You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாத்தான்குளம்: "ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடலில் கடுமையான காயங்கள் இருந்தன" - நீதிபதிகள்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை - மகன் காவல்துறையினரால், கொல்லப்பட்டதாக சொல்லப்படும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், தென் மண்டல ஐ.ஜி. ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அருண் பாலகோபாலனுக்குப் பதிலாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அருண் பாலகோபாலன், காட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தென் மண்டல ஐ.ஜியாக இருந்த சண்முக ராஜேஸ்வரன் ஜூன் 30ஆம் தேதி ஓய்வுபெறும் நிலையில், அவருக்குப் பதிலாக பொருளாதார குற்றப்பிரிவின் ஐ.ஜியாக இருந்த எஸ். முருகன் தென் மண்டல ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சாத்தான் குளம் தந்தை - மகன் காவல்துறையினரால் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் வழக்கை மத்தியப் புலனாய்வு அமைப்பு விசாரிக்கும்வரை, நெல்லை சரக காவல்துறை விசாரணையைத் தொடர முடியுமா என நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
"ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடலில் கடுமையான காயங்கள் இருந்தன"
தந்தை - மகன் ஆகிய இருவரும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் விவகாரத்தை தற்போது மாநில அரசு மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்திவருகிறது. நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் புகழேந்தி அடங்கிய அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது.
அப்போது, பிரேதப் பரிசோதனை அறிக்கையும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் தங்களுக்கு வந்து சேர்ந்துவிட்டதாகவும் இறந்தவர்கள் உடலில் கடுமையான காயங்கள் இருந்தது இதிலிருந்து தெரிவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தை சி.பி.ஐக்கு மாற்றி மாநில அரசு உத்தரவிட்டிருந்தாலும் அவர்கள் விசாரணையைத் துவங்க சில நாட்கள் ஆகும்; ஆனால், தாங்கள் இந்த வழக்கில் ஒரு விநாடியைக்கூட வீணாக்க விரும்பவில்லை. ஆகவே அதுவரை நெல்லை சரக காவல்துறை இந்த வழக்கை விசாரிக்க முடியுமா எனக் கேள்வியெழுப்பினர்.
இதற்குப் பிறகு இந்த வழக்கு பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதித் துறை நடுவரை அவதூறாகப் பேசிய வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மூவரும் தங்களுக்கென வழக்கறிஞர்களை நியமித்து, தங்கள் தரப்பு வாதத்தை அளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்
சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே ஏபிஜே மொபைல்ஸ் என்ற பெயரில் ஒரு செல்போன் கடையை நடத்திவந்தனர்.
ஜூன் 19 அன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பென்னிக்சுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஜூன் 19ஆம் தேதியன்று பென்னீஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர்.
இதற்குப் பிறகு, பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜை கைது செய்த காவல்துறையினர், 21ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறை பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே "தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது," எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திங்கட்கிழமையன்று (ஜூன் 22) இரவில் பென்னிக்சும் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 23) அதிகாலையில் ஜெயராஜும் உயிரிழந்தனர்.
நீதித்துறை நடுவரை அவதூறாகப் பேசிய காவலர் பணியிடை நீக்கம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை - மகன் காவல்துறையினரால், கொல்லப்பட்டதாக சொல்லப்படும் விவகாரத்தை விசாரணை செய்யவந்த நீதித் துறை நடுவரை அவதூறாகப் பேசிய காவல்துறையின் கூடுதல் கண்காணிப்பாளரும் காவல்துறை கண்காணிப்பாளரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சாத்தான் குளத்தில் தந்தை - மகன் ஆகியோர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை கோவில்பட்டி நீதித் துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை செய்துவருகிறார்.
இந்த விசாரணைக்கு சாத்தான் குளம் காவல்நிலைய அதிகாரிகள் உரிய ஒத்துழைப்ப வழங்கவில்லையென குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அந்தக் காவல் நிலையத்தை உள்துறை கட்டுப்பாட்டிலிருந்து மாற்றி வருவாய்த் துறையின் கீழ் கொண்டுவருவதாக மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணைக்கு காவல்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்காதது குறித்து நீதித் துறை நடுவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு புகார் ஒன்றயும் அனுப்பியிருந்தார். இந்த நிலையில், உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து கிரிமினல் அவமதிப்பு வழக்கு ஒன்றைப் பதிவுசெய்ய மதுரை கிளையின் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்ட உத்தரவில், "கோவில்பட்டி நீதித்துறை நடுவர் அறிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது சாத்தான்குளம் காவல் நிலையம் தூத்துக்குடி கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் டி. குமார், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சி. பிரதாபன் ஆகியோரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
இவர்கள் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காததுடன் அது தொடர்பான ஆவணங்களையும் வழங்கவில்லை.
நீதித்துறை நடுவர் விசாரித்ததை காவலர் ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். சாத்தான்குளம் காவலர் மகாராஜன் என்பவர் நீதித்துறை நடுவரிடம் மரியாதை குறைவான ஏளனமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார் என்பது தெளிவாகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மூவரையும் பணியிடமாற்றம் செய்தால் மட்டுமே விசாரணை எவ்வித இடையூறுமின்றி, நியாயமான முறையில் நடைபெறும். ஆகவே அவர்களை இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். நீதிபதியை தரக்குறைவாக பேசிய காவலர் மகாராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டதால், வருவாய் துறை சார்பில் வட்டாச்சியர் செந்தூர் ராஜ் அங்கு நியமனமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக காவல்துறை அதிகாரிகள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு வந்துள்ளனர். இந்த வழக்கு பிரகாஷ் - புகழேந்தி அமர்வு முன்பாக விசராணைக்கு வருகிறது.
பொதுமக்களிடம் சரியாக நடந்துகொள்ளாத 80 காவலர்கள் பணி விலக்கல்
இதனிடையே பொது மக்களிடம் முறையாக நடந்துகொள்ளாத, தங்கள் மண்டலத்தில் உள்ள காவல் துறையினர் 80 பேர் பணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாவும், மக்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் அவர்கள் மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் திருச்சி சரக டி.ஐ.ஜி தெரிவித்துள்ளார்.
இந்த 80 காவலர்களின் கடந்தகால நடத்தைகள் சரியில்லாததால் அவர்கள் 'காகினிட்டிவ் பிஹேவோரில் தெரப்பி'-ஐ (Cognitive Behavioural Therapy) உள்ளடக்கிய இந்தப் பயிற்சிக்கு உள்ளாக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
- இந்தியாவில் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் தளர்வுகள் என்னென்ன?
- சீனாவில் பன்றிகளிடையே பரவும் காய்ச்சல்: பெருந்தொற்றாக மாறும் ஆபத்து
- 'போலீசார் ஓய்வில்லாமல் உழைக்கிறார்கள்' - ஒரு நாள் சம்பளத்தை திருப்பி தரும் தமிழக அரசு
- சாத்தான்குளம்: டி.எஸ்.பி., கூடுதல் எஸ்.பி. மீது குற்றவியல் அவமதிப்பு வழக்கு, இடமாற்றம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: