You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாளிதழ்களில் இன்று: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
பள்ளிகளை எப்போது திறக்கலாம்? என்பது குறித்து பெற்றோரிடம் கருத்துக்கேட்டு, தமிழக கல்வித்துறை இன்று (திங்கட்கிழமை) மத்திய அரசுக்கு பதில் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது என்ற செய்தியை தினத்தந்தி நாளிதழ் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது இதுவரை முடிவு எடுக்கப்படாமல் இருக்கிறது.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் பள்ளிக்கல்வி துறை சார்பில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வித்துறை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'பெற்றோரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கேட்டு அனுப்பவேண்டும். அதில், பள்ளிகள் மீண்டும் திறக்க வசதியான காலம் எது? (ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர்), மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது பள்ளிகளில் செய்யப்படவேண்டிய பெற்றோரின் எதிர்பார்ப்புகள் என்ன?, மேலும் இதுதொடர்பான பிற கருத்துகள் ஆகியவற்றை குறிப்பிட்டு 20-ஆம் தேதிக்குள் (இன்று) அனுப்ப வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து பெற்றோரிடம் இருந்து கருத்துகளை கல்வித்துறை பெற்று இருக்கிறது. பெற்றோரின் கருத்துகளையும், மாநில அரசின் கருத்துகளையும் சேர்த்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு கல்வித்துறை இன்று பதில் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பெற்றோரும் நேரடியாக குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய கருத்துகளையும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனிடையே, கடந்த 15-ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் பள்ளிகள் திறப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த ஆலோசனை நடத்தியது.
அதில் தமிழக அரசின் சார்பில் கலந்து கொண்ட கல்வித்துறை அதிகாரிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசைப்போல, தெலங்கானாவும் இன்னும் முடிவு செய்யவில்லை என்றே தெரிவித்துள்ளது. இதுதவிர, பிற அண்டை மாநிலங்களான ஆந்திரா செப்டம்பர் 5-ந்தேதியும் (தற்காலிக முடிவு), கேரளா ஆகஸ்டு 31-ஆம் தேதிக்கு பிறகும், கர்நாடகா செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு பிறகும் திறக்கலாம் என்று அந்தந்த மாநில கல்வித்துறை சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் அந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளனர் என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காதலுக்காக எல்லை தாண்ட முயன்ற நபர் - இந்து தமிழ் திசை
பேஸ்புக் மூலம் அறிமுகமான தனது காதலிக்காக ஒருவர் எல்லை தாண்ட முயன்றதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் உஸ்மானாபாத்தைச் சேர்ந்தவர் சித்திக் முகமது ஜீசன் (20). பேஸ்புக் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் சித்திக்குக்கு நண்பரானார். இது காதலாக மாறியுள்ளது.
ஒரு கட்டத்தில் காதலியைப் பார்க்க மகாராஷ்டிராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் குஜராத்துக்குச் சென்றார். அங்கிருந்து கட்ச் பகுதி வழியாக எல்லையைத் தாண்ட முடிவு செய்தார். கட்ச் பகுதியில் ரான் ஆஃப் கட்ச் என்று சதுப்பு நில பிரதேசம் உள்ளது. இதன் வழியாகதான் எல்லையைத் தாண்ட வேண்டும். ஆனால் அந்த வழியே நடந்து மட்டுமே செல்ல முடியும்.
கடந்த வியாழக்கிழமை அப்பகுதி வழியாக சித்திக் சென்ற போது அவரை அல்ல பாதுகாப்பு படை போலீசார் (பிஎஸ்எஃப்) மடக்கிப் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், பாகிஸ்தானில் உள்ள காதலியைப் பார்க்கச் செல்வது தெரிந்தது. அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே சித்திக்குக்கு பாகிஸ்தானின் பல்வேறு தொலைபேசி எண்களில் இருந்து அழைப்புகள் வந்துள்ளன.
பல்வேறு எண்களில் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளதால் போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர். இது தொடர்பாகவும் துணை ராணுவப் படை அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
''திட்டமிட்ட பொய்களை பரப்புகிறது பாஜக'' :ராகுல்காந்தி - டைம்ஸ் ஆஃப் இந்தியா
பாஜக அரசு திட்டமிட்டு 3 பொய்களை அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குற்றம் சாட்டியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பரிசோதனைகள் மற்றும் இறப்பு விபரங்கள், புதிய கணக்கீடு முறைகள் மூலம் உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுவது, சீன ஆக்கிரமிப்பு விவகாரத்தில் ஊடகங்களை அச்சுறுத்துவது ஆகிய 3 விஷயங்களில் பாஜக அரசு பொய்களையே அதிகாரப்பூர்வ செய்தியாக்கி உள்ளது என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார் என அந்த செய்தி விவரித்துள்ளது.
பாஜகவின் மாயை அரசியல் விரைவில் நொறுங்கும் என்றும் இதற்கான விலையை இந்தியா கொடுக்கும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :