புதுச்சேரியில் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த வளர்ப்பு தந்தை போக்சோ சட்டத்தில் கைது

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

புதுச்சேரியில் 16 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் அப்பெண்ணின் வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு நிறைவு செய்த 16 வயது பள்ளி மாணவி உடலில் பலத்த காயங்களுடன் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியின் உடல் முழுவதும் காயங்களும், சூடு காயங்களும் இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த மருத்துவர்கள், இது தொடர்பாகக் குழந்தைகள் நலப்பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த குழந்தைகள் நலப் பாதுகாப்பு குழு தலைவர் எஸ்.ராஜேந்திரன், காயமடைந்த மாணவி மற்றும் அவரின் தாயிடம் விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையின் போது மாணவி தனக்கு ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகள் குறித்தும் குழந்தைகள் நலப் பாதுகாப்பு குழுவிடம் தெரிவித்துள்ளார்.

நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி கூறியதை பிபிசி தமிழிடம் பகிர்ந்த குழந்தைகள் நல பாதுகாப்பு குழுத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், "மாணவியின் சிறிய வயதிலேயே அவரது தந்தை உயிரிழந்துள்ளார். அதன் பிறகு மாணவியின் தாயார், 32 வயதுடைய கட்டட தொழில் செய்பவரைக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

இதனிடையே, முதல் கணவருக்குப் பிறந்த 16 வயது சிறுமியை இரண்டாவது கணவரான வளர்ப்புத் தந்தை மூன்று வருடங்களாக பாலியல் வல்லுறவு செய்துள்ளார். மேலும், இதுகுறித்து தாயாரிடம் தெரிவித்தால், சிறுமியையும், தாயையும் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார் வளர்ப்புத் தந்தை.

இதனால், அந்த சிறுமி தாயாரிடம் நடந்த சம்பவங்கள் குறித்துச் சொல்லாமல் இருந்துள்ளார். இதற்கிடையில் ஒருநாள், வளர்ப்புத் தந்தைக்குப் பயந்து வீட்டை விட்டு வெளியேறி, அவரது தோழியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் சிறுமியைக் கண்டுபிடித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு, அந்த சிறுமியை அதிக அளவில் கொடுமை செய்துள்ளார் அவர்," என்றார்

Banner image reading 'more about coronavirus'
Banner

"இதனைத் தொடர்ந்து, ஒரு நாள் வளர்ப்புத் தந்தை தனது மூன்று குழந்தைகளை அடித்து, கடுமையாகத் தாக்கி துன்புறுத்தியுள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த 16 வயது சிறுமி, தடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வளர்ப்புத் தந்தை தனக்குப் பிறந்த மூன்று பெண் குழந்தைகளைக் கட்டி வைத்து அடிக்கத் தொடங்கினார். மேலும், வளர்ப்பு மகளின் கையை உடைத்து, தலையில் பலமாக தாக்கியுள்ளார். மேலும் இரும்பு கம்பியால் சிறுமியின் பிறப்புறுப்பில் சூடு வைத்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல், கூடுதலாக தலையில் அடிபட்டு அதிக அளவில் ரத்த இழப்பு ஏற்படவே, சிறுமி மயங்கியுள்ளார். மேலும் மருத்துவமனைக்கு யாரும் செல்ல கூடாது என்று மிரட்டி வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு வந்து நடந்த சம்பவத்தைக் கண்ட தாய் உடனடியாக தனது பெரிய மகளை மீட்டு, ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டுவந்து சேர்த்துள்ளார். அதன்பிறகே சிறுமி தனக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து தாயாரிடம் கூறியுள்ளார். பின்னர் உடனடியாக காவல் நிலையத்தில் வளர்ப்பு மகளான 16 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொடுமைப்படுத்தியது, கொலை முயற்சியில் ஈடுபட்டது, பெற்ற மகள்களை அடித்து கொடுமைப்படுத்தியது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் புகார் அளித்தார்," என்று கூறினார் எஸ்.ராஜேந்திரன்.

குற்றச்சம்பத்தில் ஈடுபட்ட நபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்கிறார் ராஜேந்திரன்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் விளக்கம் கேட்டபோது, தற்போது அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபரை கொரோனா பரிசோதனை செய்வதற்காகத் தனிமைப்படுத்தியுள்ளோம். அவருக்குப் கொரோனா தொற்று இல்லை என்று வரும் பட்சத்தில், அவரை சிறையில் அடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :