பாலியல் வாழ்க்கை: 'பைசெக்சுவல்' பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் சவால்கள்

பட மூலாதாரம், Facebook
- எழுதியவர், சிந்துவாசினி
- பதவி, பிபிசி இந்தி
"ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோருக்கு இடையே நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேட்பது, கேக் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றுக்கு இடையே எதை தேர்வு செய்வீர்கள் என்று கேட்பதைப் போன்றது உண்பதற்கு சுவைமிகுந்த பல பொருட்கள் இருக்கும் போது அனைத்தையும் உண்ண முயற்சிக்காமல் இருப்பது முட்டாள்தனம்," என்று ஐஸ்லாந்தின் புகழ்பெற்ற பாப் பாடகர் ப்ஜோர்க் ஒருமுறை சொன்னார்.அவர் சொல்வது அர்த்தமற்றது என்று பலருக்கும் தோன்றலாம்.
ஆனால் இருபால் இனத்தவர்களுடனும் உடலுறவு கொள்வது குறித்து அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலினத்தவர்கள் மீதும் உடல் ரீதியான ஈர்ப்பு கொண்டுள்ளவர்கள் பை செக்சுவல் (bisexual) என்று அழைக்கப்படுகிறார்கள்.
LGBT சமூகத்தில் B என்பது bisexual என்பதையே குறிக்கிறது.
எல்.ஜி.பி.டி.ஐ.க்யூ (LGBTIQ) சமூகத்தினர் ஜூன் மாதத்தை 'ப்ரைடு மன்த்' என்று கொண்டாடுகிறார்கள்.
இந்தக் கால கட்டத்தில் அவர்களது போராட்டங்கள், விருப்பங்கள், சாதனைகள் ஆகியவை குறித்து பரவலாக பேசவும் எழுதவும் வெளிப்படுத்தவும் விவாதிக்கவும் செய்கிறார்கள்.
டெல்லியில் வசிக்கும் 26 வயதாகும் கரிமா தனக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவர் மீதும் ஈர்ப்பு உள்ளது என்று கூறுகிறார்.
"ஒரு பெண்ணை நான் முதல் முதலில் முத்தமிட்ட பொழுது, ஓர் ஆண் முத்தமிடும்போது எவ்வாறு உணர்ந்தேனோ அதைப் போலவே உணர்ந்தேன். அது மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் மக்கள் அதை ஏன் இயற்கைக்கு முரணானது என்று கூறுகிறார்கள் என்று தெரியவில்லை," என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
தன்னுடைய பாலியல் ரீதியான ஈர்ப்பு குறித்து எந்தவிதமான தயக்கமும் இன்றி கரிமா வெளிப்படையாகப் பேசுகிறார்.
ஆனால் அதை பிறருக்கு புரிய வைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது என்கிறார்.

பட மூலாதாரம், Facebook
"நமது சமூகத்தைப் பொறுத்தவரை பெண்கள் தங்களது பாலியல் ஈர்ப்பை வெளிப்படுத்துவது மிகவும் கடினமானதாக இருக்கிறது. உங்களுக்கு பாலியல் விருப்பங்கள் எதுவுமே இல்லை என்பது போல பெண்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்த சமூகம் எதிர்பார்க்கிறது .
இத்தகைய ஒரு சூழலில் நீங்கள் ஆண்கள் பெண்கள் ஆகிய இரு பாலினத்தவர்கள் மீதும் ஈர்ப்பு கொண்டுள்ளீர்கள் என்று கூறினால் அதை இந்த சமூகம் ஏற்று கொள்ளாது."
"நமது சமூகச் சூழலில் பாலின ஈர்ப்பு குறித்து எதுவும் வெளிப்படையாக இருப்பதில்லை திரைப்படங்கள் விளம்பரங்கள் போன்றவற்றில் சித்தரிக்கப்படும் பொழுதுகூட ஓர் ஆணும் ஒரு பெண்ணும் இணைந்து இருப்பதாகவே காட்டப்படுகிறது. அப்படி காட்டப்படும் பொழுது அதுதான் சரியானது என்றும் இயற்கையானது என்றும் நாம் கருத தொடங்கி விடுகிறோம்," என்கிறார் அவர்.
கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போது பாலின சிறுபான்மையினர் சமூகம் குறித்தும் அறிந்து கொண்டார் கரிமா.இரு பாலினத்தவர்கள் மீதும் உடல் ரீதியான ஈர்ப்பு கொள்வது சாதாரணமானதுதான் என்பதை அவர் புரிந்து கொண்டார்.
அந்த காலகட்டத்தில் அவருடைய ஆண் நண்பருடன் இருந்த உறவு அவருக்கு முறிந்தது.அந்த சமயத்தில் பெண் தோழி ஒருவருடன் உறவாடத் தொடங்கினார். ஆனால் பைசெக்சுவல் எனும் அடையாளத்துடன் வெளிப்படையாக இருப்பது ஒரு பெண்ணான அவருக்கு அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை.
பொதுச் சமூகத்தில் மட்டுமல்ல பாலின சிறுபான்மை சமூகமான எல்ஜிபிடி குழுவினரிடையே பைசெக்ஸுவல் இயல்புடைய நபர்கள் மீது தவறான கண்ணோட்டங்கள் இருப்பதாகவும் அதன் காரணமாக பாலின சிறுபான்மையினர் சமூகத்திலேயே தாங்கள் பாகுபாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
இருபாலின ஈர்ப்பு உடைய பைசெக்சுவல் நபர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலினர் பாலினத்தவர் இடமும் உறவு கொள்வார்கள் என்பதால் தங்கள் தேவைக்கேற்ப ஆளை மாற்றிக் கொள்பவர்கள் என்றும் அவர்கள் ஒருவருடனான உறவில் நம்பிக்கைக்குரியவராக இருக்கமாட்டார் என்றும் பாலின சிறுபான்மை சமூகத்தினர் உள்ளேயே பாகுபாடு காட்டப்ப்படுவதாக கூறுகிறார் கரிமா.

பட மூலாதாரம், Getty Images
"ஒருபால் உறவுக்காரர் என அடையாளப்படுத்திக் கொள்ளும் பெண்கள் கூட பை செக்சுவல் பெண்களுடன் காதல் கொள்ள விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் திருமணம் என்று வரும் பொழுது இந்த சமூகம் விரும்புவதைப் போல ஓர் ஆணை அவர்கள் திருமணம் செய்து கொண்டு போவார்கள் என்று நம்புகிறார்கள்."
"பைசெக்சுவல் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஆண்களுக்கும் இதே நிலைமைதான் என்று அவர் கூறுகிறார்.
இதுமட்டுமல்லாமல் பை செக்சுவல் இயல்புடையவர்கள் பாலியல் ரீதியான பேராசைக்காரர்கள் என்றும் அடையாளப் படுத்தப் படுகிறார்கள். அவர்கள் ஒருவருடன் மட்டுமே தொடர்ந்து உறவில் இருக்கமாட்டார்கள் என்று கூறுகிறார்கள், என்றும் கூறுகிறார் அவர்.
நான் ஒரு பைசா செக்சுவல் தன்மை உடையவள் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொள்வதால் என்னை பற்றி நிறைய முன் முடிவுகளை எடுக்கிறார்கள். சமூக ஊடகங்களில் ஆண்கள் எனக்கு தவறான செய்திகளை அனுப்புகிறார்கள். நான் என்னுடைய பாலின ஈர்ப்பு குறித்து வெளிப்படையாக பேசுவதால் நான் யாருடனும் உடலுறவு கொள்வேன் என்று அவர்கள் கருதுகிறார்கள். என்னுடைய சம்மதம் குறித்தெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை என்கிறார் கரிமா.
திரைப்படத் துறையைச் சேர்ந்தவரும் பாலின சிறுபான்மையினர் உரிமை செயற்பாட்டாளருமான 32 வயதாகும் சோனல் ஜியானி, "எல்ஜிபிடி சமூகக் குழுவுக்கு உள்ளேயே தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒருவர் நான் ஒரு பாலுறவு ஆண் அல்லது ஒருபாலுறவு பெண் என இரண்டில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஓர் அழுத்தம் இருக்கிறது," என்கிறார்.
பைசெக்சுவல் என்று தங்களை கருதுபவர்கள் அதனால்தான் தங்களை கே (gay) அல்லது லெஸ்பியன் (lesbian) என்று வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறார் சோனல்.
எல்ஜிபிடி சமூகமும் இந்த சமூகத்தின் ஓர் அங்கம்தான்; அங்கும் பாகுபாடு என்பது இருக்கிறது என்கிறார் தன்னை ஓர் பை செக்சுவல் என்று அறிவித்துக் கொண்டுள்ள சோனல்.

பட மூலாதாரம், AFP
"ஒருபால் உறவு குறித்து படங்கள் வெளியாகின்றன. இணையதளங்களில் எழுதப்படுகின்றன. ஆனால் பை செக்சுவல் மனிதர்கள் குறித்து ஊடகத்திலும் கலாசார, கலை சார்ந்த படைப்புகளிலும் பெரிதும் விவாதிக்கப்படுவது இல்லை என்கிறார் சோனல்.
"நான் இருபால் உறவுக்காரர் என்று வெளிப்படையாக அறிவித்தாலும் இன்னும் சில செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் என்னை பெண் ஒருபால் உறவுக்காரர் என்று அழைக்கிறார்கள். ஓர் ஆணுடன் இருக்கும்போது நான் எதிர்பாலின ஈர்ப்புடையவராக கருதப்படுகிறேன். ஒரு பெண்ணுடன் இருக்கும் பொழுது நான் தன்பாலின ஈர்ப்பு உடையவராக கருதப்படுகிறேன். இத்தகைய சூழலில் என்னுடைய இரு பாலின ஈர்ப்பு என்பது காணாமல் போய்விடுகிறது," என்கிறார் அவர்.
இது மட்டுமில்லாமல் இருபால் ஈர்ப்பும் இருப்பதாக அறிவித்துக் கொள்ளும் பெண்கள் ஒழுக்கக்கேடானவர்களாக பார்க்கப்படுகிறார்கள். அந்த சிந்தனை பெண்களின் பாதுகாப்புக்கும் ஆபத்தாக முடிகிறது.
அதனால்தான் பெண்கள் அவ்வாறு தங்களை வெளிப்படையாக அறிவித்துக் கொள்ளத் தயங்குகிறார்கள் என்கிறார் அவர்.பாலின சிறுபான்மையினருக்கான செயல்பாட்டாளர் தர்மேஷ் சௌபே இன்னும் ஒரு கருத்தை முன் வைக்கிறார்.
"இருபால் உறவுக்காரர்களாக இருக்கும் பெண்கள் எதிர்பாலின ஈர்ப்பு உடையவர்கள்தான் அவர்கள் பாலியல் சாகசத்துக்காக தன்பாலினத்தவர்களுடன் உறவு கொள்கிறார்கள் என்று கருதப்படுகிறது. அதே சமயம் இரு பாலின ஈர்ப்பு கொண்ட ஆண்கள் ஒருபால் உறவுக்காரர்களின் பார்க்கப்படுகிறார்கள்; அதை மறைப்பதற்காகவே அவர்கள் ஆண்கள் பெண்கள் ஆகிய இருவரிடமும் பாலியல் ஈர்ப்பு கொண்டுள்ளதாக தெரிவித்துக் கொள்கிறார்கள் என்ற கருத்து நிலவுகிறது," என்கிறார்.
ஓர் ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் பாலியல் ஈர்ப்புகளுக்கு மரியாதை கிடைப்பதில்லை ஆண்களின் ஆசையை மட்டுமே அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்கிறார் அவர்.
இரு பாலின ஈர்ப்பு உடைய பெண்கள் தாங்கள் யாராக இருக்கிறோமோ அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்கள் .
ஒருபால் உறவை குற்றமாக்கிய இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377-ஐ செப்டம்பர் 2018ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் நீக்கிய போது வாசித்த தீர்ப்பில் அப்போதைய இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஜெர்மானிய எழுத்தாளர் ஜோஹான் வோல்ஃப்கேங்-ஐ மேற்கோள் காட்டினார்.
"நான் யாரோ அதுதான் நான்; நான் எப்படி இருக்கிறேனோ, அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்."
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












