்திமா ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டுமென ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு சிப்காட்டில் வழங்கப்பட்ட நிலம் தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நிலுவையில் உள்ளது. ஆகவே ஃபாத்திமா தாக்கல் செய்த மனுவில் தீர்ப்பு ஏதும் வழங்கப்படவில்லை. இந்த இரு வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: