You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Coimbatore இனிமேல் Koyampuththoor: தமிழில் ஊர் பெயர்கள் மாற்றப்பட்டதில் என்ன நன்மை?
- எழுதியவர், மு. ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் தமிழ் உச்சரிப்பின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதற்கு தமிழகத்தில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை சமூக ஊடகங்களில் பலர் ஆதரித்தும் எதிர்த்தும் விமர்சித்தும் வருகின்றனர். குறிப்பாக #Koyampuththoor என்ற ஹேஷ்டேக்கை கோவை மக்கள் பெயர் மாற்றத்தை விமர்சித்து கருத்து தெரிவிக்க பிரபலமாக்கி வருகின்றனர்.
2018-19 ஆண்டில் தமிழ் வளர்ச்சி துறைக்கான மானிய கோரிக்கையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா கே. பாண்டியராஜன், "தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்புப் போன்றே ஆங்கிலத்தில் அமையும் வகையில் மாற்றம் செய்ய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு செயற்படுத்தப்படும். இதற்கென 5 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்படும்" என்று அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரைகள் பெறப்பட்டு, ஆலோசனைக்குழுவின் பரிந்துரைப்படி ஊர்களின் ஆங்கில எழுத்துக்கூட்டல் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், சிவகங்கை, திருவள்ளூர், புதுக்கோட்டை, கிருட்டினகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி, பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், விருதுநகர், கரூர், சேலம், தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1018 ஊர்களின் ஆங்கிலப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே மாற்றப்பட்டுள்ளன என்று தமிழக அரசு, நேற்று (ஜூன் 10) அரசாணை வெளியிட்டது.
குறிப்பாக, கோயம்புத்தூரின் ஆங்கில எழுத்துக் கூட்டல் Coimbatore ஆக இருந்தது, தற்போது Koyampuththoor என மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், Tuticorin என்று குறிப்பிடப்பட்டு வந்த தூத்துக்குடி, Thooththukkudi என மாற்றப்பட்டுள்ளது.
'ஊர் பெயர்கள் மாற்றம் காலப்போக்கில் பரிச்சயமாகிவிடும்'
தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து பிபிசி யிடம் பேசிய பதிப்பாளர் மற்றும் அரசியல் விமர்சகருமான ஆழி செந்தில்நாதன், "பிரிட்டிஷ் காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்களை ஆங்கிலேயர்கள் உச்சரிக்க முடியாததால் அவர்களுக்கு ஏற்ப ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டனர். அவ்வாறு உச்சரிக்கப்படும் ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றும் அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநில அரசுகள் தொடர்ந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன. உலகம் முழுவதுமே தாய்மொழி உச்சரிப்பின் அடிப்படையில் பெயர் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என தெரிவித்தார்.
"பொதுவாகவே, ஒரு பெயர் அல்லது ஊரின் பெயரை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்தில் எழுதுவதில் பல சிக்கல்கள் உள்ளது. அதனை களையும் வகையில் தரநிலைக்கட்டுப்பாடுகளை பயன்படுத்தி தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்தில் அதனை எழுத வேண்டும். இது போன்ற பெயர் மாற்றங்களின் போது ஆரம்பத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுவது இயல்புதான். எடுத்துக்காட்டாக மெட்ராஸ் மாநகரம், 'சென்னை' என பெயர் மாற்றப்பட்ட போது பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தற்போது சென்னை என்ற பெயர்தான் பரிச்சயமாக உள்ளது. இதேபோல் தற்போது மாற்றம் செய்யப்பட்ட ஊர்களின் பெயர்களும் காலப்போக்கில் பரிச்சயமாகிவிடும்" என்கிறார் ஆழி செந்தில்நாதன்.
கொரோனா பரவல் சமயத்தில் வந்த அறிவிப்பு
கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழலில் ஊர் பெயர் மாற்றம் அவசியமற்றது என ஒருசாரார் விமர்சித்தபோதும், தமிழ் மொழியின் அடிப்படையில் பெயர் மாற்றும் நடவடிக்கை எப்போது மேற்கொள்ளப்பட்டாலும் வரவேற்கத்தக்கது என்கிறார் எழுத்தாளர் பாமரன்.
"தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஊர்களின் ஆங்கிலப் பெயர்களில் திருத்தம் செய்வது அவசியமானது. எந்த சூழலில் இதை செய்தாலும் வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், சமஸ்கிருதம் போன்ற பிறமொழி கலப்புகளையும் ஆராய்ந்து தமிழ் ஊர்ப் பெயர்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, திருவரங்கம், திருபெரும்புதூர் ஆகிய ஊர்கள் ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதூர் என எழுதப்படுகின்றன. இதுபோன்று, தமிழ் அர்த்தம் பொதிந்த பல ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, 'பன்னீர்மடை' என்ற ஊர் பன்னிமடை என்றும், 'பூளைமேடு' என்ற பகுதி பீளமேடு என்றும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் திருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என கேட்டுக்கொண்டார்.
பெயர் எழுத்துக் கூட்டல்களை மாற்றினால் என்ன சிக்கல்?
கோவைப் போன்ற தொழில் நகரங்களின் பெயர்கள் மாற்றப்படும் போது பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும் என்கிறார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞரும், எழுத்தாளருமான இரா.முருகவேள்.
"பல நாடுகள் மற்றும் மாநிலங்களோடு கோவை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வர்த்தக தொடர்பில் உள்ளன. இந்த நிலையில் திடீரென நாளை முதல் ஊர் பெயரில் மாற்றம் செய்யப்படுகிறது என அறிவிப்பது ஜனநாயக நடைமுறை என ஏற்றுக்கொள்ள முடியாது. அறிஞர் குழு மற்றும் மக்களின் கருத்துகளை ஆராய்ந்து வெளிப்படைத்தன்மையோடு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். மொழிப் பெருமிதம் அவசியம் என்ற போதும் தொழில் மற்றும் வர்த்தகம் போன்ற காரணிகளையும் கருத்தில் கொண்டு, இது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்," என தெரிவிக்கிறார் முருகவேள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: