You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - சீனா எல்லை தகராறு: கல்வான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்களை சிறைப்பிடித்ததா சீன ராணுவம்?
கடந்த திங்கட்கிழமை அன்று இந்தியா - சீனா இடையே நடத்த மோதலுக்கு பிறகு, 10 இந்திய ராணுவ வீரர்களை சீனா விடுவித்துள்ளது என்று இந்திய அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன..
எனினும், இந்தியா மற்றும் சீன ராணுவத்தினரிடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலின்போது இந்திய ராணுவத்தினர் யாரையும் தாங்கள் சிறைபிடிக்கவில்லை என்று சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
வாராந்திர செய்தியாளர் சந்திப்பின்போது சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன் இவ்வாறு தெரிவித்தார் என்று சீன அரசு தொலைக்காட்சியின் செய்தி கூறுகிறது.
இந்திய ராணுவம் கூறுவது என்ன?
லெஃப்டினென்ட் கர்னல் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் உட்பட 10 பேரை சீனா விடுவித்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தகவல் அளிக்கின்றனர் என தி இந்து நாளிதழ் செய்தி குறிப்பிடுகிறது.
இந்தியா-சீனா எல்லையில் ராணுவ வீரர்கள் காணாமல் போனதாகவும் சீனாவிடம் பிடிப்பட்டுள்ளதாகவும் இதுவரை இந்திய அரசாங்கம் எந்த தகவலும் அளிக்கவில்லை. இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலுக்கும் இந்திய அரசாங்கம் இதுவரை எதிர்வினையாற்றவில்லை.
கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் ஏற்கனவே 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் இரு நாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது.
நடந்த மோதலில் சீனர்கள் யாரும் உயிரிழந்ததாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. குறைந்தது 76 இந்திய ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். மோதல் தூண்டப்பட்டதாக இரு நாடுகள் மாறி மாறி குற்றம்சாட்டி கொள்கின்றன.
இந்திய ராணுவ வீரர்களை விடுவித்த நிகழ்வு, இரு நாடுகளுக்கு இடையே கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முக்கிய புள்ளியாக அமைந்தது என இந்தியா டுடேவின் மூத்த ஆசிரியர் சிவ் அரூர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தால், இரு நாடு எல்லையில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை வைத்து மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
புதன்கிழமை அன்று இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் தொலைபேசி மூலம் கலந்துரையாடிதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டார். இந்த தொலைபேசி கலந்துரையாடலில் ஒட்டுமொத்த நிலைமையை பொறுப்பான முறையில் கையாள வேண்டும் என இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது என்றும் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
ஏன் ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை ?
எல்லையில் மோதல் நிலவியபோது இரு நாடுகளும் ஆயுதம் ஏந்தாமல் மோதலில் ஈடுப்பட்டது இதுவே முதல் முறையாகும். கடந்த 1975ஆம் ஆண்டு வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் புறநகர் பகுதியில் 4 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலை விபத்து என்று முன்னாள் அதிகாரிகள் விவரித்தனர். அதன் பிறகு, எல்லைப் பகுதியில் எந்த தாக்குதல் சம்பவங்களும் நடைபெறவில்லை.
1996ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையில் கையெழுத்தான ஒப்பந்ததின்படி, ''இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூடு நடத்த மாட்டார்கள் ... குண்டுவெடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளகூடாது... எல்லை கட்டுப்பாட்டு கோட்டிற்குள் உள்ள இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் எந்த வெடிகுண்டு தாக்குதல்களும் மேற்கொள்ளக்கூடாது'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
புகைப்படம் வெளியான பிறகு இந்திய ராணுவ வீரர்கள் விடுவிப்பு
சீனத் தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இந்திய அரசு கூறியது. ஆனால், சீனத் தரப்பில் இருந்து அவர்களுக்கு ஏற்பட்ட சேதாரம் குறித்து அதிகாரபூர்வத் தகவல் ஏதும் இல்லை. இந்த சம்பவத்தை அடுத்து இரு தரப்பும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டுகின்றன. தங்கள் பகுதியில் எதிர் தரப்பினர் ஊடுருவியதாக இரு நாடுகளும் புகார் கூறுகின்றன.
இந்நிலையில் இந்த தாக்குதலில் சீனர்கள் பயன்படுத்திய ஆயுதங்களின் படங்கள் என்று கூறி, இந்திய சீன எல்லையில் பணியாற்றும் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு படத்தை பிபிசிக்கு அனுப்பியிருந்தார். அந்தப் படம்தான் இங்கே பகிரப்படுகிறது.
இரும்புக் கம்பியில் ஆணி பொருத்திய ஆயுதங்களைக் காட்டும் இந்தப் படத்தை இந்தியாவைச் சேர்ந்த ராணுவ விவகார வல்லுநர் அஜய் சுக்லா டிவிட்டரில் முதல் முதலில் பகிர்ந்திருந்தார்.
இந்தப் படத்தில் இருக்கும் ஆயுதங்களை சம்பவ இடத்தில் இருந்து இந்திய சிப்பாய்கள் கைப்பற்றியதாகவும், இவற்றைக் கொண்டே ரோந்து சென்ற இந்தியப் படையினரை சீனப் படையினர் தாக்கியதாகவும், 20 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், இது காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிக்கவேண்டும். இது பொறுக்கினத்தனம், சிப்பாய்த்தனம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், குறிப்பிட்ட சம்பவ நேரத்தில் ரோந்து சென்ற இந்தியப் படையினரிடம் ஆயுதம் இருந்ததாகவும், பழைய ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்பது நீண்டகால நடைமுறை என்பதால் அவற்றைப் பயன்படுத்தவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டிவிட்டரில் தெரிவித்திருந்தார். மேலும் எல்லையில் உள்ள படையினர் எப்போதும் ஆயுதங்கள் வைத்திருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மூட்டை முடிச்சோடு கிளம்பும் மக்கள் | BBC Ground Report from Chennai border | Corona Virus
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: