பிரசாந்த் பூஷணுக்கு எதிரான "2009" வழக்கு: தலைமை நீதிபதி பரிசீலனைக்கு அனுப்ப முடிவு

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக 2009ஆம் ஆண்டில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட வேறு அமர்வுக்கு மாற்றுவது குறித்து தலைமை நீதிபதி முடிவெடுக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது

இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் அருண் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா, வரும் செப்டம்பர் 2ஆம் தேதியுடன் தாம் பணியிலிருந்து ஓய்வு பெறவிருப்பதால் இந்த வழக்கை விரிவாக விசாரிக்க முடியாது என்று கூறி செப்டம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

மேலும், இந்த வழக்கை பரிசீலித்து, இந்த வழக்கு செப்டம்பர் 10ஆம் தேதி தலைமை நீதிபதியால் விசாரிக்கப்படும். இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவது அல்லது வேறு உரிய முடிவு எடுப்பது குறித்து அவர் முடிவு செய்வார் என நீதிபதி மிஸ்ரா இன்று கூறினார்.

முன்னதாக இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான், இந்த வழக்கின் நோட்டீஸ் அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரலின் வாதங்கள் கேட்கப்படாமல் போனால், அரசியலமைப்பு கேள்விகளை கருத்தில் கொள்ள முடியாது என்று அவர் கூறினார்

நீதிபதிகள் சில கேள்விகளை

எழுப்பியதைப்போலவே, பிரசாந்த் பூஷண் தரப்பும் சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன என்று வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறினார்.

இந்த விவகாரம் வழக்கு, அரசியலமைப்பு அமர்வின் விசாரணைக்கு உகந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து நீதிபதி மிஸ்ரா, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதா என்பதும் ஒரு கேள்வியே. எனது பதவிக்காலம் நிறைவு பெறவிருப்பதால், இந்த வழக்கை நான்கு முதல் ஐந்து மணி நேரமாவது விசாரிக்க வேண்டும். எனவே, தலைமை நீதிபதியே இதை விசாரித்து உரிய அமர்வுக்கு பரிந்துரைப்பது பற்றி முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.

நிலுவை வழக்குகள்

தற்போதைய வழக்கு பிரசாந்த் பூஷண், 2009ஆம் ஆண்டில் டெஹல்கா இணையதள இதழுக்கு அளித்த நேர்காணல் தொடர்புடையது. அதில் அப்போதைய தலைமை நீதிபதி உட்பட 16 பேருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் வெளியிட்டதால நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட்டு வழக்கு விசாரிக்கப்பட்டது. பதினோரு ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு நிலுவையிலிருந்த வழக்கில் இன்று வேறு அமர்வுக்கு மாற்றுவது தொடர்பான அறிவிப்பை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தொடர்பாக சர்ச்சைக்குரிய தகவலை வெளியிட்டதாக மற்றொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பது தொடர்பான பதிலை பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது. ஆனால், அவ்வாறு மன்னிப்பு கேட்பது மனசாட்சிக்கு விரோதமானது என்று கூறி அவரது சார்பில் நேற்று எழுத்துப்பூர்வ பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது..

(உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோரை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் இப்போது விசாரித்து வருகிறது)

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: