You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்படவுள்ளதாகக் கூறப்படும் டைம் காப்ஸ்யூல் என்பது என்ன?
- எழுதியவர், அனந்த் பிரகாஷ்,
- பதவி, பிபிசி செய்தியாளர்
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் அடித்தளத்தில் ஒரு டைம் காப்ஸ்யூல் அதாவது காலம் குறிக்கும் உறை நிறுவப்படவுள்ளதாக, ராமர் கோயில் தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளையின் உறுப்பினர் காமேஷ்வர் சௌபால் கூறுகிறார்.
எதிர்காலத்தில் கோயிலின் வரலாற்றைப் படிக்க விரும்புபவர்கள், ராம் ஜன்மபூமி தொடர்பான உண்மைகளை அறியவும், மீண்டும் சர்ச்சை ஏற்படாமல் இருக்கவும் இந்தக் காலம் குறிக்கும் உறை, டைம் காப்ஸ்யூல் பூமியிலிருந்து 2000 அடிக்குக் கீழே புதைக்கப்படும் என்று சௌபால் கூறியுள்ளார்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் லல்லூ சிங் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால் ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் இதை ஒரு வதந்தி என்று கூறியுள்ளார். அதாவது, அறக்கட்டளையின் உறுப்பினர்களிடையே இது குறித்த குழப்பம் நிலவுகிறது.
இதனுடன், இந்த டைம் காப்ஸ்யூலில் என்ன வைக்கப்படவுள்ளது என்ற சர்ச்சையும் நிலவுகிறது. சிலருக்கு இது அயோத்தி சர்ச்சையின் வரலாற்றை எழுதுவது போன்றது.
ஆனால், வேறு சிலர் இந்த டைம் காப்ஸ்யூல் என்பது என்ன, அது எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவும் முயற்சிக்கின்றனர்.
டைம் காப்ஸ்யூல் காலம் குறிக்கும் உறை என்பது நிகழ்கால உலகத்துடன் தொடர்புடைய தகவல்களை எதிர்கால அல்லது பிற உலகத்திற்கு அனுப்ப உதவக் கூடிய ஒரு சாதனமாகும்.
உதாரணமாக, 2020 ஆம் ஆண்டு தொடர்பான தகவல்களை 3020 ஆம் ஆண்டில் அப்போதுள்ள மக்களுக்குக் கொண்டு சேர்க்க, இந்தச் சாதனம் பயன்படும்.
இதற்கு, முதலில், தற்போதைய உலகம் தொடர்பான தகவல்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சேதமின்றிப் பாதுகாக்கப்படக் கூடிய ஒரு வடிவத்தில் சேமிக்க வேண்டும். பிறகு, இதை ஒரு இடத்தில் புதைத்து வைக்க வேண்டும். 3020 ஆம் ஆண்டில் மக்கள் அந்த இடத்தைத் தோண்டினால், அந்த அகழ்வாராய்ச்சியின் போது அவர்களுக்கு இது கிடைக்கும்.
அதன் பிறகு, அந்த டைம் காப்ஸ்யூல் குறிப்பிடும் விவரங்களிலிருந்து, 2020 ஆம் ஆண்டில் உலகம் எப்படி இருந்தது, மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், எந்த வகையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன போன்றவற்றை அவர்களால் புரிந்து கொள்ள முடியும்.
டைம் காப்ஸ்யூலின் வடிவம், அளவு, வகை குறித்துத் தெளிவான விதிகள் எதுவும் இல்லை. அவை உருளை, சதுரம், செவ்வகம் அல்லது வேறு எந்த வடிவமாகவும் இருக்கலாம். ஒரே நிபந்தனை என்னவென்றால், அது உருவாக்கப்படும் நோக்கத்தை அது நிறைவு செய்யவேண்டும், தவிர, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
படேஸ்வரர் கோயில்களை புனரமைத்த தொல்பொருள் ஆய்வாளர் கே.கே முகமது, தொல்பொருளியல் துறையில் டைம் காப்ஸ்யூல்கள் பெரும் முக்கியத்துவம் எதுவும் பெற்றிருக்கவில்லை என்று கூறுகிறார்.
"டைம் காப்ஸ்யூலின் அமைப்பு, அதை வடிவமைக்கும் நபர் அல்லது அமைப்பை மட்டுமே சார்ந்துள்ளது. வடிவம் என்று பார்த்தால், உருளை அல்லது கோள வடிவம் பூமிக்கு அடியே உள்ள அழுத்தத்தைத் தாங்கும் திறன் கொண்டது. ஆனால் இதுவரை இந்தியாவில் அத்தகைய டைம் காப்ஸ்யூல் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. முன்னதாக ஒரு முறை, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி செங்கோட்டைக்குள் ஒரு டைம் காப்ஸ்யூலை நிறுவினார்”. என்கிறார் அவர்.
இப்போது ராமர் கோயிலின் அடித்தளத்தில் டைம் காப்ஸ்யூல்கள் நிறுவப்பட்டது சரியெனக் கருதும் கே.கே. முகமது, "இது சரியான நடவடிக்கை. ஏனெனில் இது குறித்த எந்தவொரு சர்ச்சையும் இனி எழாது. ஏனெனில் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தான் எல்லாம் நடந்துள்ளது.” என்று கூறுகிறார்
டைம் காப்ஸ்யூலின் வரலாறு என்ன?
இந்தியாவில் டைம் காப்ஸ்யூல் பயன்பாட்டின் வரலாறு மிகப் பழமையானதல்ல.
சுதந்தரம் பெற்று 25 ஆண்டுகள் கழித்து, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, 25 ஆண்டுகளாக ஒரு நாடாக இந்தியா செய்த சாதனைகள், போராட்டங்கள் இவற்றுக்க்ச் சான்றாக விளங்கும் வண்ணம் ஒரு டைம் காப்ஸ்யூலை செங்கோட்டையில் நிறுவினார்.
இந்திரா காந்தி தனது அரசியல் பயணத்தின் உச்சத்தில் இருந்த நேரத்தில் இந்த நடவடிக்கையை எடுத்தார்.
நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர், இந்த டைம் காப்ஸ்யூலை செங்கோட்டையில் நிறுவினார்.
ஆனால் இந்த நேர காப்ஸ்யூலில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் விரைவில் சர்ச்சைக்குள்ளாகின.
இதற்குப் பிறகு, மொரார்ஜி தேசாய் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து அந்த டைம் காப்ஸ்யூலை அகற்றியது.
ஆனால் அந்த டைம் காப்ஸ்யூலில் என்ன தகவல் இருந்தது என்பது இன்று வரை ஒரு சர்ச்சையாகவே உள்ளது.
இதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மார்ச் 6, 2010 அன்று ஐ.ஐ.டி கான்பூரில் ஒரு டைம் காப்ஸ்யூலை பூமிக்கடியில் நிறுவினார்.
அந்த டைம் காப்ஸ்யூலில் கான்பூர் ஐ.ஐ.டி-யின் வரைபடம், நிறுவன முத்திரை, வெள்ளி விழா மற்றும் பொன் விழா இலச்சினை ஆகியவை இருந்தன. .
பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, மகாத்மா கோயிலில் ஒரு டைம் காப்ஸ்யூலை நிறுவினார்.
இத்தகைய சூழ்நிலையில், வரும் ஆகஸ்ட் 5 அன்று, பூமியிலிருந்து 2000 அடி ஆழத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்த டைம் காப்ஸ்யூல்களை நிறுவினால், அவர், அவ்வாறு செய்யும் இரண்டாவது பிரதமராக இருப்பார்.
உலக அளவில் டைம் காப்ஸ்யூல்கள் என்று பார்த்தால், விண்கலமான ப்ரோப் வாயேஜர் 1 மற்றும் 2 (Probe voyager) இல், மனித நாகரிகம் தொடர்பான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
டைம் காப்ஸ்யூல்கள் பெரும்பாலும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்தே வந்துள்ளன. ராமர் கோயில் விஷயத்திலும் இதே நிலையே நிலவுகிறது.
இந்த செய்தி வெளியானதிலிருந்து, இந்த டைம் காப்ஸ்யூலில் என்ன தகவலைச் சேர்ப்பது சரியாக இருக்கும் என்ற விவாதங்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன.
ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், ராமர் கோயில் தொடர்பான டைம் காப்ஸ்யூல் குறித்த செய்தியையே வெறும் வதந்தி என்று கூறியுள்ளது, சமீபத்திய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு மத்தியில் தற்போது நிலவும் சர்ச்சைக்கிடையில், இந்த காப்ஸ்யூல் உண்மையில் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் அடித்தளத்தில் வைக்கப்படுமா இல்லையா என்பதுதான் கேள்வி.
பிற செய்திகள்:
- தமிழகத்தில் இரண்டு மலைகளைக் காப்பாற்றிய மக்கள் சக்தி: EIA 2020 வந்தால் என்ன மாறும்?
- பிக்பாஸ்: “பங்கேற்பாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்” - ஓவியா கருத்துக்கு சிநேகன் கூறுவது என்ன?
- திருப்பதியில் கொரோனா அதிகரிக்கத் திருமலை கோயில் காரணமா?
- பாலியல் தொல்லை: முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: