You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஃபேஸ்புக் குழுவுக்கு தடை: தாய்லாந்து அரசர் பற்றி கேள்வி கேட்டதால் நடவடிக்கை மற்றும் பிற செய்திகள்
அரசர் குறித்து கேள்வி: 10 லட்சம் பேர் இருந்த குழுவை தடை செய்த ஃபேஸ்புக்
தாய்லாந்தில் ஏறத்தாழ பத்து லட்சம் பேர் இருந்த ஒரு குழுவுக்கு தடை விதித்து இருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம். அவர்கள் அந்நாட்டின் முடியாட்சி குறித்து விவாதித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தாய்லாந்து அரசு இதில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து இந்த தடையை விதித்தது ஃபேஸ்புக் நிறுவனம்.
தாய்லாந்து அரசிடம் இருந்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்ளச் சட்ட நடவடிக்கைக்கு தாங்களும் தயாராகி வருவதாக பிபிசியிடம் தெரிவித்தது அநிறுவனம்.
தாய்லாந்தில் அரசுக்கு எதிராக பெரும் திரளாக மக்கள் போராடி வருகின்றனர். முடியாட்சியில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கை.
தாய்லாந்தில் முடியாட்சியை விமர்சிப்பது சட்ட விரோதமானது.
"Royalist Marketplace" எனும் ஃபேஸ்புக் குழுவில் ஏறத்தாழ 10 லட்சம் பேர் உள்ளனர். இந்த குழு முடியாட்சி குறித்து விவாதித்ததால், இந்த குழு தாய்லாந்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரம் வெளிநாடுகளிலிருந்து இந்த குழுவை அணுக முடியும்.
புல்வாமா: "ஜெய்ஷ்" தாக்குதல் பற்றி என்ஐஏ குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்கள்
இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிகையை ஜம்முவில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நீதிமன்றத்தில் அந்தத்துறை அதிகாரிகள் இன்று தாக்கல் செய்துள்ளனர்.
அந்த குற்றப்பத்திரிகையில், 19 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதில் 6 பேர் தலைமறைவாக உள்ளனர். 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் கொல்லப்பட்டனர் என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.
விரிவாகப் படிக்க:புல்வாமா: "ஜெய்ஷ்" தாக்குதல் பற்றி என்ஐஏ குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்கள்
JEE-NEET தேர்வுகளை தள்ளிவைக்க கிரேட்டா துன்பெர்க் ஆதரவு
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று நிலவும் காலத்தில் பொறியியல் நுழைவுத் தேர்வு (ஜேஇஇ) மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வான "நீட்" நடத்தப்படாமல் தள்ளிவைக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக துணை நிற்பேன் என்று பருவநிலை மாற்றத்துக்கு எதிரான சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று தமது டிவிட்டர் பதிவில் "கொரோனா பெருந்தொற்று மற்றும் பல இடங்களில் கடுமையான வெள்ளத்தின் தாக்கத்தை லட்சக்கணக்கானோர் அனுபவித்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள மாணவர்கள் தேசிய தேர்வுகளில் எழுத கேட்டுக் கொள்ளப்படுவது நியாயமல்ல என்றும் தேர்வைத் தள்ளி வைக்கக் கோரும் அவர்களுக்கு நான் துணை நிற்பேன் என்றும் கூறியுள்ளார்.
விரிவாகப் படிக்க:JEE-NEET தேர்வுகளை தள்ளிவைக்க கிரேட்டா துன்பெர்க் ஆதரவு
ஆமிர் கானின் தேசப்பற்று: ஆர்எஸ்எஸ் எழுப்பும் கடுமையான கேள்விகள்
இந்தி நடிகர் ஆமிர் கானின் தேசப்பற்று தொடர்பாக ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கின் அதிகாரப்பூர்வ வார பத்திரிகையில் இடம்பெற்ற கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பாலிவுட் திரைத்துறையில் இந்த கட்டுரை பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பஞ்சஜன்யா என்ற ஆர்எஸ்எஸ் வார பத்திரிகையில் சில பாலிவுட் திரைப்பிரபலங்கள் சேதப்பற்று மிக்கவர்கள். ஆனால், ஆமிர் கான் போன்ற சிலரின் சமீபத்திய நடவடிக்கைகளால் அவரது தேசப்பற்று தொடர்பான சந்தேகம் எழுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
விரிவாகப் படிக்க:ஆமிர் கானின் தேசப்பற்று: ஆர்எஸ்எஸ் எழுப்பும் கடுமையான கேள்விகள்
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 90% மயக்கநிலையில் இருந்து மீண்டுவிட்டார் - மகன் சரண்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 90% மயக்கத்தில் இருந்து மீண்டுவிட்டார் என அவரது மகன் சரண் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று மாலையில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில், "என் தந்தைக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பலனளிப்பதாகவும், அவர் 90 சதவீத மயக்கநிலையில் இருந்து விடுபட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் தரும் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கிறது. அவர் விரைவில் மீண்டு வருவார் என பிரார்த்திப்போம்" என கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: