You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தி திணிப்பு: "கனிமொழி, நீங்கள் இந்தியரா?" எதிர்க்குரல் எழுப்பும் தென் இந்தியா - அரசியலாகிறதா விமான நிலைய அனுபவம்?
திமுக எம்.பி கனிமொழிக்கு விமானநிலையத்தில் ஏற்பட்ட அனுபவத்துக்கு எதிராகப் பல அரசியல்வாதிகள் குரல் எழுப்பி உள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி வருவதற்காகச் சென்னை விமான நிலையம் வந்த திமுக எம்.பி கனிமொழியை, "நீங்கள் இந்தியரா?" என அங்கு பணியிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப்படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் கேட்ட நிகழ்வு சர்ச்சையானது.
இதையடுத்து, கனிமொழியை டெல்லி விமான நிலையத்திலேயே சந்தித்து நடந்த சம்பவம் தொடர்பாக சிஐஎஸ்எஃப் உயரதிகாரிகள் வருத்தும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினர்.
மேலும், எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் நிர்ப்பந்திப்பது தங்களுடைய படையின் கொள்கை கிடையாது என்றும் சிஐஎஸ்எஃப் தலைமையகம் அதன் டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் இந்தியாவின் தென் மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் கனிமொழிக்கு ஏற்பட்ட விமான நிலைய அனுபவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தி ஆதிக்கம்
கர்நாடக முன்னாள் முதல்வர் எச். டி. குமாரசாமி பகிர்ந்துள்ள ட்வீட்டில், " என் சகோதரி கனிமொழிக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கண்டிக்கிறேன். தென் இந்தியாவிலிருந்து வரும் அரசியல் தலைவர்கள் எப்படி பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார்கள், அவர்கள் வாய்ப்பு எப்படி பறிக்கப்படுகிறது? என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது," என பதிவிட்டுள்ளார்.
"தேவேகெளட, கருணாநிதி, காமராஜர் உள்ளிட்ட பல தென் இந்திய தலைவர்கள், பிரதமர் ஆவதை "இந்தி அரசியல்" தடுத்திருக்கிறது. தேவேகெளட வெற்றிகரமாக அந்த தடையைத் தாண்டினார். மொழியின் பெயரால் அவர் விமர்சிக்கப்பட்ட எத்தனையோ சம்பவங்கள் உள்ளன" என்று அந்த டிவிட்டர் தொடர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "தேவேகெளடவின் செங்கோட்டை சுதந்திர தின உரையை இந்தியில் பேசவைத்து வெற்றி அடைந்தது "இந்தி அரசியல்". பிஹார் மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த விவசாயிகளுக்காகத்தான் அவர் இந்தியில் பேச ஒப்புக் கொண்டார்." என்று குமாரசாமி கூறி உள்ளார்.
தனக்கும் அவ்வாறான அனுபவம் உள்ளதாகக் கூறியுள்ள குமாரசாமி, "நான் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்தேன். ஆளும் வர்க்கம் தென் இந்தியர்களை அலட்சியம் செய்திருக்கிறது. இந்தி அரசியல்வாதிகளின் சூழ்ச்சி நான் கவனித்து இருக்கிறேன். அவர்கள் இந்தி பேசாத அரசியல்வாதிகளை மதிப்பதில்லை," என குறிப்பிட்டுள்ளார்.
அரசியலைக் கடந்து, அரசு மற்றும் பொதுத் துறை வேலைவாய்ப்புகளும் இந்தி பேசாதவர்களுக்கு மறுக்கப்படுவதாக, தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடப்பதாகவும் கன்னடம் மொழிக்கான இடம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியும் ஒரு மொழி என்கிறது மத்திய அரசு. ஆனால், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்தியைப் பரப்பப் பல கோடிகள் செலவிடுவதாகவும் அந்த டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பல வழிகளில் தொடர்கிறது
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மத்தியில் ஆட்சியில் உள்ள அமைப்புகளின் இந்தி திணிப்பு நடவடிக்கை பல வழிகளில் தொடருவதாகக் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தயாநிதி மாறன் அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களையே விமான நிலையங்களில் பணியமர்த்த வேண்டும் என கூறி உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் பதிவிட்ட கருத்தில், தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் இப்போதே தொடங்கி விட்டதாகக் கூறியுள்ளார்.
அதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர், இந்த ஆணவத்துக்கு அதிகப்படியான விலை கொடுக்க நேரிடும் என்றும், நடந்த சம்பவத்துக்கு சிஐஎஸ்எஃப் துறையே வருத்தம் கோரிவிட்ட நிலையில், இதை ஏன் பாஜக, திமுக இடையிலான விவகாரமாக கொண்டு செல்கிறீர்கள்? பெங்களூரு விமான நிலையத்தில் அத்தகைய அனுபவம் உங்களுக்கு நடந்திருந்தால் என்ன செய்வீர்கள்? என்று தமது டிவிட்டரில் மேலும் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
- இந்திய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு என்ன? மன்மோகன் சிங் வழங்கும் 3 யோசனைகள்
- முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று
- ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படிக்கும் 4 தமிழக மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
- ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியாவை, கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன்
- இலங்கை தேர்தல்: இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரச்சனைகள் தீருமா?
- EIA 2020: "தேசத்தை கொள்ளையடிப்பதே இதன் நோக்கம்" - ராகுல் காந்தி குற்றஞ்சாட்டு
- சாத்தான்குளம் தந்தை மகன் சிறை மரண வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. கொரோனாவுக்கு பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: