ராஜீவ் கொலை வழக்கு: ஏழு பேர் விடுதலை பற்றி முடிவெடுக்க தாமதம் ஏன்? ஆளுநர் தகவல்

முருகன், பேரறிவாளன், சாந்தன்
படக்குறிப்பு, முருகன், பேரறிவாளன், சாந்தன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் தரப்பில் விளக்கம் அளித்துள்ளதாக தமிழக அரசின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டுமெனக் கோரி, அவருடைய தாயார் அற்புதம் அம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஜூலை 22ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவைத்த பிறகும் அது தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காதது தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பிறகு வழக்கு 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் என். கிருபாகரன், வி.எம். வேலுமணி அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. சிறைவிடுப்பு குறித்து சிறைத்துறை ஏன் இன்னும் முடிவுசெய்யவில்லை என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். மேலும் ஏழு பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்காதது குறித்தும் தாங்கள் முன்பே கூறியதைச் சுட்டிக்காட்டினர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

அப்போது ஆஜரான அரசுத் தரப்பு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன், இது தொடர்பாக ஆளுநரின் துணைச் செயலரிடமிருந்து தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக ஜெயின் கமிஷனால் அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை ஆணையத்தின் (MDMA) அறிக்கைக்காக ஆளுநர் காத்திருப்பதாக கூறப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, பேரறிவாளன் சிறை விடுப்பு குறித்து மூன்றாம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமெனக் கூறிய நீதிபதிகள், வழக்கை ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :