ராமர் கோயிலுக்கு பிறகு, இப்போது பொது சிவில் சட்டத்தின் பக்கம் கவனம் திரும்புமா?

பட மூலாதாரம், AFP/GETTY
- எழுதியவர், சல்மான் ராவி
- பதவி, பிபிசி
அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர், பாரதிய ஜனதா கட்சி, தனது தேர்தல் அறிக்கையின் இரண்டு முக்கிய வாக்குறுதிகளை பூர்த்தி செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதலாவதாக, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்வது, இரண்டாவதாக, அயோத்யாவில் ராமர் கோயில் கட்டுதல்.
ராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழா முடிந்த மறுநாளே, சமூக ஊடகங்களில் பலர், மூன்றாவது வாக்குறுதியான பொது சிவில் சட்டம் அதாவது 'யூனிஃபார்ம் சிவில் கோட்' அமல்படுத்துவது பற்றி பதிவிட்டு, பாஜகவின் கவனத்தை ஈர்த்தனர்.
சமூக ஊடக பயனர்கள், காலையில் இருந்தே அதைப் பற்றி ட்வீட் செய்யத் தொடங்கினர். இவற்றில், மிகவும் கவனிக்கவேண்டிய ட்வீட் ,பத்திரிகையாளர் ஷாஹித் சித்திகி என்பவருடையது. அவர் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படக்கூடிய தேதியை ஊகித்து, 2021-ஆவது ஆண்டு, ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் அரசு, இந்தப் பணியை முடிக்கும் என்று எழுதினார்.
இந்தியாவில், பொது சிவில் சட்டம் குறித்த விவாதம், நாடு சுதந்திரம் பெற்றது முதல் நடந்து வருகிறது.
இந்திய அரசியலமைப்பின் வடிவமைப்பாளர்கள், அனைத்து குடிமக்களுக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். இதனால் அவர்களின் திருமணம், விவாகரத்து, சொத்து - பரம்பரை வாரிசு மற்றும் தத்தெடுத்தல் உரிமையை கொண்டுவர முடியும்.

இந்தப் பிரச்சனைகளை பொதுவாக வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் மட்டத்தில் தீர்த்துக்கொள்கின்றனர்.
அனைத்து மதத்துக்கும் ஒரேசட்டம் என்ற விவாதம்
இந்தச்சலுகை 'டைரக்டிவ் ப்ரின்ஸிபள்ஸ் ஆஃப் ஸ்டேட் பாலிஸி,' அதாவது 'மாநிலக் கொள்கையின் வழிநடத்தும் கோட்பாடுகளில்' வைக்கப்பட்டது. ஆயினும்கூட, அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நாட்டில் ஒரு பொது சிவில் சட்டத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்று கருதினர்.
இந்தியாவில் உள்ள சமூக பன்முகத்தன்மையைக் கண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் ஆச்சரியப்பட்டதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். அவர்கள் இந்துக்களாக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும், பார்சிகளாக இருந்தாலும், கிறிஸ்துவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவருக்கும் தனித்தனி சட்டங்கள் உள்ளன என்பதும் அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
இந்த காரணத்துக்காக அப்போதைய பிரிட்டிஷ் அரசு, அந்தந்த சமூகங்களின் பாரம்பரிய சட்டங்களின் அடிப்படையில் மத விஷயங்களை தீர்க்கத் தொடங்கியது.

பட மூலாதாரம், Getty Images
இந்த காலகட்டத்தில் ராஜா ராம்மோஹன் ராய் உட்பட பல சமூக சேவையாளர்கள், இந்து சமுதாயத்துக்குள் மாற்றத்தைக் கொண்டுவர பணியாற்றினர். இதில் உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம் போன்றவற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பிரசாரம் தொடங்கப்பட்டது.
சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதலாவது அரசு, 'இந்து கோட் (சட்ட) மசோதா' வை கொண்டுவந்தது. இது, ஒடுக்கப்பட்ட இந்து சமுதாயத்தின் பெண்களை, அந்த நிலையில் இருந்து விடுவிக்க வேலை செய்யும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்து சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்தது.
எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெரும்பான்மை இந்து சமுதாயத்தின் உரிமைகள் தொடர்பான விஷயம் இது என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் மட்டுமே இது குறித்து முடிவெடுக்க முடியும் என்று வாதிட்டனர்.
நேருவின் அரசு, இந்துக்களை மட்டுமே இதன்கீழ் கொண்டுவர நினைக்கிறது, அதே நேரத்தில் மற்ற மதத்தினர் தங்கள் பாரம்பரிய நடைமுறைகளைப் பின்பற்றலாம் என்பதால் சிலர் கோபமடைந்தனர்,
இந்து சட்ட மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், 1952 இல் இந்துக்களின் திருமணம் மற்றும் பிற விஷயங்களில் தனித்தனி சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
சில முக்கிய சட்டங்கள்
1955-ஆவது ஆண்டில், 'இந்து திருமண சட்டம்' உருவாக்கப்பட்டது, இதில் விவாகரத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதோடு கூடவே, வெவ்வேறு சாதியினருக்கு இடையிலான திருமணமும் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் இதன்கீழ், ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் சட்டவிரோதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1956-ஆவது ஆண்டில், 'இந்து வாரிசு சட்டம்', 'இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம்', மற்றும் 'இந்து சிறுபான்மை மற்றும் பாதுகாவலர் சட்டம்' ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
சீக்கியர்கள், பெளத்தர்கள் மற்றும் சமண மதத்தைப் பின்பற்றுபவர்களும் , இந்துக்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர்.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது கூட, இந்தியாவில் முஸ்லிம்களின் திருமணம், விவாகரத்து மற்றும் வாரிசு தொடர்பான வழக்குகள் ஷரியாவின்படி முடிவு செய்யப்பட்டன.
இந்தச்சட்டம் 'முகமதிய சட்டம்' என்று அழைக்கப்படுகிறது. இது அதிகம் விளக்கப்படவில்லை என்றாலும், 'முகமதிய சட்டம்' என்பது 'இந்து சட்ட மசோதா' மற்றும் இதுபோன்ற பிற சட்டங்களுக்கு சமமானதாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த சட்டம், 1937 முதல் செயல்பட்டு வருகிறது.
ஷா பானோ வழக்கால் ஏற்பட்ட திருப்பம்
இந்த சட்ட அமைப்பு , அரசியலமைப்பில் மத சுதந்திரத்துக்கான உரிமை அதாவது பிரிவு 26 ன் கீழ் செய்யப்பட்டது. இதன் கீழ், அனைத்து மத பிரிவுகளுக்கும், மதங்களுக்கும் பொது ஒழுங்கு மற்றும் அறநெறி விஷயங்களை நிர்வகிக்க சுதந்திரம் கிடைத்தது.
1985-ஆவது ஆண்டில் மத்திய பிரதேசத்தில் வசிக்கும் ஷா பானோ, தனது கணவரால் விவாகரத்து செய்யப்பட்டார். பின்னர் அவர் உச்சநீதிமன்றத்தை அணுகியபோது ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஷா பானோவுக்கு ஆயுள் முழுவதும் உதவித் தொகை வழங்குமாறு கணவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஷா பானோ வழக்கு தொடர்பாக பெரும் சலசலப்பு ஏற்பட்டது, அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி தலைமையில் மத்திய அரசு, 'முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து உரிமை பாதுகாப்பு) சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன்மூலம் ஷா பானோ வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்தானது. விவாகரத்துக்குப் பிறகு 90 நாட்களுக்கு வாழ்வாதார தொகை கொடுக்கப்படவேண்டும், ஆயுள் முழுவதற்கும் அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொருந்தும் 'சிவில் திருமண சட்டம்' வந்தது.
இந்த சட்டத்தின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் சட்டவிரோதமானது. இந்தச் சட்டத்தின் கீழ், திருமணம் செய்வோர், இந்தியாவின் வாரிசு சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர், மேலும் விவாகரத்து வழக்கில், அனைத்து சமூகங்களுக்கும் ஒரே போன்ற ஜீவனாம்சம் வழங்கவும் வகை செய்யப்பட்டது.
முத்தலாக் மற்றும் முஸ்லிம் பெண்களின் உரிமைகள்
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உலகில் 22 இஸ்லாமிய நாடுகள் முத்தலாக், அதாவது மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்யும் முறையை முற்றிலுமாக ஒழித்துவிட்டன.
இதில் பாகிஸ்தான், வங்கதேசம், துருக்கி, துனீஷியா, அல்ஜீரியா போன்ற நாடுகள் அடங்கும்.
பாகிஸ்தானில் முத்தலாக் நடைமுறையில் மாற்றம் செய்யும் நடவடிக்கை, 1955 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் முகமது அலி போக்ரா, மனைவி இருக்கும்போதே தனது தனிப்பட்ட செயலாளரை திருமணம் செய்துகொண்ட ஒரு நிகழ்விற்குப்பிறகு தொடங்கியது.
இந்த திருமணம் பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பாகிஸ்தான் அரசு, ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஆணையத்தை அமைத்தது.
இப்போது, பாகிஸ்தானில் உள்ள விதிகளின் கீழ், ஒரு நபர் முதல் முறையாக தலாக் கூறியவுடன்,'யூனியன் கவுன்சில்' தலைவருக்கு நோட்டீஸ் வழங்குவது கட்டாயமாகும். அதன் நகலை மனைவியிடம் வழங்குவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், AFP/Getty Images
பாகிஸ்தான் போன்ற ஒரு இஸ்லாமிய நாட்டில், இந்த விதிகளை மீறினால், ஓராண்டு சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்தியாவில் பல விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பின்னர், முத்தலாக் தடுப்பு சட்டத்தை உருவாக்குவதில் இறுதியாக வெற்றி கிடைத்தது.
புதிய சட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம் சமுதாய பெண்கள் பயனடைந்ததாக மத்திய அரசின் சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகிறார். சட்டத்தின் காரணமாக, விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.
2016 ஆம் ஆண்டில், இந்திய சட்ட ஆணையம் 'பொது சிவில் சட்டம் ', அதாவது யூனிஃபார்ம் சிவில் கோட் குறித்து பொது மக்களின் கருத்தை நாடியது. இதற்காக, அனைத்து செய்தித்தாள்களிலும் வினாப்பட்டியலை ஆணையம் வெளியிட்டது.
இதில், மொத்தம் 16 விஷயங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சட்டம் இருக்க வேண்டுமா என்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
பொது சிவில் சட்டத்தின் பக்கம் திரும்ப வேண்டுமா?
திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, பாதுகாவலர், ஜீவனாம்சம் மற்றும் வாரிசு தொடர்பான கேள்விகள், வினாப்பட்டியலில் கேட்கப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
ஒரே மாதிரியான உரிமைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், நாட்டின் பன்முகத்தன்மையைப் பேணுகின்ற ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டுமா என்பதிலும் ஆணையம் ஒரு கருத்தை கோரியது. பொது சிவில் சட்டம், ' சுய விருப்பமாக' இருக்க வேண்டுமா என்றும் மக்களிடம் கேட்கப்பட்டது.
பல தார மணம் அதாவது பாலிகாமி, பல கணவர் முறை அதாவது பாலியாண்ட்ரி, குஜராத்தில் நடைமுறையில் உள்ள நட்பு ஒப்பந்தம் உள்ளிட்ட பிற சமூகங்கள் மற்றும் சாதிகளில் நிலவும் சில நடைமுறைகள் குறித்தும் மக்களின் கருத்து கோரப்பட்டது.
இந்த நடைமுறைகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை, ஆனால் அவை சமூகத்தின் சில இடங்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல இடங்களில், இன்றும் சில நம்பிக்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
குஜராத்தில் 'நட்பு ஒப்பந்தம்' என்ற நடைமுறை நிலவுகிறது. இந்த ஒப்பந்தம் மாஜிஸ்திரேட் கையொப்பமிட்டு அங்கீகரிப்பதால், சட்டப்பூர்வமானதாக உள்ளது.
இதுபோன்ற நம்பிக்கைகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமா அல்லது அவை சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட வேண்டுமா என்று சட்ட ஆணையம் கேட்டிருந்தது.
ஆணைக்குழு , மக்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. ஆனால் இந்த அறிக்கையின் முடிவில் என்ன நடந்தது என்பது இன்னும் தெரியவில்லை.
முத்தலாக் விவகாரத்தில் அரசு ஒரு சட்டத்தை இயற்றியது போலவே, பொது சிவில் சட்டமும் இயற்றப்படக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
சமுதாயத்தில் நிலவும் சில நடைமுறைகளைப் பார்ப்போம்:
பலதார மணம் (பாலிகாமி)
1860 ஆம் ஆண்டில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 494 மற்றும் 495 பிரிவுகளின் கீழ் கிறிஸ்தவர்களிடையே பலதார மணம் தடைசெய்யப்பட்டது. 1955 ஆம் ஆண்டில், இந்து திருமணச் சட்டம், இந்துக்களுக்கு மனைவி இருக்கும்போது இரண்டாவது திருமணத்தை சட்டவிரோதமாக்கியது.
1956 ஆம் ஆண்டில் கோவாவின் இந்துக்களைத் தவிர மற்ற அனைவருக்கும் இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது. முஸ்லிம்களுக்கு தனிப்பட்ட சட்டம் இருப்பதால் , அவர்கள் நான்கு திருமணங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்துக்களிடையேயும், பலதார மணம் மிகுந்த கவலைதரும் விஷயமாக இருந்தது.
சிவில் திருமணச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் திருமணங்களில் அனைத்து சமூகத்தினருக்கும் பலதார மணம் சட்டவிரோதமானது.
பாலியாண்ட்ரி (பல கணவர் அமைப்பு)
பாலியாண்ட்ரி நடைமுறை முற்றிலும் முடிந்துவிட்டது. ஆயினும்கூட, சில தொலைதூர பகுதிகளில் இருந்து அதன் புழக்கம் உள்ளதாக சில செய்திகள் செய்தி அவ்வப்போது வருகின்றன.
இந்த நடைமுறை பெரும்பாலும் திபெத்துக்கு அருகே, இந்திய - சீன எல்லையை ஒட்டிய, இமாசலபிரதேசத்தின் கின்னெளர் பகுதியில், நடைமுறையில் இருந்தது. மகாபாரதத்தின்படி, பாண்டவர்கள் இந்த பகுதியில் தங்கியிருந்தனர் என்று பலர் நம்புகிறார்கள். அதனால்தான் பாலியாண்ட்ரி நடைமுறை இங்கே உள்ளது என்று கூறப்படுகிறது.
முத்தஹ நிக்காஹ்
முஸ்லிம்களின் ஷியா பிரிவு வாழும் இரானில் இது பெரும்பாலும் நடைமுறையில் உள்ளது. இது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஒரு வகையான குறுகிய கால ஒப்பந்தமாகும். இது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்.
இப்போது இரானில் அது முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்தியாவில் ஷியா சமூகத்தில் அதன் தாக்கம் மிகக் குறைவு.
நட்பு ஒப்பந்தம்
இந்த நடைமுறை குஜராத்தில் இருந்து வந்தது. இது உள்ளூர் மட்டத்திலும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ஏனெனில் இந்த 'எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை' மேஜிஸ்ட்ரேட் ஒப்புக்கொள்கிறார். இதில், ஆண் எப்போதும் திருமணமானவராகவே இருப்பார்.
இதனால்தான் இந்தமுறை இன்றும் தொடர்கிறது. நட்பு ஒப்பந்தம் என்பது இரண்டு பெரியவர்களுக்கு இடையிலான ஒரு வகையான ஒப்பந்தமாகும், இது ஒரு மாஜிஸ்திரேட் முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்படுகிறது. இது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஒரு வகையான ' லிவ் இன் ரிலேஷன்ஷிப் அதாவது சேர்ந்து வசித்தல். அதனால்தான் இது 'நட்பு ஒப்பந்தம்' என்று அழைக்கப்படுகிறது.
பல பிரபலமானவர்கள் இந்த வகையான உறவில் வாழ்கிறார்கள் என்று குஜராத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். இந்த நடைமுறை அடிப்படையில் , திருமணமான ஆண் தன் மனைவியை தவிர வேறு ஒரு பெண் நண்பருடன் வாழ்வதற்கு சமூக அங்கீகாரத்தை வழங்குவதற்கான கேடயமாக இருந்து வருகிறது.
இஸ்லாமிய சட்டம் காலத்துடன் மாறவில்லையா?
காலத்துக்கு ஏற்ப மாற வேண்டிய நேரம் இது என்றும் பல சமூக சீர்திருத்தங்கள் அவசியமாகிவிட்டது என்றும் பல முற்போக்குவாதிகள் கருதுகின்றனர்.
இந்து சமூகம் பல சீர்திருத்தங்களைக் கண்டிருப்பதாக ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் சந்தீப் மொஹாபத்ரா , பிபிசியிடம் தெரிவித்தார். எனவே பல நடைமுறைகள் அவ்வப்போது முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளன. ஆனால் முஸ்லீம் சமுதாயத்தில் சமூக மட்டத்தில் எந்த சீர்திருத்தங்களும் செய்யப்படவில்லை, எல்லாமே மிகவும் பழமையான நம்பிக்கைகளின் அடிப்படையில் நடந்து கொண்டிருக்கின்றன என்றார் அவர்.
பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கும் அவர், இது அமல் செய்யப்பட்டால், ஆணாதிக்கத்திற்கு இரையாகியுள்ள ஒவ்வொரு சமூகத்தின் பெண்களும் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டார்.
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் அனைவருக்கும் பொருந்தும். அதேபோல், இந்துக்கள், முஸ்லிம்கள் அல்லது எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் இருக்க வேண்டும் என்று, தொழில் ரீதி வழக்கறிஞரான மொஹாபாத்ரா கூறுகிறார்.
"முஸ்லிம்களைப் பற்றி பேசும்போதுதான் விவாதம் தொடங்குகிறது. 1937 முதல் முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் எந்த சீர்திருத்தங்களும் செய்யப்படவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு பொது சிவில் சட்டம் பற்றி பேசப்பட்டது, ஆனால் அது எதிர்க்கப்பட்டது. ஆகவே, இது 44 வது சட்டப்பிரிவின் கீழ் வைக்கப்பட்டது . ஆனால் அது சாத்தியம்தான். பொது சிவில் சட்டம் நடைமுறையில் இருக்கும் கோவாவின் உதாரணமும் எங்களிடம் உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
பொது சிவில் சட்டம் மற்ற மதங்களின் மீது திணிக்கப்படுமா ?
இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. பல்வேறு மதங்கள் மற்றும் பழங்குடியினர் தங்கள் சொந்த நடைமுறைகளைக் கொண்டுள்ளனர். பொது சிவில் சட்டம் மீது அரசியல் மட்டுமே இருக்க முடியும். இதனால் யாருக்கும் பயன்கிடைக்காது என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் வாலி ரஹ்மானி பிபிசியிடம் தெரிவித்தார்.
எல்லா மதங்களை சேர்ந்தவர்களுக்கும், தங்கள் கலாச்சாரத்தையும் பாரம்பரியங்ளையும் பின்பற்ற உரிமை உண்டு என்று அவர் கூறினார்.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் ஒவ்வொரு சட்டத்தையும் தான் ஆதரிப்பதாகக்கூறும் சமூக ஆர்வலர் ஜான் தயால், பொது சிவில் சட்டவடிவம் பெரும்பான்மை மக்களுக்காகவே இருக்கும் என்றும் மற்ற அனைவர் மீதும் இது திணிக்கப்படும் என்று கூறி அதை எதிர்த்துள்ளார்.
அரசு ,பொது சிவில் சட்டத்தை கொண்டுவர விரும்பினால், அதன் வடிவம் ஒரு குடை போல இருக்க வேண்டும், அதில் அனைத்து மரபுகளும், கலாசாரங்களும் ஒன்றாக எடுத்துச்செல்லப்படவேண்டும் என்று ஜான் தயால் தெரிவித்தார். இந்தியாவில் மத மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை இருப்பதால் அதை திணிக்கக்கூடாது என்று அவர் மேலும் கூறினார்.
இந்து மதத்திலேயே பல பிரபலமான நடைமுறைகள் இருப்பதால், இது ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்று அவர் கருதுகிறார். இவற்றை சட்டவிரோதம் என்று அரசு சொல்வது கடினம். உதாரணமாக, தென்னிந்தியாவில் சொந்த மாமா, தனது சகோதரி மகளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவர் கூறுகிறார்.
"அரசு இதைத் தடை செய்யுமா? ஜாட் மற்றும் குஜ்ஜர் அல்லது பிற சமூகங்களில் நிலவும் நடைமுறைகளை முடிவுக்குக் கொண்டுவர அரசு முன்முயற்சி எடுக்க முடியுமா? இது அவ்வளவு சுலபமாக நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. இது ஒரு கடினமான செயல்," என்று ஜான் தயால் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்:
- உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கியது ரஷ்யா
- பெண்களும், பிராமணர் அல்லாதோரும் கல்வி கற்பதை எதிர்த்தாரா திலகர்?
- 1989-இல் இந்தி உரையை மொழிபெயர்த்தாரா கனிமொழி? வைரலாகும் புகைப்படங்களின் பின்னணி என்ன?
- பாகிஸ்தான் வரைபடத்தில் குஜராத்தின் ஜுனாகத் பகுதி: இம்ரான் கான் அரசுக்கு என்ன லாபம்?
- திருப்பதி கோயில் ஊழியர்கள் 743 பேருக்கு கொரோனா: சமூக வலைத் தளங்களில் கடும் விமர்சனம்
- ஐக்கிய அரபு அமீரக விசா, பர்மிட்டுகளுக்கு 1 மாதம் காலக்கெடு நீட்டிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












