You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரேவதி: "காவல்துறையை சேர்ந்த யாரும் எங்களிடம் பேசவில்லை" - கணவர் சந்தோஷம்
காவல்துறையிலிருந்து யாரும் தங்களிடம் பேசவில்லை என்பது வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ளார் தலைமைக் காவலர் ரேவதியின் கணவர் சந்தோஷம்.
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் மாஜிஸ்திரேட் விசாரணையில் சாட்சியம் அளித்தவர் தலைமைக் காவலர் ரேவதி
கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசனிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் இருந்த தகவல்கள் வெளியாகத் தொடங்கியதும், அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தன.
இன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், நீதிபதிகள், தலைமைக்காவலர் ரேவதி மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். தற்போது ரேவதி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ரேவதி அளித்த சாட்சியம் தொடர்பாக விளக்கம் கேட்க பிபிசி தமிழ் அவரை அனுகியபோது அவரின் கணவர் சந்தோஷம் சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
யார் இந்த ரேவதி?
"2005ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார் ரேவதி. படிக்கும் காலத்திலிருந்து காவல்துறை அதிகாரி ஆகவேண்டும் என்ற விருப்பத்துடன் வளர்ந்த ரேவதி, தனது சொந்த முயற்சியில் இந்த பணியில் இணைந்துள்ளார். பல முயற்சிகளுக்குப் பிறகு, மூன்றாவது முறையே அவருக்கு இந்த வேலை கிடைத்துள்ளது. 2009ஆம் ஆண்டு முதல் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார்," என்றார் சந்தோஷம்.
சம்பவத்தைத்தொடர்ந்து ரேவதி மிகவும் வருத்தத்தில் உள்ளார் என்று பிபிசியிடம் தெரிவித்த அவர், அன்று இரவு ரேவதி தன்னுடன் தொலைப்பேசியில் பேசியவற்றை பகிர்ந்து கொண்டார்.
"அவருக்கு எப்போது இரவுப்பணி இருந்தாலும், நான் அடிக்கடி போன் செய்வேன். சம்பவ நாளன்று அவர் எனக்கு போன் செய்து, யாரையோ காவல் நிலையத்தில் வைத்து அடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினார். ஆனால், அவர்கள் யார் என ரேவதிக்கு தெரியவில்லை."
"பிறகு அவருக்கு விவரம் தெரிந்துள்ளது. அடுத்த நாள் காலை அவர் பணியை தொடர வேண்டி இருந்தது. அடி வாங்கியவர்கள் உடலில் நிறைய ரத்தம் என்றும், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்கள் என்று என்னிடம் கூறினார்." என்கிறார் சந்தோஷம்.
"ரேவதிக்கு யாருமே ஆதரவாக பேசவில்லை"
நாட்டில் அனைவரும் அவரை பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறும் சந்தோஷம், "இவ்வாறான ஒரு சம்பவம் வேறு எங்குமே நடக்கக்கூடாது என்று நினைக்கிறேன்," என்கிறார்.
"இன்று வரை காவல்துறையிலிருந்து யாருமே போன் செய்யவில்லை. யாருமே போன்செய்து நாங்கள் இருக்கிறோம். கவலை கொள்ளாதே என்று கூறவில்லை என்பது எங்களுக்கு வருத்தமாக உள்ளது,"
"வேறு பலரின் அழைப்புகள் வருகிறது. ஆனால், அவரின் துறையிலிருந்து யாருமே அழைக்கவில்லை," என்கிறார் அவர்.
இப்போது, தலைமைக்காவலர் வீட்டில் நீதிமன்ற அறிவுருத்தல்ல்படி காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளார்கள். அவருக்கு ஒரு மாதம் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: