You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
``கொரோனா தொடக்க அறிகுறிகள் தென்பட்டதால் , பரிசோதனை செய்யப்பட்டது. முடிவு பாசிட்டிவ் என வந்துள்ளது. எனது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. ஆனால் மருத்துவர்கள் அறிவுரைக்கேற்ப மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். கடந்த சில நாட்களாக என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்`` என அமித் ஷா ட்வீட் செய்துள்ளார்.
இந்தியத்தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அமித் ஷா ஈடுபட்டார்.
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக டெல்லி அரசுடன் இணைந்து தொடர் அலோசனை கூட்டங்கள் நடத்தியது, மருத்துவமனைகளில் ஆய்வு செய்ததது என களத்தில் இறங்கி அமித் ஷா பணிகளை மேற்கொண்டார்.
எடியூரப்பா மற்றும் அவரின் மகளுக்கு கொரோனா
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனது டிவிட்டர் பக்கத்தில், "எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் நலமாக உள்ளேன். மருத்துவர்களின் பரிந்துரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்." என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எடியூரப்பாவின் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநருக்கு கொரோனா
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதால் தமிழக ஆளுநர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக கடந்த ஜூலை 29-ம் தேதி ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது.
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அறிகுறியற்ற கொரோனா தொற்று உள்ளதாக அவருக்கு பரிசோதனை செய்த காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஆளுநருக்கு பல்வேறு சோதனைகள் செய்ததில், அவர் உடல்நலன் சீராக இருப்பதாகவும், வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ள உள்ள ஆளுநரை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் அமிதாப் பச்சன்
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்ததை அடுத்து இன்று (ஆகஸ்டு 2) வீடு திரும்பினார்.
கடந்த மாதம் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோருக்கு தங்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதை ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அமிதாப் பச்சனுக்கு மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியானதை தொடர்ந்து அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தனது ரசிகர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: