டிக்டாக் மீது புதிய தடை - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவு

டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸுடன் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை தடை செய்வதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

"நமது நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக டிக்டாக்கின் உரிமையாளர்கள் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது" என்று அந்த நிர்வாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இன்னும் 45 நாளில் இந்த தடையுத்தரவு நடைமுறைக்கு வந்தவுடன் அமெரிக்காவை சேர்ந்த எந்த நிறுவனமும் டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸூடன் எவ்வித பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது.

டிக்டாக் நிறுவனம் சீன அரசால் கட்டுப்படுத்தப்படுவதாகவும், அது பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன அரசுடன் பகிர்ந்து கொள்வதாகவும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அந்த நிறுவனம் மறுப்பு தெரிவிக்கிறது.

இந்த நிலையில், சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தொழில்நுட்ப நிறுவனமான டென்செண்டிற்கு சொந்தமான வீசாட் என்ற செயலி மீதும் இதேபோன்றதொரு நடவடிக்கை எடுக்கும் நிர்வாக உத்தரவையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.

என்ன சொல்கிறார் டிரம்ப்?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த இரண்டு நிர்வாக உத்தரவுகளிலும் "தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் வழங்கல் தொடர்பில் தேசிய அவசரநிலையை சமாளிக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"சீனாவுக்கு சொந்தமான திறன்பேசி செயலிகளின் பயன்பாடு அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வருவது நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதாரத்தை அச்சுறுத்துகிறது" என்று அதில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

டிக்டாக் மற்றும் வீசாட் முதலிய இரண்டு செயலிகளையும் டிரம்ப் "அச்சுறுத்தல்" என்று குறிப்பிடுகிறார். மேலும், இந்த செயலிகளின் உரிமையாளர்கள் அல்லது துணை நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் "பரிவர்த்தனைகள் தடைசெய்யப்படும்" என்று டிரம்ப் பிறப்பித்துள்ள நிர்வாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

டிக்டாக்கின் தரவு சேகரிப்பு அமெரிக்க அரசாங்க ஊழியர்களைக் கண்காணிக்கவும், அவர்களை அச்சுறுத்தி உளவு பார்க்கவும் சீனாவை அனுமதிப்பதாக டிரம்ப் கையெழுத்திட்டுள்ள நிர்வாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் அமெரிக்க பாதுகாப்புப்படைகளில் பணியாற்றுபவர்கள் அரசுக்கு சொந்தமான திறன்பேசிகளில் டிக்டாக்கை பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளதை டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட பைட் டான்ஸ் மற்றும் டென்சென்ட் ஆகிய நிறுவனங்கள் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டன.

டிரம்பின் இந்த திடீர் நடவடிக்கையால் டிக்டாக்கின் அமெரிக்க வியாபார உரிமத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முடிவில் ஏதாவது மாற்றமிருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக, இந்தியாவில் திறன்பேசி பயன்பாட்டாளர்களுக்கிடையே மிகவும் பிரபலமாக இருந்த டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர், ஷேர்இட், யு.சி. புரௌசர் மற்றும் கிளாஸ் ஆஃப் கிங்ஸ் உள்ளிட்ட 59 செயலிகளை கடந்த ஜூன் மாதம் இந்திய அரசு தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: