You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நெல்லை வியாபாரிகள் குடும்பத்துக்கு திண்டிவனம் அருகே நேர்ந்த சோகம் - கார் பள்ளத்தில் கவிழ்ந்து 6 பேர் பலி
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கார் ஒன்று சாலையோரப் பள்ளத்தில் உருண்டதில் காரில் இருந்த ஒரு குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இரண்டு குழந்தைகள் பலத்த காயமடைந்தன.
கொரோனா ஊரடங்கினால், முடங்கிக் கிடந்துவிட்டு, இப்போதைய தளர்வைப் பயன்படுத்தி மீண்டும் வியாபாரத்தைத் தொடங்குவதற்காக நெல்லையில் இருந்து, சென்னை திரும்பிக் கொண்டிருந்த வியாபாரிகள் குடும்பத்துக்கு இந்த சோகம் நேர்ந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தும் தகவல்:
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த முருகன் குடும்பத்தினர், சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் நகை மற்றும் இரும்பு வியாபாரம் செய்து வருகின்றார். கொரோனா வைரஸ் முடக்க நிலைத் தளர்வைப் பயன்படுத்தி மீண்டும் வியாபாரத்தைத் தொடங்குவதற்காக இந்தக் குடும்பம் நெல்லையில் இருந்து சென்னைக்கு கார் மூலம் புறப்பட்டது.
கார் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரப் பள்ளத்தில் கார் உருண்டது.
ஓட்டுநர் தூக்க மயக்கத்தில் கட்டுப்பாட்டைத் தவறவிட்டு, சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதிய வேகத்தில் கார் திரும்பி சாலையோரப் பள்ளத்தில் உருண்டுள்ளது.
இந்த விபத்தில் மூன்று வயதுக் குழந்தை உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலத்த காயங்களுடன் இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், துணைக் கண்காணிப்பாளர் கணகேஸ்வரி ஆகியோர் வந்தனர். போலீசார் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது,"விபத்தில் உயிரிழந்த முருகன் மற்றும் அவரது தம்பிகள் காஞ்சிபுரம் மற்றும் சென்னை பகுதியில் சொந்தமாக நகை மற்றும் இரும்பு வியாபாரம் செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊருக்குச் சென்ற இவர்கள், மீண்டும் வியாபாரத்தைக் கவனிக்கக் காஞ்சிபுரம் திரும்பிக்கொண்டிருந்தனர்.
மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் காரில் இருந்துள்ளனர். இன்று(வியாழக்கிழமை) அதிகாலை சுமார் 5.30 அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், முருகன் (40), மலர் முருகன்(35), மனிஷா முருகன்(3), முருகேசன்(38), சொரி முருகன்(35), ஓட்டுநர் ராஜ் என 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் முருகனின் குழந்தைகளான மாயா என்ற 7 வயது சிறுமி மற்றும் சதீஷ் என்ற 6 வயது சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்," என்று தெரிவித்துள்ளார் ராதாகிருஷ்ணன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: