You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரசாந்த் பூஷண்: மனசாட்சிக்கு விரோதமாக மன்னிப்பு கேட்க மாட்டேன் - உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோரை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக விசாரிக்கப்பட்டு வரும் வழக்கில், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தமது கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்திய விவகாரத்தில் மனசாட்சிக்கு விரோதமாக மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கடந்த வாரம் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்ற விசாரணையின்போது, பிரசாந்த் பூஷணுக்கு விதிக்கப்படும் தண்டனை தொடர்பான வாதங்கள் நடைபெற்றன. அப்போது, தமது கருத்தில் தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாக பிரசாந்த் பூஷண் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், தண்டனை விதிக்கப்படும் முன்பாக, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரசாந்த் பூஷண் தனது செயலுக்கு மன்னிப்பு தெரிவித்துக் கொள்வது குறித்து இரண்டு, மூன்று நாட்களில் முடிவெடுக்க அவகாசம் தருவதாக கூறியிருந்தனர்.
இந்த நிலையில், இன்று பிரசாந்த் பூஷணின் விளக்கம் அடங்கிய மனுவை அவரது வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் பிரசாந்த் பூஷண், "உத்தமமான வரலாற்றில் இருந்து உச்ச நீதிமன்றம் நோக்கம் விலகுவதாக நான் நம்பும்போது அது பற்றி பேசுவது, குறிப்பாக என்னைப்போன்ற நீதிமன்றப் பணியாற்றும் வழக்கறிஞரின் கடமை" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், "நன்னம்பிக்கை அடிப்படையிலேயே எனது கருத்தை வெளிப்படுத்தேனேயொழிய, உச்ச நீதிமன்றத்தையோ அல்லது குறிப்பாக தலைமை நீதிபதியையோ களங்கப்படுத்துவதற்காக அந்த கருத்தை வெளியிடவில்லை. ஆனால், அரசியலமைப்பு மற்றும் மக்கள் உரிமைகளின் பாதுகாவலராக இருக்கும் தமது நீண்ட கால பொறுப்பில் இருந்து நீதிமன்றம் விலகிச்செல்லாமல் இருக்கும் என்பதற்காகவே, ஆக்கப்பூர்வ விமர்சனத்தை முன்னைத்தேன்" என்று பிரசாந்த் பூஷண் மனுவில் விளக்கியுள்ளார்.
"அந்த நம்பிக்கையையே எனது டிவிட்டர் பதிவுகள் பிரதிபலித்தன. பொதுவெளியில் அத்தகைய கருத்துகளை வெளிப்படுத்துவது, ஒரு குடிமகன் மற்றும் நீதிமன்றத்தில் பணியாற்றும் உண்மையான வழக்கறிஞரின் உயரிய கடமை. எனவே, இதுபோன்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியதற்காக நிபந்தனையுடனோ, நிபந்தனையற்ற வகையிலோ மன்னிப்பு கோருவது நேர்மையற்றதாக இருக்கும். மன்னிப்பு கோருவதென்பது ஏதோ பேருக்கு சொல்வது போல இருக்கக் கூடாது. இந்த நீதிமன்றம் கூறியதை போல, அது உண்மையானதாக இருக்க வேண்டும்" என்று பிரசாந்த் பூஷண் மனுவில் கூறியுள்ளார்.
மேலும் அவர், "உண்மையான வகையில் நான் வெளியிட்ட கருத்துகளின் முழு விவரத்தையும் நான் குறிப்பிட்டபோதும் அதை நீதிமன்றம் உரிய வகையில் அணுகவில்லை. எனவே, நான் உண்மையாகக் கருதிய மற்றும் இந்த நீதிமன்றத்தில் ஏற்கெனவே பதிவு செய்த கருத்திலிருந்து தற்போது விலகினால், அது நேர்மையற்ற மன்னிப்பாகவே அமையும். நான் மிக உயரியதாக போற்றும் உச்ச நீதிமன்றத்தில் அப்படி செய்தால், அது எனது மனசாட்சியை அவமதிக்கும் செயலாகவே எனது பார்வையில் படும்" என்று பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார்.
வழக்கு என்ன?
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் சமூக செயல்பாட்டாளருமான பிரசாந்த் பூஷணை நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி குற்றவாளியாக அறிவித்தது.
கடந்த ஜூன் மாதம், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஒரு உயர்தர மோட்டார் சைக்கிளில் இருப்பது போன்ற படம் மற்றும் நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இதுவரை இருந்த நான்கு பேரின் பங்களிப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பிரசாந்த் பூஷண் தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவு செய்திருந்தார்.
இது தொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மஹேக் மஹேஸ்வரி, கடந்த ஜூலை 2-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், கடந்த ஜூன் 29-ஆம் தேதி தமது டிவிட்டர் பக்கத்தில் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரூ. 50 லட்சம் மதிப்பிலான பாஜக தலைவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளுடன் நாக்பூரில் உள்ள ராஜ் பவன் வளாகத்தில் ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுகிறார். அதுவும் உச்ச நீதிமன்றத்தை முடக்கி விட்டு குடிமக்கள் நீதி பெறும் அடிப்படை உரிமையை மறுக்கும் நிலையில் என்றவாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்த டிவிட்டர் சர்ச்சை தகவல் தொடர்பான விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக ஏற்று பிரசாந்த் பூஷணுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
முன்னதாக, ஜூன் 27-ஆம் தேதி "எதிர்கால வரலாற்றாய்வாளர்கள், கடந்த 6 ஆண்டுகளில் ஒரு முறையான அவசரநிலை இல்லாமல் கூட இந்தியாவில் ஜனநாயகம் எவ்வாறு அழிக்கப்பட்டுவிட்டது என்பதைப் பார்க்கும்போது, அவர்கள் குறிப்பாக இந்த அழிவில் உச்சநீதிமன்றத்தின் பங்கை, மேலும் குறிப்பாக தலைமை நீதிபதிகளாக இருந்த நால்வரின் பங்கை பார்ப்பார்கள்" என்று பிரசாந்த் பூஷண் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சர்ச்சை டிவிட்டர் தகவல்கள் தொடர்பாக பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தமது டிவிட்டர் தகவல்கள் நியாயமானவை என்று கூறி, அதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதக்கூடாது என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
- எஸ்.பி.பாலசுப்ரமணியம்: கொரோனா தொற்றில் இருந்து மீண்டாரா? எஸ்.பி. சரண் விளக்கம்
- ஆபாசப் பட நடிகைக்கு டிரம்ப் பணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
- ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா - தனி நாணயம் வெளியிட்டார் நித்தியானந்தா
- இரான் வீழ்த்திய விமானத்தின் கருப்பு பெட்டி பதிவு செய்த 19 நொடிகள்
- டிக் டாக் டிரம்ப் அரசை எதிர்த்து நீதிமன்றம் செல்வது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: