டிக் டாக் காணொளி செயலி அமெரிக்காவின் டிரம்ப் அரசை எதிர்த்து நீதிமன்றம் செல்வது ஏன்?

தங்கள் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக டிக்டாக் நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனத்துடன் வரும் செப்டம்பர் மாத மத்தி முதல் பரிமாற்றங்கள் எதையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று டிரம்ப் நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

அமெரிக்கப் பயனாளிகளின் தகவல்களை சீன அரசுக்கு பைட்டான்ஸ் நிறுவனம் வழங்கி விடும் என்ற கவலை தங்களுக்கு உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அமெரிக்க பயனாளிகளின் தரவுகள் எதையும் இதுவரை சீன அதிகாரிகளிடம் தாங்கள் கொடுக்கவில்லை என்று டிக்டாக் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த செயலிக்கு அமெரிக்காவில் மட்டும் சுமார் 8 கோடி பயனாளிகள் உள்ளனர்.

அமெரிக்க அரசு ஊழியர்கள் பயணிக்கும் இடங்கள், அவர்கள் குறித்த தரவுகள் ஆகியவற்றை சேகரித்து அவர்களை மிரட்டவும் அமெரிக்க நிறுவனங்களை உளவு பார்க்கவும் டிக்டாக் செயலியை சீன அரசு பயன்படுத்தி வருவதாக டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

அமெரிக்கர்களின் தனிநபர் மற்றும் சொத்து குறித்த தகவல்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிந்து கொள்வதற்கு இந்த தரவுகள் சேகரிப்பு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று தனது உத்தரவில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிக்டாக் செயலியின் பயன்பாடு அமெரிக்காவில் அதிகரித்து வருவது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு ஆபத்தாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், இதுதொடர்பாக ஓராண்டுக்கும் மேலாக அரசு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து வருவதாக கூறியுள்ள பைட்டான்ஸ் நிறுவனம், உண்மை தகவல்கள் குறித்து அமெரிக்க அரசு நிர்வாகம் கவனம் செலுத்துவதில்லை என்று கூறுகிறது.

எங்கள் நிறுவனம் மற்றும் பயனாளிகள் நியாயமாக நடத்தப்பட வேண்டும் எனும் நோக்கில் எங்களுக்கு டிரம்பின் நிர்வாக உத்தரவை நீதிமன்றம் வாயிலாக எதிர்ப்பதை தவிர வேறு வழியில்லை என்று டிக்டாப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகிறார்.

சீன சமூக ஊடக செயலியான வீ-சாட் (WeChat) செயலியை டிரம்ப் நிர்வாகம் இதேபோன்ற தடைக்கு உட்படுத்தி இருந்ததை எதிர்த்து சீனாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கர்கள் சிலர் வெள்ளியன்று நீதிமன்றத்தை நாடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டென்சென்ட் எனும் நிறுவனத்துக்கு இந்த செயலி சொந்தமானது

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக செயலிகள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளதால் சீனாவுடன் தொடர்பில் இருக்கும் பல சீன வம்சாவளி அமெரிக்கர்களுக்கு மிகவும் முக்கியமான சமூகத் தகவல் தொடர்புத் தளமாக வீ-சாட் இருக்கிறது.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் டிக்டாக் மற்றும் வீ-சாட் செயலிகளுக்கு எதிரான தடைகள் சீனாவுக்கு எதிராக டிரம்ப் தொடர்ந்து மேற்கொண்டு வரும் பிரசாரத்தின் ஓர் அங்கமாகவே இருக்கிறது.

டிரம்ப் அதிபர் பதவிக்கு வந்த காலம் முதல் சீனா மற்றும் அமெரிக்கா இடையில் வர்த்தகப் போர் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: