You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழர் வரலாறு: தமிழ்நாடு அரசு சார்பில் கீழடி அகழாய்வு பொருட்களுக்கு அகழ்வைப்பகம்: எடப்பாடி பழனிசாமி அடிக்கல்
மதுரை மாவட்டத்திற்கு அருகில் கொந்தகையில் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களைக் காட்சிக்கு வைப்பதற்கான அகழ் வைப்பகத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள பள்ளிச்சந்தை மேட்டில் சுமார் 110 ஏக்கர் பரப்பில் 2014ஆம் ஆண்டிலிருந்து அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. 2014லிருந்து 2017வரை மத்தியத் தொல்லியல் துறை இந்த அகழ்வாராய்ச்சியை நடத்தியது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 2017லில் இருந்து தற்போதுவரை இந்த ஆய்வை நடத்திவருகிறது.
2017-18ல் நடந்த தொல்லியல் ஆய்வில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. செங்கல் கட்டுமானப் பகுதிகளும் வெளிப்படுத்தப்பட்டன. 2018-19ல் நடந்துவரும் தொல்லியல் ஆய்வில் இதுவரை 900 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. 2019-20ல் கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் ஆறாம் கட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன.
தற்போதுவரை நடந்துள்ள ஆறு கட்ட அகழாய்வில் சுடுமண் உருவங்கள், செப்புக் காசுகள், இரும்புப் பொருட்கள், வட்டச் சில்லுகள், ஆட்டக் காய்கள், எலும்பு முனைகள், சுடுமண் காதணிகள், சங்கு வளையல்கள், தந்தத்தினால் ஆன பொருட்கள், தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகள் உள்ளிட்ட 14,535 தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கீழடி அகழாய்வில் கிடைத்த இந்தத் தொல்பொருட்களைக் காட்சிப்படுத்த நவீன வசதிகளுடன் கூடிய அகழ்வைப்பகம் ஒன்றை அமைக்க மாநில அரசு திட்டமிட்டிருந்தது. இதற்காக கொந்தகை கிராமத்தில் 0.81 ஹெட்டேர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டு, அதில் 12 கோடியே 21 லட்ச ரூபாய் செலவில் அகழ் வைப்பக அருங்காட்சியகத்திற்கான அடிக்கலை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் நாட்டினார்.
இந்தக் கட்டடத்தின் பணிகளை தமிழ்நாடு அரசின் புராதனப் பணிகளுக்கான பாதுகாப்புப் பிரிவு மேற்கொள்ளுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :