கொரோனா சமூக முடக்கம்: நான்காம் கட்ட தளர்வுகள் - தமிழகத்தில் எப்போது பொது போக்குவரத்து இயங்கும்?

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி:நான்காம் கட்ட தளர்வுகள் - எவையெல்லாம் இயங்கும், எதற்கெல்லாம் கட்டுப்பாடு?

தமிழகத்தில் எப்போது பொது போக்குவரத்து இயங்கும்? இ பாஸ் முறை ரத்து செய்யப்படும் என்பதுதான் கேள்வியாக உள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அதில், மெட்ரோ ரெயில் களை இயக்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் தியேட்டர்களை திறக்க தடை நீடிக்கும் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த ஜூன் 1-ந் தேதியில் இருந்து மாதந்தோறும் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

4-ம் கட்ட தளர்வுகள், செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இந்த தளர்வுகளை இவ்வார இறுதியில் மத்திய அரசு அறிவிக்கிறது.

இந்நிலையில், 4-ம் கட்ட தளர்வுகள் எப்படி இருக்கும் என்று மத்திய அரசு உயர் அதிகாரிகள் 2 பேர் தகவல் தெரிவித்தனர்.

அவர்கள், "4-ம் கட்ட தளர்வின்போது, நாடு முழுவதும் மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், அந்தந்த மாநில அரசுகள், அங்குள்ள கொரோனா சூழ்நிலையை பொறுத்து, மெட்ரோ ரெயிலை இயக்குவது பற்றி இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம்.

பள்ளி, கல்லூரிகளை திறக்க இப்போதைக்கு அனுமதி அளிக்கப்படாது. ஆனால், பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. ஆனால், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

சினிமா தியேட்டர்களில் சமூக இடைவெளி விட்டு குறைவான பார்வையாளர்களை அனுமதிப்பது தியேட்டர் அதிபர்களுக்கும், சினிமா தயாரிப்பாளர்களுக்கும் வியாபாரரீதியாக பலன் அளிக்காது. எனவே, சினிமா தியேட்டர்களுக்கு தடை நீடிக்கும்.

அரசியல் பொதுக்கூட்டங்கள், சமூக, கலாசார, ஆன்மிக, கல்வி, விளையாட்டு நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு தடை நீடிக்கும். மதுபான பார்களில் மது விற்க அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது.

4-ம் கட்ட தளர்வில், எது எதற்கு தடை என்பதை மட்டுமே மத்திய அரசு அறிவிக்கும். மற்ற செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். இருப்பினும், மாநில அரசுகள், கூடுதலான செயல்பாடுகளுக்கு தடை விதித்துக்கொள்ளலாம்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிடப்படும்,"என்றனர்.

செப்டம்பர் 1ஆம் தேதி முதல், சினிமா, தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகளை நடத்த மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்து இருந்தது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்து இருந்தது.

இந்நிலையில், இந்த அனுமதியும், வழிகாட்டு நெறிமுறைகளும் இணைய தொடர்கள், அனைத்துவகையான படைப்புகள் உள்பட மின்னணு ஊடக நிகழ்ச்சி தயாரிப்புகள் அனைத்துக்கும் பொருந்தும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நேற்று விளக்கம் அளித்தது.

இந்து தமிழ் திசை: எஸ்.வி.சேகரிடம் போலீஸார் விசாரணை

தேசியக் கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி. சேகரிடம் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். மீண்டும் வரும் 28-ம் தேதி அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. அவரது முன்ஜாமீன் மனு குறித்து போலீஸார் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி.

தேசியக் கொடியை அவமதித்த தாக நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது சென்னையை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர், இணையவழியில் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸார் எஸ்.வி.சேகர் மீது தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று காலை 11.15 மணி அளவில் வந்த எஸ்.வி.சேகர், சைபர் கிரைம் போலீஸார் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீஸார் சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன்: நாட்டின் வலிமை, துணிவு, உண்மை, வளர்ச்சி, புனிதம் போன்றவற்றையே தேசியக் கொடியின் மூவர்ணம் குறிக்கிறது. ஆனால், இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என எஸ்.வி.சேகர் வேறு அர்த்தம் கூறியுள்ளார். தேசியக் கொடியை அவமதிப்பது கிரிமினல் குற்றம்.

எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடேஷ் மகாதேவன்: தேசியக் கொடி தொடர்பாக இந்து, இஸ்லாமியர் ஒற்றுமையை வலியுறுத்தி காந்தியடிகள் தெரிவித்த கருத்தையே எஸ்.வி.சேகரும் தெரிவித்தார்.

அரசு தரப்பு: காந்தியடிகளின் கருத்து, அரசியலமைப்பு சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. அரசியலமைப்பு சட்டரீதியாக தேசியக் கொடியின் மூவர்ணத்துக்கு விளக்கம் தரப்பட்டுள்ள நிலையில், மதக் கலவரத்தை தூண்டும் வகையில் எஸ்.வி.சேகர் பேசியுள்ளார்.

எஸ்.வி.சேகர் தரப்பு: சுதந்திர தினத்தன்று அறிவாலயத்தில் தேசியக் கொடியை அவமதித்ததாக மு.க.ஸ்டாலின் மீது அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் கொடுத்த புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காத நிலையில், எஸ்.வி.சேகர் மீது மட்டும் பழிவாங்கும் ரீதியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆகஸ்ட் 28 வரை அவரை கைது செய்ய தடை விதிக்க வேண்டும்.

அரசு தரப்பு: குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு எஸ்.வி.சேகர் இன்று (நேற்று) ஆஜரானார். விசாரணை முடியாததால், 28-ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு கூறப்பட்டுள்ளது. அவர் தரும் விளக்கத்தை பொருத்தே கைது செய்வதா, வேண்டாமா என்று முடிவு எடுக்கப்படும். கைது செய்வதாக இருந்தால் நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு வாதம் நடந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இதுதொடர்பாக போலீஸார் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

தினமணி: ஓட்டுநா் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழ் காலவதியாகும் நாள் டிசம்பா் 31 வரை நீட்டிப்பு

ஓட்டுநா் உரிமம் உள்பட பலவேறு மோட்டாா் வாகன ஆவணங்கள் காலாவதியாகும் நாளை டிசம்பா் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவியுள்ள சூழலை கருத்தில் கொண்டு மோட்டாா் வாகனச் சட்டம் 1988, மத்திய மோட்டாா் வாகன விதிகள் 1989-இன் படி ஓட்டுநா் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழ், தகுதிச் சான்றிதழ் உள்ளிட்டவை காலவதியாகும் நாள் டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் காலாவதியான ஆவணங்கள், டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் காலாவதியாக உள்ள ஆவணங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். இந்த ஆவணங்களை டிசம்பா் 31-ஆம் தேதி வரை செல்லத்தக்கதாக கருதும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாா்ச் மாதம் 30-ஆம் தேதி ஓட்டுநா் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழ், தகுதிச் சான்றிதழ் உள்ளிட்டவை காலவதியாகும் நாளை நீட்டித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில் ஜூன் 30-ஆம் தேதி வரை இந்த ஆவணங்கள் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னா் இந்த ஆவணங்கள் செல்லுபடியாகும் நாள் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை இரண்டாம் முறையாக நீட்டிக்கப்பட்டது.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: