பழங்குடி இருளர்: சாதி சான்றிதழ் இல்லாததால் படிப்பைத் தொடர முடியாத மாணவி

- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் மேற்படிப்பைப் தொடர முடியாத சூழலில் உள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் பகுதிக்கு உள்பட்ட தி.பரங்கினி என்ற கிராமத்தில் வசித்துவரும் விவசாய கூலி தொழிலாளி முனியாண்டி என்பவரது மகள் தனலட்சுமி. பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த இந்தப்பெண் 12ஆம் வகுப்பை நிறைவுசெய்து, தனது மேற்படிப்புக்காகக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க முயற்சி செய்து வருகிறார். ஆனால், சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால், மேற்கொண்டு அவரது படிப்பைத் தொடர முடியவில்லை.
"எனது மூத்த சகோதரிகள் இரண்டு பேரும் 12ஆம் வகுப்பு முடித்தபோது, அவர்களது மேற்படிப்பிற்காகச் சாதி சான்றிதழ் பெற முடியவில்லை. இதனால், படிப்பைத் தொடர முடியாமல், அடுத்த சில ஆண்டுகளில் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டனர். இதேபோன்று எனக்கும் சான்றிதழ் வழங்க மறுத்தால், எனது சகோதரிகளுக்கு ஏற்பட்ட நிலை எனக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எனக்குள் இருக்கிறது," என்கிறார் தனலட்சுமி
தனலட்சுமியின் கிராமத்தில் 15க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்த்தவர்கள் 12ஆம் வகுப்பு முடித்திருக்கின்றனர். ஆனால், சாதி சான்றிதழ் இல்லாததால் அவர்களால் மேற்படிப்பைத் தொடர முடியவில்லை என்று கூறும் தனலட்சுமி, ஆண்கள் பலரும் கூலி வேலைக்குச் சென்றுவிட்டதாகவும் பெண்களுக்குத் திருமணமும் செய்து வைத்துவிட்டதாகவும் கூறுகிறார்.
"சுமார், 30 பழங்குடி இருளர் சமுதாயத்தினர் வசிக்கும் இந்த கிராமத்தில், தற்போது 40 மாணவர்கள் மேல்நிலை வகுப்பில் உள்ளனர். எனக்குச் சாதி சான்றிதழ் கிடைக்காத சூழல் ஏற்பட்டால், மற்ற அனைவருக்கும் இதே நிலைதான் என்கிறார்," அவர்.
பழங்குடி இருளர் சமுதாய மக்களுக்கு இருக்கின்ற முதன்மையான பிரச்சனையே சாதி சான்றிதழ் பெறுவதுதான் என்று கூறுகிறார், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி.

"சாதி சான்றிதழ் இல்லாமல், பழங்குடியின மாணவர்கள் அவர்களது மேற்படிப்பைத் தொடர முடியாமல் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். முன்னதாக, தமிழக அரசு படிக்கும் போதே மாணவர்களுக்குச் சாதி சான்றிதழ், பள்ளி மூலமாக வழங்க ஏற்பாடு செய்தது. அந்த முறை ஆரம்பக் காலத்தில் பழங்குடியினருக்கும் பொருந்தும் என இருந்தது. ஆனால், பழங்குடி சமுதாயத்தினருக்குச் சாதி சான்றிதழ் வழங்குவதில், அதிக அளவில் விசாரணை தேவைப்படுகிறது என்று கூறி பின்னர் அந்த திட்டத்தைக் கைவிட்டனர்," என்கிறார்.
"அரசு சலுகைகளுக்காகச் சிலர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி சான்றிதழ் பெற்று இருக்கின்றனர். இதனால், சில அதிகாரிகள் சாதி சான்றிதழ் கொடுத்துவிட்டு, அதனால் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர்," என்று கூறுகிறார் பிரபா கல்விமணி.

"குறிப்பாக, எழுத்தறிவில் மிகவும் பின்தங்கி இருப்பது பழங்குடியினர்தான். ஆகவே, அவர்களே விண்ணப்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காமல், அரசாங்கமே முன்முயற்சி எடுத்து, இவர்களுக்கு பிரத்யேமாக அடையாள அட்டை போன்று வழங்கலாம். அதன் மூலமாக, வரும் காலங்களில் அவர்களது பிள்ளைகளுக்கும் விண்ணப்பித்துக் கொள்ள முடியும்," என்று கோரிக்கை வைக்கிறார் அவர்.
இருளர் மக்களின் ஓட்டு வங்கி மிகவும் குறைவாக இருக்கின்ற காரணத்தினால், அரசியல் கட்சியினர் இவர்களது பிரச்சனைகளுக்குக் குரல் கொடுப்பதில்லை என கூறும் பிரபா கல்விமணி, விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு உதவ அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும் என்கிறார்.
மாணவிக்குச் சாதி சான்றிதழ் காலதாமதம் ஆவதற்கான காரணம் குறித்து, அப்பகுதி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, "இது குறித்துத் தொடர்ந்து அதிகாரிகள் அனைவரும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக, அதே கிராமத்தைச் சேர்த்த மற்ற சமூகத்தினர், இவர்கள் இருளர் சமுதாயத்தைச் சேர்த்தவர்கள் இல்லை என்று கூறுகின்றனர். எங்களிடம் குறிப்பிட்ட சில ஆவணங்கள் மட்டுமே அவர்கள் சமர்ப்பித்துள்ளனர். அதனால், அவர்கள் இருளர் சமுதாயத்தைச் சேர்த்தவர்கள் என்பதற்குத் தகுந்த ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில், அவர்களுக்குச் சாதி சான்றிதழ் உடனடியாக வழங்கப்படும். தற்போது அதற்கான விசாரணையை நடத்தி வருகிறோம்," எனத் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
- பண மோசடி வழக்கு: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 வருட சிறை தண்டனை
- திருடப்பட்ட பொம்மைக்காக காத்திருக்கும் தேசம் - ஒரு தாயன்பின் கதை
- "கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது" - பிரதமர் மோதி பாராட்டு
- அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ்: ரஜினி முன்னிறுத்தும் வேட்பாளரா? என்ன சொல்கிறார் அவர்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












