ஊரடங்கு, கொரோனா வைரஸ், வேலை இழப்பு: சென்னையைவிட்டு கொத்து கொத்தாக வெளியேறிய மக்கள்

சென்னையில் அதிகரித்துவரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, 19ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக சென்னையைவிட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் பாதிக்கப்பட்ட கொரோனோ நோயாளிகளில் சென்னையில்தான் பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகள் இருக்கின்றனர்.

ஜூன்18ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,334. இதில் சென்னையில் மட்டும் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 37,070. அதாவது தமிழ்நாட்டில் உள்ள கொரோனா நோயாளிகளில் சுமார் 70 சதவீதம் பேர் சென்னையில்தான் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமென்றும், ஊரடங்கின் விதிகள் கடுமையாக இருக்குமென்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால், கடந்த சில நாட்களாக சென்னையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜூன் 18ஆம் தேதியன்று சென்னையைவிட்டு பெரும் எண்ணிக்கையில் சொந்த வாகனங்களில் மக்கள் வெளியேறியதால், வண்டலூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலே ஏற்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்புவரை, சென்னையிலிருந்து வெளியேற தினமும் 5 ஆயிரம் இ - பாஸ்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஐயாயிரம் பாஸ்களுக்கு விண்ணப்பித்தாலும் சென்னையிலிருந்து வருபவர்களை ஏற்றுக்கொள்ளும் மாவட்டங்கள் பெரும்பாலான பாஸ் கோரிக்கைகளை நிராகரிப்பதால், மூன்றில் ஒரு பங்கினருக்கே பாஸ்கள் வழங்கப்பட்டுவந்தன. அதாவது தினமும் 1,500லிருந்து 1,800 பேருக்கு பாஸ்கள் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த திங்கட்கிழமையன்று மீண்டும் ஊரடங்கு என அறிவிக்கப்பட்டவுடன், ஏற்கனவே பாஸ்களைப் பெற்று பயணம் செய்யாமல் இருந்தவர்கள் உடனடியாக சென்னையை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். குறிப்பாக தென்மாவட்டங்களை நோக்கி செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. இதையடுத்து காவல்துறையினர் சென்னையைவிட்டு வெளியேறுவதற்கான முக்கியத் தடமான ஜிஎஸ்டி சாலையில் சோதனைகளை அதிகப்படுத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் சுங்கச் சாவடியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் சோதனைகளில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையை விட்டு வெளியேறுவதற்கான இ - பாஸ் இல்லாதவர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

ஆனால், கடந்த சில நாட்களில் முன்னெப்போதும் இல்லாத ஒரு புதிய போக்கை சென்னையில் பார்க்க முடிந்தது. பலர், இரு சக்கர வாகனங்களில் ஏற்ற முடிந்த பொருட்களை ஏற்றிக்கொண்டு, மனைவி, குழந்தைகளுடன் சென்னையைவிட்டு வெளியேறி வருகின்றனர். இவர்களில் பலரிடம் இ- பாஸ் இல்லை.

தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சொந்தக் கார்கள் மூலமும் விமானம் மூலமும் சென்னையைவிட்டு வெளியேறுகிறார்கள் என்றால், சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இரு சக்கர வாகனங்களின் மூலமே நகரைவிட்டு வெளியேற ஆரம்பித்தனர்.

சென்னையை விட்டு வெளியேறியவர்கள் எந்தெந்த மாவட்டத்திற்கு, எவ்வளவு எண்ணிக்கையில் சென்றார்கள் என்ற கணக்கு ஒட்டுமொத்தமாக யாரிடமும் கிடையாது. ஆனால், ஜூன் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை 2092 பேர் இ - பாஸ்களைப் பெற்று சென்னையிலிருந்து தங்கள் மாவட்டத்திற்கு வந்திருப்பதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தினமும் சென்னையிலிருந்து 1,500 முதல் 1,800 பாஸ்கள் வழங்கப்படுவதாகக் கொண்டால், கடந்த 15 நாட்களில் 23,000 முதல் 28,000 பேர் பாஸ்கள் வரை விநியோகிக்கப்பட்டிருக்கலாம். சென்னையை விட்டு வெளியேறும் இடத்தில் காவல்துறையின் சோதனைகள் கடந்த சில நாட்களாகத்தான் அதிகரித்திருக்கிறது. அதற்கு முன்பாக இ- பாஸ் இல்லாமல் சென்னையைவிட்டு வெளியேறி, கிராமப் புறச் சாலைகளின் மூலம் மாவட்டங்களுள் நுழைந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதும் யாருக்கும் தெரியாது.

இப்படி வெளியேறுவதற்கு வெறும் நோய் குறித்த பயம் மட்டுமே காரணமல்ல. ஊரடங்கின் காரணமாக வேலை இல்லாமல் போனது, ஊதியம் குறைந்தது, ஊரடங்கின்போது உணவுப் பிரச்சனை ஏற்படக்கூடுமோ என்ற அச்சம் போன்றவற்றால், பலரும் தத்தம் சொந்த ஊரை நோக்கி வெளியேறியிருக்கின்றனர். இத்தோடு, நோய்த் தொற்று குறித்த அச்சம், நோய் ஏற்பட்டால் சென்னை மருத்துவமனைகளில் இடம் கிடைக்குமா என்ற பயம் ஆகியவையும் சென்னையை விட்டு வெளியேறக் காரணமாக இருக்கின்றன.

ஜூன் 19ஆம் தேதி காலையில்தான் ஊரடங்கு துவங்குகிறது என்றாலும்கூட, 18ஆம் தேதி மாலையிலேயே சென்னையின் பெரும்பாலான வீதிகள் வெறிச்சோடின.

"இரண்டு சூழல்களில் இதுபோன்ற இடப்பெயர்வு நடக்கும். ஒன்று போர் நடக்கும் சூழல். மற்றொன்று மனிதர்களால் ஏற்படும் விபத்து அல்லது நோய்ப் பரவல். இப்போது இந்த இரண்டாவது காரணத்தால் நடக்கிறது. போர் நடக்கும் காலகட்டத்தில் முதலில் மேட்டுக்குடியினர், வசதியானவர்கள் நகரைவிட்டு வெளியேறுவார்கள். ஆனால், இம்மாதிரி பேரிடர் சூழலில் யாருக்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கிறதோ அவர்கள் எல்லோரும் வெளியேறிவிடுவார்கள்" என்கிறார் லயோலா கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் ஜி. கிளாட்ஸன் சேவியர்.

மூட்டை முடிச்சோடு கிளம்பும் மக்கள் | BBC Ground Report from Chennai border | Corona Virus

கொள்ளை நோய் பரவல் போன்ற தொடர்நிலை பேரிடர்களில் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு மக்கள் நகர்வது இயல்பான விஷயம். நகரங்களில்தான் இது அடிக்கடி நடக்கும். எபோலா நோய் பரவியபோது, ஆப்பிரிக்காவில் நகரங்களைவிட்டு கிராமங்களுக்கு மக்கள் இடம்பெயர்ந்தனர். சார்ஸ் பரவியபோதும் சீனாவில் இதுதான் நடந்தது என்கிறார் கிளாட்ஸன் சேவியர்.

"சென்னையில் ஏன் இது நடக்கிறது என்று பார்ப்பது மிக முக்கியம். நோயால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற எண்ணத்தில் பலர் வெளியேறலாம். அல்லது வேலையில்லாமல், தங்களிடம் இருந்த பணம் எல்லாம் கரைந்து சொந்த ஊருக்குச் செல்லலாம். சென்னையில் இரண்டும் நடக்கிறது என்றாலும் இரண்டாவதுதான் அதிகம் நடக்கிறது. வேறு வழியே இல்லாவிட்டால்தான் இப்படி மக்கள் வெளியேறுவார்கள். இது மிகவும் கவலைக்கொள்ளத்தக்க விஷயம்" என்கிறார் கிளாட்ஸன்.

வியாழக்கிழமையன்று, இ - பாஸ் இல்லாமல் வெளியேற முயன்ற பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

இப்படி வெளியேறியவர்கள் எப்போது சென்னை திரும்புவார்கள், அல்லது தத்தம் ஊர்களிலேயே இருந்துவிடுவார்களா?

"இது உடனடியாக சரியாகக் கூடிய விஷயம் இல்லை. ஆகவே மிக மெதுவாகத்தான் திரும்புவார்கள். எல்லாம் சரியாக ஒன்றரை, இரண்டு வருடங்கள் ஆகிவிடும்" என்கிறார் கிளாட்ஸன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: