மத்திய பிரதேசம் தலித் விவசாயி சோகக் கதை: “காவல்துறையினர் என் ஏழு மாத குழந்தையையும் விட்டுவைக்கவில்லை”

பட மூலாதாரம், சுரோ நியாஸி
- எழுதியவர், சுரோ நியாஸி
- பதவி, பிபிசி இந்தி சேவைக்காக
மத்திய பிரதேசத்தின் குனாவில், போலீஸ் துன்புறுத்தல்களுக்கு உள்ளான தலித் விவசாயி ராஜ்குமார் ஆஹிர்வார், சம்பவ நாளன்று, காவல்துறை எல்லா எல்லைகளையும் கடந்துவிட்டதாக தெரிவிக்கிறார். தன் மனைவி, தாய் மற்றும் சகோதரருடன் கூடவே, தனது சிறு சிறு குழந்தைகளையும் கூட போலீஸ் குறி வைத்ததாக அவர் மேலும் கூறுகிறார்.
ராஜ்குமாரும், அவரது மனைவி சாவித்திரியும் தற்போது குனாவின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர் சொல்கிறார், "நாங்கள் வயலுக்கு வந்த அதிகாரிகளிடம் மிகவும் மன்றாடினோம். ஆனால், அவர்கள் நாங்கள் சொன்னதைக் கேட்க தயாராக இல்லை. அவர்கள் தரக்குறைவாகப் பேசிவிட்டு, நீ இந்த இடத்தைவிட்டுப் போகப்போகிறாயா இல்லையா என்று மிரட்டினார்கள். அதன்பிறகு, என் குடும்பத்தைத் தாக்க ஆரம்பித்தார்கள்."
தனது மனைவி, தாய் மற்றும் சகோதரருடன் கூடவே, தனது ஏழுமாதக் குழந்தையும் போலீஸ் துன்புறுத்தலுக்கு ஆளானதாக, ராஜ்குமார் மருத்துவமனையிலிருந்து தொலைபேசியில் சொன்னார். அவரது மனைவி சாவித்திரி, தற்போது மருத்துவமனையில் மயக்கநிலையில் உள்ளார். அவர் பேசும் நிலைமையில் இல்லை.
விளைந்த பயிரை சேதத்திலிருந்து காக்க, நிர்வாகத்திடம் இரண்டு மாதகால அவகாசம் மட்டுமே தாம் கேட்டதாக, ராஜ்குமாரின் தாய், கீதா பாயி, தெரிவித்தார். கப்பூ பார்தி என்பவரிடமிருந்து தாங்கள் இந்த நிலத்தை குத்தகைக்குப் பெற்றதாகவும், அவர் இந்த நிலத்தில் கடந்த 35 ஆண்டுகளாக, விவசாயம் செய்துவந்ததாகவும், கீதாபாயி, மேலும் கூறினார்.
"அவர் இத்தனை ஆண்டுகளாக இந்த நிலத்தில் விவசாயம் செய்துவரும் நிலையில், அவர் இந்த நிலத்திற்கு சொந்தக்காரர் அல்ல என்பதை நாங்கள் எப்படி ஒப்புக்கொள்வது? கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தில் விவசாயம் செய்துவருகிறோம்", என்று கீதா பாயி தெரிவித்தார்.
நிலம்தான் நிலம்தான்... நிலம்தான் எல்லாம்
இந்த நிலத்தில், ராஜ்குமார் ஆஹிர்கார், தனது மனைவி மற்றும் ஆறு குழந்தைகளுடன் வசிக்கிறார். இவர்களுடன், அவரது தாய் - தந்தை மற்றும் திருமணமாகாத சகோதரர் சிசுபாலும், உள்ளனர். ராஜ்குமாருக்கு, நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

பட மூலாதாரம், சுரோ நியாஸி
அதிகாரிகள் மற்றும் காவல்துறையுடன் எந்தவிதமான முரட்டுத்தனமும் செய்யவில்லை என்று ராஜ்குமார் கூறினார்.
முழு குடும்பமும், இந்த நிலத்தையே நம்பியிருப்பதால், தாங்கள் போலீஸ் நடவடிக்கையை எதிர்த்ததாக, கீதா பாயி குறிப்பிட்டார். இதன் காரணமாகவே, தனது மூத்த மகனும் மருமகளும், பூச்சிகொல்லியைக் குடித்து உயிரைவிட முயற்சி செய்ததாக, அவர் மேலும் சொன்னார்.
இந்த சம்பவத்தின் வீடியோ வைரல் ஆனபிறகு, முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் செளஹான், குனா மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் தலைமை அதிகாரியையும், அங்கிருந்து இடமாற்றம் செய்துள்ளார். இது நடந்த இரண்டாவது நாளே ஆறு போலீஸார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
போலீஸார், இந்தக் குடும்பத்தினர் மீது, கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருப்பது, வீடியோ வைரல் ஆன பிறகு தெரியவந்துள்ளது. ராஜ்குமாரின் ஆறு குழந்தைகளும், சம்பவம் நடக்கும்போது, அழுதவாறு கூச்சலிடுவதை வீடியோவில் கேட்க முடிகிறது.
அன்று என்ன நடந்தது?
இந்த சம்பவம் நகரத்தின் கேண்ட் போலீஸ் சரகப்பகுதியில் நடந்தது. நகரத்தின் இணை மண்டல மேஜிஸ்ட்ரேட் தலைமையில் ஒரு குழு, ராஜ்குமார் விவசாயம் செய்துவந்த நிலத்தில், ஆக்கிரமிப்பை அகற்ற, அந்த இடத்திற்குச் சென்றது. போலீஸ் குழு, ஜேசிபி மெஷின் மூலம், விளைந்த பயிரை நீக்க ஆரம்பித்தது.

பட மூலாதாரம், சுரோ நியாஸி
ராஜ்குமாரும் அவரது மனைவியும் இதை எதிர்த்தனர், ஆனால், போலீஸ் அவர்களை அடித்து, பயிரை நீக்கும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டது. இதை தொடர்ந்து, கணவனும், மனைவியும், பூச்சிகொல்லியைக் குடித்து, உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்தனர்.
இந்த நிலம் ஆதர்ஷ் மஹாவித்யாலயாவுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலத்தை, முன்னாள் கவுன்ஸிலர் கப்பூ பார்தி, ஆக்கிரமித்திருந்தார் என்றும் ராஜ்குமார் ஆஹிர்காரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, அவருக்கு குத்தகைக்கு விட்டிருப்பதாகவும், போலீஸார் தெரிவித்தனர்.
இங்குப் பயிர் செய்ய, ராஜ்குமார் கடன் வாங்கியிருந்தார். குடும்பம் பிழைக்க, இந்த நிலத்தின் பயிர்தான் ஒரே ஆதாரமாக இருந்தது. ஆனால், நிர்வாகம் இந்தக் குடும்பத்தின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காமல், அவர்கள் மீது கருணையின்றி தாக்குதலும் நடத்தியது.
அடிதடிக்கு பிறகும் அவர்களது வேண்டுகோள்களுக்கு யாருமே செவிமடுக்காததால், அவர்கள் பூச்சிகொல்லியைக் குடித்துவிட்டனர். பூச்சிகொல்லியைக் குடித்தபிறகு இருவரும் கீழே விழுந்துவிட்டனர். ஆனால், அதற்கு பிறகும் அதிகாரிகள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவில்லை. அவர்களின் குழந்தைகள்தான், அவர்களை எழுப்ப முயன்றனர். பின்னர் அதிகாரிகள், அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து ராஜ்குமாரின் குடும்பம், மிகைப்படுத்திக் கூறுகிறது என்று சம்பவ இடத்தில் உள்ள சிலர் தெரிவித்தனர். ஆனால், ராஜ்குமாரின் சகோதரர் அங்கு வந்தபோது, அவரையும் போலீஸார் அடித்தனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உட்படப் பல தலைவர்கள், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவும், போலீஸ் தாக்குதலை விமர்சித்துள்ளார். இதுதவிர, பல அமைப்புகளும், இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ளன.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ் தொற்று குறைவாக இருக்கும் இந்த 5 நாடுகளை அறிவீர்களா?
- பாடகி சுசித்ரா சாத்தான்குளம் வழக்கு தொடர்பான காணொளியை நீக்கியது ஏன்? - பிபிசிக்கு பேட்டி
- கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவில் நாளை முதல் தொடங்குகிறது பரிசோதனை
- இரானில் உண்மையில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று இருந்தது? - அதிபர் வெளியிட்ட கணக்கு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












