வடசென்னையில் கொரோனா விழிப்புணர்வு பணியில் களமிறங்கிய திருநங்கைகள்

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள வடசென்னை பகுதியில் திருநங்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, தினமும் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களிடம் பேசி அவர்களின் உடல்நலன் குறித்து கேட்கும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 40 நாட்களாக திருநங்கைகள் வடசென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சமூக இடைவெளி பற்றியும், முகக்கவசம் அணிவது, உடல்தூய்மை மற்றும் சத்தான உணவு எடுத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வு அளித்துவருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளோடு இணைந்து பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு கொண்டுசேர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. பிபிசி தமிழிடம் பேசிய திருநங்கை சுதா தண்டையார்பேட்டையில் வீதிநாடகம் நடைபெற்றதாக தெரிவித்தார்.

''தண்டையார்பேட்டை, ராயபுரம் பகுதியில் அதிக கவனம் செலுத்துகிறோம். மாநகராட்சி அலுவலர் தெர்மல் ஸ்கிரீனிங் செய்த பின்னர், நாங்கள் மக்களிடம் பிற விவரங்களை பதிவு செய்வோம். ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரும் எங்களிடம் வெளிப்படையாக பேசுகின்றனர். ஒரு வீட்டில் ஒரு நபருக்கு பாதிப்பு இருந்தால், மற்றவர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு கவனித்துக்கொள்ளவேண்டும் என எடுத்துரைக்கிறோம்,'' என்றார் சுதா.
தினமும் பொது மக்களை சந்திப்பதால், கொரோனா தகவல்களோடு, மருந்துகள் வாங்கி கொடுப்பது போன்ற உதவிகளையும் செய்வதாக கூறுகிறார் சுதா.
''அறிகுறிகள் உள்ளவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, சோதனை செய்யும் மையங்களுக்கு கொண்டு செல்வது, காய்ச்சல் கிளினிக் போன்ற இடங்களுக்கு கூட்டிச்செல்வது போன்ற வேலைகளையும் செய்கிறோம்,'' என்கிறார் சுதா.

சென்னையில் பாதிப்புக்கு உள்ளன நபர்களில் பெண்கள் 40.32 சதவீதம், ஆண்கள் 59.68 சதவீதம். குறிப்பாக 30-39 வயதில் உள்ளவர்கள்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சென்னை நகரத்தில் கொரோனா காரணமாக இதுவரை 846 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கொரோனா பரவலை குறைக்க சென்னை மாநகராட்சியில் அதிக பாதிப்புள்ள பகுதிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது அதிக பாதிப்புள்ள பகுதிகளில் தினமும் களஆய்வு செய்யப்படுகின்றது என்றும் களப்பணியாளர் ஆய்வு மூலம் தினமும் நாற்பது நபர்கள் பயன்பெறுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
திருநங்கைகளின் களப்பணி ஏற்படுத்தியுள்ள மாற்றம் குறித்து சென்னை மாநகராட்சியின் திட்ட ஆலோசகர் உமா ரவிக்குமாரிடம் கேட்டோம்.

''பத்து ஆண்டுகளாக எச்ஐவி எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுகாதார விழிப்புணர்வு நடத்திய திருநங்கை அமைப்பினர் மாநகராட்சி ஊழியர்களோடு இணைந்து வேலை செய்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு தெருக்களையும் ஆய்வு செய்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில் மக்கள் கூட்டமாக சேர்வதை தவிர்க்க விழிப்புணர்வு செய்கின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்களின் உடல்நலன் குறித்து விசாரிப்பது, தேவையானவர்களுக்கு ஆலோசனை வழங்குவது என தினமும் திருநங்கைகள் பொது மக்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். ரேஷன் பொருட்கள் பெற உதவுகிறார்கள். ஒவ்வொரு வீட்டில் இருப்பவர்களிடம் தொடர்ந்து ஒரு மாத காலம் சந்திப்பதால், பொது மக்கள் இவர்களிடம் நன்றாக பழகுகின்றனர். மதிப்புடன் நடத்துகின்றனர். நட்புறவு மேம்பட்டுள்ளது என்பதால் உண்மையான களநிலவரங்களை அறியமுடிகிறது,'' என்கிறார் உமா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












