பாலியல் தொல்லை: முன்னாள் நாகர்கோவில் அதிமுக எம்எல்ஏ மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ் திசை: "முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு"
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவரை போலீஸார் தேடி வரு கின்றனர். அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
நாகர்கோவில் தொகுதியில் 2011 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் நாஞ்சில் முருகேசன். கட்சியின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தார். 2016 தேர்தலில் இதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், தினகரன் அணியில் சேர்ந்தார். பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். நேற்று முன்தினம் இரவு, இவரை கட்சியின் அடிப் படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி, முதல்வர் பழனி சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர். ஒரு சிறுமி விவ காரத்தில் நாஞ்சில் முருகேசனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
நாகர்கோவில் கோட்டாறை சேர்ந்த 15 வயதான 10-ம் வகுப்பு மாணவியை, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு கடத்திச் சென்று விட்டதாக, அவரது தந்தை புகார் கூறியிருந்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில், 2 தினங்களுக்கு முன்பு மாணவியையும், அவரை அழைத்துச் சென்ற இளைஞரையும் போலீஸார் மீட்டனர்.
மாணவியிடம், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் உதவியுடன் நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்றது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி யாகின. தன்னை கடந்த 4 ஆண்டுக ளாக முக்கிய பிரமுகர்கள் பலர் பாலியல் வல்லுறவு செய்ததாகவும், உறவினர்களே இதற்கு உடந்தையாக இருந்ததாகவும் மாணவி தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
2017-ல் தனது தாயார், நாஞ்சில் முருகேசனிடம் அழைத்துச் சென்ற போது, அவர் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக மாணவி கூறியுள்ளார். இது தவிர, சிறுமியிடம் போலீஸார் ரகசிய வாக்குமூலம் பெற்றனர். அதில், நாஞ்சில் முருகேசன் தவிர, ஒரு தொழிலதிபர், முதியவர், ஆட்டோ ஓட்டுநர் என மேலும் 3 பேர் தன்னை பல நாட்களாக மிரட்டி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக அந்த சிறுமி கூறியுள்ளார். மேலும், தன்னை பாலியல் தொல்லை செய்தவர் களையும், அவர்களின் வீட்டையும் அடையாளம் காட்டுவதாகச் சிறுமி கூறினார்.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், நாஞ்சில் முருகேசன் உட்பட 4 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ், நாகர்கோவில் மகளிர் போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமி, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, காப்பகத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளார்.
இந்நிலையில் நாஞ்சில் முருகேசன் தலைமறைவாகியுள்ளார். இதில் தொடர்புடைய நான்கு பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர். நாகர்கோவில் புத்தேரியில் உள்ள நாஞ்சில் முருகேசனின் வீட்டைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சிறுமியிடம் நேற்று முன்தினம் வாக்குமூலம் பெறப்பட்டதுமே, இரவோடு இரவாக நாஞ்சில் முருகேசனைக் கட்சியிலிருந்து நீக்கி, தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்பிறகே அவர் மீது போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.

தினத்தந்தி: "எனது அனுமதி இல்லாமல் என்னை டிஸ்சார்ஜ் செய்தனர்' - விஜயலட்சுமி

பட மூலாதாரம், Screen Grab
நடிகை விஜயலட்சுமி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தான் வசிக்கும் சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள குடியிருப்பில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக அவரை மீட்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரிடம் குற்றவியல் நடுவர் வாக்குமூலம் பெற்றார். பின்னர் அங்கிருந்து அவர், போரூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று மாலை நடிகை விஜயலட்சுமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவர், திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
நடிகை விஜயலட்சுமி, " அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து போரூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். எனது தோழியான நடிகை காயத்ரி ரகுராம்தான் இங்கு கொண்டு வந்து சேர்த்தார். காலை முதல் நான் ஏதும் சாப்பிடவில்லை. ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தேன்.
இதற்கிடையில் மாலையில் திடீரென என்னை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதாக தெரிவித்தனர். மருத்துவமனையில் எனது சிகிச்சைக்கான பணத்தை காயத்ரி ரகுராம்தான் கட்டி உள்ளார். எனது அனுமதி இல்லாமல் எதற்காக என்னை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்கிறார்கள் என்று கூறவில்லை. எனக்கு சிகிச்சை முடியாமலேயே வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்து விட்டனர்.
எந்த கட்சியும் என்னுடன் இல்லை. மக்கள்தான் என்னுடன் இருக்கிறார்கள். நான் இப்படியே சென்று உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்," என்றார்

தினமணி: கேரள தங்கக் கடத்தல் - சிவசங்கரிடம் 10 மணி நேரம் விசாரணை

பட மூலாதாரம், Getty Images
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கரிடம் என்ஐஏ அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) 10 மணி நேரம் விசாரணை நடத்தினர் என்கிறது தினமணி நாளிதழ்;
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக சிவசங்கரிடம் என்ஐஏ அதிகாரிகள் முதலில் ஜூலை 23-ம் தேதி திருவனந்தபுரத்தில் வைத்து 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது சுங்கத் துறை அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, கொச்சியில் திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அவரை இன்று காலை ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டது. மேலும் கொச்சியிலேயே தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் அவர் விசாரணைக்கு ஆஜரானார். தொடர்ந்து 2-வது நாளாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை 10 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது.
- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:
- பண மோசடி வழக்கு: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 வருட சிறை தண்டனை
- கொரோனா வைரஸ் சிகிச்சை: ஹைட்ராக்சி குளோரோகுயின் குறித்து மீண்டும் டிரம்ப் சர்ச்சை
- பழங்குடி இருளர்: சாதி சான்றிதழ் இல்லாததால் படிப்பைத் தொடர முடியாத மாணவி
- சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழி ரியா சக்ரபர்த்தி மீது சுஷாந்தின் தந்தை புகார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












