You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும்: முதலமைச்சர் கே. பழனிசாமி
தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் என்றும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் அறிவித்துள்ள மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கை குறித்து விரிவாகக் கூறியுள்ளார். "தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர். இந்த உணர்வை பல கட்டங்களில் போராட்டங்கள் மூலமாகத் தெரிவித்துள்ளனர். 1965ஆம் ஆண்டில் இந்தியை அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது. அதனை எதிர்த்து மாணவர்களும் மக்களும் தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
மக்களின் மும்மொழிக் கொள்கை குறித்த கவலைகள் நீங்காததால், அண்ணா அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 23.1.1968ல் "தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது" என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நா்டில் இந்தி மொழி பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது.
இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்துவதுதான் எம்.ஜி.ஆரின் கொள்கையாகவும் இருந்தது. அவர் முதலமைச்சராக இருந்தபோது 1986 நவம்பர் 13ஆம் தேதியன்று இருமொழிக் கொள்கையை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
ஜெயலலிதா அவர்களும் இந்தி பேசாத மக்கள் மீது இந்தியைத் திணிக்கக்கூடாது என்பதிலும் அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளோம் எனக் கூறினார். இந்தியாவில் தமிழை ஆட்சி மொழி ஆக்க வேண்டுமென்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா கூறினார்" என கடந்த காலங்களில் இது தொடர்பாக தமிழக முதல்வர்கள் எடுத்த நிலைப்பாடுகளை முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும், "மத்திய அரசு வரைவுக் கல்விக் கொள்கையை வெளியிட்டபோதே அதில் மும்மொழிக் கொள்கை இடம்பெற்றதைச் சுட்டிக்காட்டி தீவிரமாக எதிர்த்தோம். மேலும் இரு மொழிக் கொள்கையையே கடைப்பிடிப்போம் என தெரிவித்து 2019 ஜூன் 26ஆம் தேதியன்று பிரதமருக்கு கடிதம் ஒன்றையும் எழுதினேன். சுதந்திர தின உரையிலும் சட்டமன்ற விவாதங்களிலும் இதையே தெரிவித்துள்ளேன். தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை இடம்பெற்றிருந்தாலும் மாநில அரசு மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்காது என்றும் இரு மொழிக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும்" என்றும் தனது அறிக்கையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர். இந்தச் சூழலில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது என்றும் முதல்வர் கூறியிருக்கிறார்.
மேலும், தமிழக மக்களின் உணர்வை ஏற்று மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்து அந்தந்த மாநிலங்கள் தங்களது கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக்கொள்ள அனுமதிக்க பிரதமரைக் கேட்டுக் கொள்வதாகவும் முதல்வர் கே. பழனிசாமி கூறியிருக்கிறார்.
பிற செய்திகள்:
- அயோத்தி கோயில் அடிக்கல் நாட்ட குறிக்கப்பட்டுள்ள நேரம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள்
- உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநருக்கு கொரோனா; குணமடைந்தார் அமிதாப் பச்சன்
- சந்திரயான் – 2 விண்கலத்தின் ரோவர் குறித்து தகவலை வெளியிட்டுள்ள தமிழக பொறியாளர்
- நாசா & ஸ்பேஸ் எக்ஸ்: பயணத்தை முடித்து நீரில் தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: