You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிற்படுத்தப்பட்டோர் மருத்துவ இட ஒதுக்கீடு உயர்நீதிமன்றத்தை நாடச்சொன்ன உச்சநீதிமன்றம்
மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் தலைமையில் இந்த வழக்கு இன்று(திங்கள் கிழமை) விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, ''ஏற்கனவே, உத்தர பிரதேசத்தை சேர்ந்த சலோனி குமார் ஓபிசி வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கிற்கும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என நீதிபதி குறிப்பிட்டார்.
எனவே தமிழக அரசும், எதிர்கட்சிகளும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இட ஒதுக்கீடு கேட்டு தாக்கல் செய்த வழக்குகளை சென்னை உயர்நிதிமன்ற நீதிபதிகள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
''2020-2021 கல்வியாண்டிற்கான மருத்துவ படிப்பிற்கு மாணவர் சேர்க்கை ஏற்கனவே தொடங்கிவிட்டது. மருத்துவ படிப்பிற்கான இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 16ம் தேதி நடைபெற்று, அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கல்லூரிகளில் சென்று சேர ஆரம்பித்துள்ளனர்'' எனவே இந்த கல்வியாண்டின் ஓபிசி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிட் மனுவை கருத்தில் கொள்ளாவிட்டால், தகுதியுள்ள நூற்றுக்கணக்கான ஓபிசி மாணவர்கள் மருத்துவ படிப்பை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்படும் என்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
ஏற்கனவே ஜூன் மாதம் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியபோது, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என கூறியது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை ஜூலை 9ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் விரைவாக தீர்வு காணவில்லை என்பதால் உச்சநீதிமன்றத்தை நாடியதாக தமிழக அரசு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: