ஊர் பெயர்கள் தமிழில் உச்சரிப்பு - தமிழ் மொழிக்கு ஏற்ப ஆங்கிலத்தில் ஊர் பெயர்கள் மாற்றம்: தமிழக அரசு ஆணை ரத்து

தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள், இடங்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்பக ஆங்கிலத்தில் ஒலிக்கும் வகையில் திருத்தி வெளியிடப்பட்ட அரசாணை திரும்பப் பெறப்படுவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள், இடங்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்புப் போலவே ஆங்கிலத்திலும் அமையும் வகையில், பெயர்களைத் திருத்தி அரசாணை ஒன்றை ஜூன் பத்தாம் தேதி தமிழக அரசு வெளியிட்டது.

அதன்படி, சென்னை, கடலூர், சிவகங்கை, திருவள்ளூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி, பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், விருதுநகர், கரூர், சேலம், தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1018 ஊர்களின் ஆங்கிலப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே மாற்றப்பட்டதாக அந்த அரசாணை தெரிவித்தது.

குறிப்பாக, கோயம்புத்தூரின் ஆங்கில எழுத்துக் கூட்டல் Coimbatore ஆக இருந்தது, Koyampuththoor என மாற்றப்பட்டிருந்தது. Vellore என்பது Veeloor என மாற்றப்பட்டிருந்தது. ஆனால், இந்த பெயர் மாற்றம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், தற்போது அந்த அரசாணை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"தமிழில் இருந்து ஆங்கிலத்தில் ஒலிமாற்றம் செய்வது குறித்த நிபுணர்களின் கருத்துகளை ஆராய்ந்து வருகிறோம். இரண்டு, மூன்று நாட்களில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம். தமிழ்ப் பெயர்களுக்கான ஆங்கில பெயர்களை தொகுத்தளித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டுவிட்டது. எல்லோருடைய கருத்துகளையும் பெற்று புதிய அரசாணை வெளியிடப்படும்." என தனது ட்விட்டர் செய்தியில் அமைச்சர் கே. பாண்டியராஜன் குறிப்பிட்டுள்ளார்.

2018-19 ஆண்டில் தமிழ் வளர்ச்சி துறைக்கான மானிய கோரிக்கையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா கே. பாண்டியராஜன், "தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்புப் போன்றே ஆங்கிலத்தில் அமையும் வகையில் மாற்றம் செய்ய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு செயற்படுத்தப்படும். இதற்கென 5 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்படும்" என்று அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரைகள் பெறப்பட்டு, ஆலோசனைக்குழுவின் பரிந்துரைப்படி ஊர்களின் ஆங்கில எழுத்துக்கூட்டல் மாற்றி அறிவிக்கப்பட்டதாக, ஜூன் 10ஆம் தேதி அரசாணை தெரிவித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: