You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - சீனா எல்லை பதற்றம்: சீனாவின் ஆலோசனையை நிராகரித்த இந்தியா
இந்தியா மற்றும் சீனா இடையே நிலவி வரும் எல்லை பதற்றத்தை குறைப்பதற்காக இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், லடாக்கின் கிழக்கிலுள்ள ஃபிங்கர் பகுதியிலிருந்து சரிசமமான தொலைவில் இரு நாட்டுப் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டுமென்று சீனா கூறியுள்ளதை இந்தியா நிராகரித்துள்ளது.
வெளியுறவு அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர், மேலும் அதிகமான எண்ணிக்கையில் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பும் முயன்று வருகின்றன என்று ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜூன் மாத மத்தியில் எல்லை மோதல் நடக்கும் முன்னர் இருந்தே, மூன்று மாத காலத்துக்கு மேலாக இரு நாட்டு ராணுவத்தினரும் சந்தித்து எல்லைப் பதற்றம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பாங்கோங் த்சோ ஏரி அருகே உள்ள ஃபிங்கர் பகுதி அருகே சீனாவின் படைகள் தற்போது நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
இதுமட்டுமல்லாமல் ஃபிங்கர்- 5 பகுதி முதல் ஃபிங்கர் - 8 பகுதி வரையிலான ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஏப்ரல் - மே மாதங்களில் இருந்த பகுதிகளைத் தாண்டி ராணுவ தளவாடங்களையும் ராணுவத் துருப்புகளையும் சீனா நிலை நிறுத்தியுள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இரு நாடுகளும் சம தொலைவில் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்பதை நிராகரித்துள்ள இந்தியா, சீனப் படைகள் இதற்கு முன்பு எந்த இடத்தில் இருந்ததோ அதே இடத்துக்கு திரும்பச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளது என்கிறது அந்தச் செய்தி.
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் எல்லையாக கருதப்படும் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் கட்டுமானங்கள் எதையும் மேற்கொள்ளக்கூடாது என்று 1993 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்களை சீனா மீறியது குறித்தும் இந்தியா கேள்வி எழுப்பியதாக அரசுத் தரப்பு வட்டாரங்கள் கூறுகிறது என்கிறது ஏ.என் .ஐ செய்தி.
மெய்யான கட்டுப்பாட்டு கோட்டுக்கென (Line of Actual Control) தெளிவான வரையறை என்று எதுவும் இல்லை.
சீனா ஒரு கோட்டையும் இந்தியா இன்னொரு கோட்டையும் எல்லையாக கருதுவதால் சில சமயங்களில் ஒரே பகுதியை இரு நாடுகளுமே தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்று கூறுகின்றன.
ஃபிங்கர்- 8 வரையிலான பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று இந்தியா கூறுகிறது. ஆனால், அந்த பிராந்தியத்தில் சீனா கட்டுமானங்களை எழுப்பியுள்ளது.
சீனா படைகளை விலக்கிக் கொண்ட பின்னரே கிழக்கு லடாக், டெப்சாங் சமவெளிகள் மற்றும் தவுலத்பெக் ஓல்டி ஆகிய பகுதிகளில் பதற்றத்தைக் குறைப்பது குறித்து இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று இந்தியா தரப்பு உறுதியாக இருப்பதாக ஏ.என்.ஐ செய்தி கூறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: