சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழி ரியா சக்ரவர்த்தி மீது சுஷாந்தின் தந்தை புகார்

பட மூலாதாரம், RHEA CHAKRABORTY / INSTAGRAM
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழி ரியா சக்ரவர்த்தி மீது, சுஷாந்தின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
கடந்த ஜூன் 14-ம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை தெரிவித்தது.
நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை பாலிவுட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொள்ள அவரது தோழி ரியா சக்ரவர்த்தி தூண்டியதாக சுஷாந்த் குடும்பத்தினர் தற்போது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், சுஷாந்தை மன ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் ரியா மீது பீகார் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ரியா மீது தற்கொலைக்குத் தூண்டியது உள்பட பல்வேறு பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாட்னா மத்திய மண்டல ஐ.ஜி சஞ்சய் சிங் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன்.’’ நான்கு பேர் கொண்ட குழு மும்பை சென்று, வழக்கு குறித்த விவரங்களையும், முக்கிய ஆவணங்களையும் மும்பை காவல்துறையிடம் இருந்து பெறுவார்கள்’’ என சஞ்சய் சிங் கூறியுள்ளார்.
சுஷாந்த் மரணம் தொடர்பாக ரியா சக்ரபர்த்தி மற்றும் பாலிவுட் பிரபலங்களான சஞ்சய் லீலா பன்சாலி, ஆதித்யா சோப்ரா, கரண் ஜோகர் உட்பட 40 பேரிடம் மும்பை போலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
சுஷாந்த் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய ரியா சக்ரவர்த்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
மேலும், ஜூலை 14-ம் தேதி ரியா சக்ரபர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் சுஷாந்த் குறித்து ஒரு உருக்கமான கடிதத்தைப் பதிவிட்டிருந்தார்.
அதில், ’’என் உணர்ச்சிகளை எதிர்கொள்ள இன்னும் சிரமப்படுகிறேன். காதல் மீது எனக்கு நம்பிக்கை வந்ததும், அதன் சக்தியை புரிந்துகொண்டதும் உன்னால்தான்.''
''நீ இப்போது இன்னும் அமைதியான இடத்தில் இருப்பாய் என்பது எனக்குத் தெரியும். பால்வெளிகளும், நிலவும், நட்சத்திரங்களும் 'சிறந்த இயற்பியலாளரை' வரவேற்றிருக்கும்.''
''அன்பும், மகிழ்ச்சியும் கொண்ட நீ நட்சத்திரங்களை ஒளிரச் செய்வாய். ஒரு அழகான மனிதருக்கான எடுத்துக்காட்டாக இருந்தாய். உலகம் கண்ட சிறந்த அதிசயம் நீ. உன்னை இழந்து 30 நாட்கள் ஆகிறது. ஆனால், உன்னை நேசிக்க இந்த வாழ்நாள் இருக்கிறது.'' என குறிப்பிட்டிருந்தார்.
யார் இந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்?

பட மூலாதாரம், Getty Images
1986ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி பீகார் மாநிலத்தின் பாட்னாவில் பிறந்தார் சுஷாந்த். பிறகு, பிஹாரின் பூர்ணியா மாவட்டத்தில் வசித்து வந்த இவர், பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நடிக்கத் தொடங்கினார்.
திரையுலகில் முதலில் நடனக் கலைஞராக தன் பயணத்தை தொடங்கினார். பின்னர் அவருக்கு 'கிஸ் தேஷ் மே ஹை மேரா தில்' என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 'பவித்ர ரிஷ்தா' என்னும் தொடரின் மூலம் அவர் பிரபலமடைந்தார்.
அதோடு நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
2006ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் தொடக்க விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்ற நடன நிகழ்ச்சி ஒன்றில் பின்னணி நடன கலைஞராக இருந்தார்.
'காய் போ சே' என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆமிர் கான் படமான பிகேவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் மூலம் பரந்துபட்ட ரசிகர்களுக்கு இவர் அறிமுகமானார். சமீபத்தில் 'சிசோரே' என்னும் பாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் சுஷாந்த்.
'தோனி அண்டோல்ட் ஸ்டோரி' என்னும் படத்திற்காக இவர் சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.
பிற செய்திகள்:
- பண மோசடி வழக்கு: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 வருட சிறை தண்டனை
- திருடப்பட்ட பொம்மைக்காக காத்திருக்கும் தேசம் - ஒரு தாயன்பின் கதை
- "கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது" - பிரதமர் மோதி பாராட்டு
- அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ்: ரஜினி முன்னிறுத்தும் வேட்பாளரா? என்ன சொல்கிறார் அவர்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












